Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

ரசிப்பு

ஜெ.பிஸ்மி

பாட்டிக்கு சினிமாப் படம்னா ரொம்ப இஷ்டம். உசிருன்னு கூட சொல்லலாம்.
சோறு, தண்ணி இல்லாம வேணும்னா இருந்துடும் சினிமா பாக்காம சேந்தாப்புல ரெண்டு நாளு இருக்காது. இத்தனைக்கும் பாட்டிக்கு கொஞ்ச நஞ்ச வயசு இல்லை. எம்பதுக்கும் மேலதான். தோலு சுருங்கிப்போய், ஒடம்புல நரம்பு தெரியும். கண்ணு ரெண்டும் உள்ளாரப்போயி, பாக்கவே பாவமா இருக்கும். நெனவு தெரிஞ்ச நாளா பொக்க வாய்தான். நடக்குறப்ப பீச்சாங்கையால இடுப்பை தாங்கிக்கிட்டுதான் நடக்கும். ஆனா சினிமாக்குப் போறப்போ கதையே வேற. எங்கிருந்துதான் இம்புட்டு சத்து வரும்னு தெரியாது. பேய் ஓட்டமா ஓடும். நடைதான் ஓடுறாப்புல இருக்கும். அப்ப பாட்டிய பாக்கறவங்க எல்லாம் மூக்குமேல வெரல வெப்பாங்க.

சில பேரு போட்டோச்சுக் கொட்டுவாங்க, கட்டைல போற வயசுல இதுக்கு வந்த ஆசயப்பாருன்னு. பாட்டி காதுல வாங்காது. பேச்சுக் குடுத்தா படத்துக்கு நாழியாயிடும்னு கேட்டும் கேக்காத மாதிரி போயிடும். மாசா மாசம் வூட்டு செலவுக்குப் பணம் குடுக்கறப்ப பாட்டியோட கை செலவுக்கும் அப்பா பணம் குடுப்பாரு. எண்ணி பாத்து சீலையில முடிஞ்சுக்கும். மூணாவது வூட்டுல ஒரு பாட்டி இருக்கு. அது தனக்குனு நயா பைசா செலவு பண்ணாது. எல்லாக் காசும் பேரப்புள்ளக்கித்தான். எங்கப் பாட்டி அஞ்சு பைசா கூட எனக்குக் குடுக்காது.

சிலேட்டுக்குச்சி வாங்கனும்னு சமய சமயத்துக்கு கேப்பேன், இல்லன்னு சொல்லிடும். புதுப்படம் மாத்துறப்ப பிரகன்நாயகி கொட்டாயி வண்டி வரும். மைக்குல பேசிக்கிட்டு நோட்டீஸ் குடுப்பாங்க. மெயின் ரோட்டுல மைக் சத்தம் கேட்டுச்சுன்னா என்னைப் போயி நோட்டீஸ் வாங்கிட்டு வரச்சொல்லும். நான் மாட்டேன்னுடுவேன். அப்பதான் காசு குடுத்து தாஜா பண்ணும். அப்புறமா ஒரே ஓட்டமாப் போயி நோட்டீஸ் வாங்கிட்டு வருவேன். அன்னைக்கு சாயந்தரமே மொத ஆட்டத்துக்கு கௌம்பிடும். அது ஏற்கனவே பாத்த படமா
இருந்தாலும் சரி. அதோட சும்மா இருக்காது. மறுநாளே அத்தைய பாக்கக் கௌம்பிப் போயிடும்.

இங்கேருந்து டவுனுக்குப் போயி, டவுன்லேருந்து வேற பஸ் புடுச்சிப் போவனும். கருக்கல்லயே கோழி கூவுற நேரமே பாட்டி கௌம்பிடும். ஏம்மா.... இவ்வளவு சுருக்கப் போற? விடிஞ்சு போலாம்ல? ன்னு அப்பா ஒரு தடவை கேட்டாரு. வயசான காலத்துல வேகாத வெயில்ல ஊரு பயணம் போவ முடியுமா? கருக்கல்ல போனாத்தான் வெயிலுக்கு முன்ன போய்ச் சேரலாம்னு பாட்டி சொல்லுச்சு. காலாண்டு பரீட்சை முடிஞ்சதும் பாட்டிக்கூட அத்தை ஊருக்குப் போனேன். அப்பவும் கருக்கல்லதான் கௌம்பினோம். டவுனுக்குப் போனப்போ நல்லா விடிஞ்சுப் போச்சு. பஸ் ஸ்டாண்டுல அத்தை ஊருக்குப் போற பஸ் நின்னுச்சு. கண்ணாடில குருவிப் படம் போட்ட பஸ்.

அத்தை ஊருல பாத்திருக்கேன் முன்னாடி. அங்க பஸ் நிக்குது பாட்டின்னு சொன்னேன். பாட்டி காதுல வாங்கிக்காம வேற எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போச்சு. கிளப்புக்கடையில காப்பி குடிக்கப் போவுதுன்னு நெனச்சேன். அடேய்.... ஒன் அப்பன், ஆத்தாக்கிட்ட சொல்லிடாத, நாம படம் பாத்துட்டுப்
போவலாம்னு சொல்லிட்டு காரு பஸ்ஸெல்லாம் டர்ரு புர்ருன்னு போற ரோட்டை எல்லாம் தாண்டி கூட்டிக்கிட்டு போச்சு. சினிமாப்படம் பாத்து ரொம்ப நாளாச்சு. பரீட்சைக்கு முன்னால ரஜினி படம் பாத்தது. அதோட டவுன் கொட்டாயில படமே பாத்ததில்லை. அதனால சரின்னு தலையாட்டிட்டு பாட்டி பின்னாடியே போனேன்.

டவுன்ல இருந்த கொட்டாயி ரொம்பப் பெரீசா இருந்துச்சு. மொகப்புல கண்ணாடி கதவுப் போட்டு, அரண்மனை மாதிரி இருந்திச்சு. எங்கூரு கொட்டாயிப் போல சைடுல தார்பாய் எல்லாம் கெடையாது. ஆம்பளங்க ஒரு பக்கம், பொம்பளங்க ஒரு பக்கம்னு ஒக்காந்துருந்தாங்க. எங்கூருல எல்லாரும் மண்ணு குமிச்சுத்தான் ஒக்காருவோம். டவுன் கொட்டாயில சாஞ்சுக்கற பெஞ்சுப் போட்டிருந்தாங்க. எனக்கு ஜாலியா இருந்துச்சு. படம் ஓடுற திரையில கலர் துணியப் போட்டு மூடியிருந்தாங்க. வெளக்கு அணஞ்சதும் மியூசிக் போட்டாங்க. கலர் கலர் வெளக்கு எரிஞ்சது. நாடகக் கொட்டாயி மாதிரி கலர் துணி மேல தூக்கிச்சு. அதுக்கப்புறம்தான் படம் போட்டாங்க. படம் முடிஞ்சு வெளிய வந்தப்போ மத்தியானம் ஆயிடுச்சு. அங்கயே ஒரு டீக்கடைல தயிர்ச்சோறு சாப்பிட்டம். அப்புறம் வேற எடத்துக்குக் கூட்டிக்கிட்டு போச்சு பாட்டி.

ரொம்ப தொலைவு போயிருப்பம். அங்கயும் ஒரு சினிமாக் கொட்டாயி இருந்திச்சு. பாத்ததுமே அது சினிமாக் கொட்டாயிதான்னு எனக்குத் தெரிஞ்சுப்போச்சு. வாசல்ல பாட்டு புக்குக் கடை இருந்துச்சு. ரெண்டாவது படம் பாத்துட்டு வெளில வந்தப்போ இருட்டிப் போச்சு. பஸ் புடிச்சு அத்தை வூட்டுக்குப் போனப்போ ராவாயிடுச்சு.

ஏம்மா... எப்பப் பாத்தாலும் ராத்திரியில வர்றே? காலை நேரமா கௌம்பி வந்தா என்னன்னு அத்தைத் திட்டினாங்க. எப்பவும் பாட்டி கருக்கல்லயே கௌம்பிடும்னு சொல்ல வாயெடுத்தேன். அதுக்குள்ள பாட்டி முந்திக்கிச்சு.

எங்கடியம்மா முடியுது? மேயப் போன மாட்டப் புடிச்சு கட்டிட்டு வரதுக்குள்ள அந்தி சாஞ்சிப் போய்டுது. அதுக்கப்புறம் ரெண்டு பஸ் மாறி வர்றதுக்குள்ள ராவாயிடுதுன்னு சொன்னதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. பாட்டிக் கூட பொய் சொல்லுமா? அஞ்சு நாளு அத்தை வூட்டுல இருந்தப்பவும் பாட்டி சும்மா இல்ல. பக்கத்து ஊரு போட்டோங் கொட்டாயில படம் பாத்துட்டு வந்துச்சு.

அங்கருந்து ஊருக்குத் திரும்பினப்பவும் கருக்கல்லயே கௌம்பியாச்சு. போறப்ப மாதிரியே டவுன்ல ரெண்டு படம் பாத்துட்டுதான் ஊருக்கு வந்தோம். சுருக்கா வர வேண்டியதுதானே? அந்திக்குப் போயேன்னு ஒன் நாத்திதான் சொன்னா. இல்லேன்னா என் கட்டை அங்கக் கெடக்குமா என்ன? ன்னு சொல்லிக்கிட்டே ஓரக்கண்ணால என்னயப் பாத்துச்சு பாட்டி. நான் உண்மையச் சொல்லிடுவேனோங்குற பயம் போல.

கை செலவுக்கு அப்பா குடுத்த பணம் இருக்குற வரைக்கும் வாரத்துக்கு ரெண்டு, மூணு படம் பாக்குற பாட்டி, சில சமயம் வூட்டுலேயே ஒக்காந்து கெடக்கும். வெளிய தெருவுக்குப் போவாது. கெழவி கையில காசு இல்லை. அதான் இங்கயே கெடக்குன்னு அம்மா சொல்லுவாங்க. ஆனா அடுத்த நாளே பாட்டி கையில காசு புரளும். அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தெருவுலேயே ரெண்டு மூணு வூட்டுல கடன் வாங்கியிருக்குன்னு. ஒரு தடவை பாட்டி கைல காசு இல்லாதப்போ, புதுப்படம் போட்டிருந்தான் போட்டோங்
கொட்டாயில. பாட்டி மூஞ்சி சிடுசிடுன்னு ஆயிடுச்சு. யாரும் கடன் தரலை போல. அப்பாக்கிட்டயும் கேக்க பயம். ரெண்டு நாள் கழிச்சு படம் கடைசின்னு செவப்பு நோட்டீஸ் ஒட்டிட்டாங்க. பாட்டிக்கு இருப்புக்; கொள்ளலை. ஒன்னாவது ஆட்டம் ஆரம்பிக்குற நேரம் கௌம்பி வெளிய போச்சு.

பாட்டி போன கொஞ்ச நேரத்துல கோவமா அப்பா வந்தாரு. வர்றப்பவே எங்கடா பாட்டின்னு கேட்டாரு. அம்மா பதில் சொன்னாங்க. தில்லுமுல்லு புடிச்ச கெழவி இருந்துக்கிட்டு நம்ம உசிர வாங்குது. போய் சேர வேண்டியதுதானேன்னு அப்பா திட்டினாரு. அம்மாவுக்கு ஒன்னும் போட்டோயல. எனக்கும்தான். படம் பாத்துட்டு பாட்;டி வந்தப்புறம்தான் அப்பா ஏன் திட்டினாருன்னு தெரிஞ்சுது. மெயின் ரோட்டுல உள்ள டீக்கடைக்கு வாடிக்கையா பால் குடுப்போம். காலையில பாட்டி போய் பால் ஊத்திட்டு வந்துடும். ராத்திரி வூட்டுக்கு வர்றப்போ அப்பா காசு வாங்கிக்கிட்டு வருவாரு. இன்னைக்கு என்னாச்சுன்னா... அப்பா வாங்கியாரச் சொன்னாருன்னு பால் காசை வாங்கிட்டுப் போயிடுச்சு பாட்டி. அப்பாக்கிட்ட திட்டு வாங்கினப்புறம் டீக்கடையில காசு வாங்குறதில்லே. ஆனா அக்கம்பக்கத்துல கடன் வாங்குறத மட்டும் வுடலை. ச்சோன்னு ஒரு நாள் மழை பேஞ்சிக்கிட்டிருந்துச்சு. அன்னைக்கு புதுப்படம்! ஒரச்சாக்கை மடிச்சு தலையில போட்டுக்கிட்டு பாட்டி கௌம்பிப் போச்சு. ஒண்ணாவது ஆட்டம் முடிஞ்சு ரொம்ப நாழியானப்புறமும் பாட்டி வரலை. என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து போயிட்டம்.

நான் போயி பாத்துட்டு வர்ரேன்னு செருப்ப மாட்டிக்கிட்டு அப்பா வாசலுக்குப் போனாரு. அப்ப துண்டு வண்டி ஒண்ணு வந்து வூட்டு வாசல்ல நின்னுச்சு. வண்டிலேந்து பாட்டிய ரெண்டு பேரு கைத்தாங்கலா எறக்கினாங்க. அப்பா பதறியடிச்சுக்கிட்டு ஓடினாரு. பாட்டிய தாங்கிப் புடிச்சுக்கிட்டாரு. அம்மாவும் பின்னாடியே ஓடினாங்க. பாட்டியம்மா மழைல நனஞ்சிருக்கும்போல, குளிர் சுரம் வந்து கொட்டாயில சுருண்டு கெடந்துச்சுன்னு வண்டில வந்தவங்க சொன்னாங்க. பாட்டியோட ஒடம்பு வெடவெடன்னு நடுங்கிக்கிட்டிருந்துச்சு. வைத்தியரப்பா வந்து பாத்துட்டு, வாதம் அடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போனாரு. கம்மாக்கரை புளிய மரத்துல பேய் இருக்குன்னு பாட்டி அடிக்கடி சொல்லும். போட்டோங் கொட்டாயி அங்கதான் இருக்கு. அந்தப் பேயிதான் பாட்டிய அடிச்சிருச்சுன்னு நினச்சுக்கிட்டேன்.

டவுன் டாக்டர்கிட்ட காட்டியும் சரிபட்டு வரல. சோத்து கையி ஒரு பக்கம் இழுத்துக்கிச்சு, பீச்சாங்கைய தூக்கவே முடியல. வாய் கோணலாப் போயி பாட்டியப் பாக்கவே பயமா இருந்துச்சு. ஒரு வாரத்துக்கும் மேல பாட்டி தூங்கிக்கிட்டேதான் இருந்துச்சு. ஒரு வாட்டிக் கூட கண்ணு முழிச்சி பாக்கல. மாத்தரயக் கரச்சு வாயில ஊத்திக்கிட்டிருந்தம். ஒரு நாள் கண்ணு முழிச்சிக்;கிச்சு ஆனா பேச்சு வரல. அப்பாவப் பாத்து என்னமோ சொல்ல நெனக்குதுப் போல. சொல்ல முடியல. அப்பாவுக்கு கண்ணு ரெண்டும் கலங்கிடுச்சு. ரொம்ப நாளா பாட்டி அப்படியேதான் இருக்கு. பேச்சு வரவே இல்ல. வாய்க்குள்ள நாக்கு சிக்கிக்கிடுச்சு போல. தண்ணிய வாய்க்குள்ள வச்சுக்கிட்டு பேசுறாப்புல பேசுது. வெளங்கிக்க முடியல. பாவம் பாட்டி.

பாட்டி என்னமோ கேக்குதும்மா. எனக்குப் போட்டோயமாட்டேங்குதுன்னு அம்மாக்கிட்ட சொன்னேன். ஒங்கிட்ட என்னத்தக் கேக்க இருக்கு. கொட்டாயில என்ன படம் போட்டிருக்கான்னு கேக்கும்னு அம்மா சொன்னப்போ, பாட்டியோட மொகத்த பாத்தேன். ஆமாங்குற மாதிரி தலையாட்டிச்சு. அதுலேருந்து புதுப்படம் போடுறப்போ பாட்டிக் கிட்ட வந்து சொல்லுவேன். பாட்டியோட மொகம் வாடி போவும். ஸ்கூலு விட்டு சங்கிலிவீரன் கோயிலுகிட்ட வந்தப்போ, பிரகன்நாயகி கொட்டாயி வண்டி வந்துச்சு. மைக் சத்தம் கேட்டதும் ஓடிப் போய் நோட்டீஸ் வாங்குனேன். வூட்டுக்கு வந்து புத்தக பைய வச்சிட்டு பாட்டிக்கிட்டப் போனேன். கண்ணு மூடி இருந்துச்சு. நோட்டீஸ் பாட்டின்னு சொன்னேன். பாட்டி முழிச்சுக்கிச்சு. என் கையில இருந்த நோட்டீஸ பாத்ததும் பாட்டியோட கண்ணு அகலமா விரிஞ்சது. மடங்கின நோட்டீஸ விரிச்சு பாட்டி படிக்கறதுக்கு வசதியா கையிலக் குடுத்தேன்.

பாட்டியோட கண்ணு கலங்கிச்சு. ஏன்னு தெரியல.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter