|
ஜாதி இல்லையடி பாப்பா என்பது பாரதியார் கூற்று,
ஜாதி இல்லையேல் கல்வி இல்லை என்பது சமுதாயத்தின்
இன்றைய நிலை
|
ஆடும் வரை ஆட்டம் சாகும் வரை சாகசம் அதுதான் இவர்களின் வாழ்க்கை. ஆடும் ஆட்டமும் தலைகீழ் சாகசமும் ஒரு கலை. அதை தெருவோரம் மக்களை நாடி கூத்து கட்டுவதால் அவர்கள் கலைக் கூத்தாடிகள்... இவர்களுக்கு ஆரம்ப காலமென்று குறிப்பிட்டுக் கிடையாது. தெருவோரம் ஆட்டம் ஆடி சாகசங்கள் பல செய்து வேடிக்கை காட்டி வாழ்க்கை நடத்துகின்றனர். மக்கள் அவர்களை வேடிக்கை பார்த்து கைத்தட்டி கொடுக்கும் அன்பளிப்புகள் தான் அவர்கள் சம்பளம்.
வந்தவர்களுக்கும் தெரியாமல் வாழ்பவர்களுக்கும் தெரியாமல் வாழும் அவலநிலை இவர்களுடையது. வரலாறு காலம் முதல் தாங்கள் இப்படிதான் வாழ்ந்து வருவதாகவும் ஆங்கிலேயர் காலத்திலும் தங்கள் முன்னோர்கள் கூத்தாடியதையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அவர்கள் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே அல்லது அதற்கும் முன்னே என்றும் கூறலாம். முதலில் மாயவரத்தில்தான் தங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து குடும்பம் குடும்பமாக கூத்தாடுவதற்கு ஊர் ஊராக சென்றனர். அப்போது அவர்களுக்கு சென்ற ஊரே சொந்த ஊர். இன்பமோ துன்பமோ செத்து மடிந்தாலும் அங்கேயே புதைத்து விட்டு தனது உணவிற்கான பயணத்தை துவங்கினார்கள். இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்தினர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கென்று ஒரு இடம் வேண்டுமென்று நினைத்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். 1984ல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவர்களுக்கான பட்டாமனைகளை வழங்கினார். முன்பெல்லாம் அளவான குழந்தைகள் என்ற சொல்லுக்கே இடமில்லை. வருமானத்திற்காக ஐந்து குழந்தைகள் இருந்தால் வருமானம் பத்து குழந்தை இருந்தால் ராஜா (வருமானம் அதிகம் பெறுவதற்காக). இன்று இந்தநிலை மாறி குடும்ப கட்டுபாட்டுக்கு மதிப்பளிக்கும் வகையில் 2 முதல் 3 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த சமூகத்தினருக்கு இடையே உள்ள முக்கிய பிரச்சனை கல்வி அறிவு பெற்று அனைத்து சமூகத்தினர் போல் மற்ற பணிக்கு செல்வதா அல்லது குலத்தொழிலையே ஏற்று நடத்துவதா என்பதுதான். இதனால் பிள்ளைகளின் படிப்பானது முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
முன்பெல்லாம் கல்வி என்பதே இவர்களுக்கு ஏட்டு சுரக்காயாக இருந்தது. ஆனால் இன்று அவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி அறிவு பெற்று வருகின்றனர். கல்வி பெற்றும் பிரயோஜனம் இல்லாமல் தனிப்பட்ட ஜாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால் மேற்கல்வியை தொடர முடியாமல் தவிக்கின்றனர். ஜாதி இல்லையடி பாப்பா என்பது பாரதியார் கூற்று, ஜாதி இல்லையேல் கல்வி இல்லை என்பது சமுதாயத்தின் இன்றைய நிலை.
அவினாஷ் (சாப்ட்வியூ விஷ¨வல் கம்யூனிகேசன் மாணவர்) |