Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

ஒரே ஒரு தடவை

சாருத்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே என்று டெலிவிஷன் ஒரு பக்கம் பாடிக் கொண்டிருந்தது. சமையலறையிலிருந்து குடைமிளகாய் வேகும் வாசனையுடன் ஊதுபத்தியின் தாழம்பூ மணம் போட்டியிட்டது. வேலைக்காரி சரக் சரக்கென்று துடைப்பத்தால் பெருக்கினாள்.

ரகு கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தான். தினசரியை விரித்து இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டிருந்தான். தொடை ஒரு விதமான தாளலயத்தோடு ஆடிக்கொண்டிருக்க, முகம் அலட்சியமாக ஸ்போர்டஸ் காலத்தில் இருந்தது.

ரெண்டாவது டோஸ் காஃபி..... யமுனா மெல்ல டம்ளரை நீட்டினாள்.

ம்..... என்று வாங்கிக் கொண்டான்.

புது டிகாஷன்தான் இதுவும்.

ம்......

சூடு சரியா இருக்கா?

பதில் சொல்லவில்லை. தலையாட்டலாமா என்று யோசித்து வேண்டாம் என்று விட்டுவிட்டான். நிஜமாகவே சரவணபவன் காப்பியைப் போலத்தான் இருந்தது. அடர்த்தி பால், புது டிகாஷன், அளவான சர்க்கரை, நுரையுடன் சூடு என்று பிரமாதமான காபி. ஏதோ விஷயம் இருக்கலாம். முதலில் பாராட்டி விட்டால் தானே கதவைத் திறந்து வைத்தமாதிரி ஆகி விடும். வரட்டும்.

அடுத்த மாசம் வெடிங் ஆனிவர்ஸரி நமக்கு.

ஆமா....

புடவை, நகை நெறைய இருக்கு....

ஆமா.....

அதெல்லாம் எதுக்கு மறுபடி?

பேசாமல் இருந்தான். நானூறு ரூபா செலவழிச்சு பியூட்டி பார்லருக்கு போயிட்டு வரணும்னு ஒரு ஆசை. யமுனா தடுமாறியபடி சொல்லி விட்டாள். அவன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

என்னது? என்றான்

இதுவரைக்கும் போனதே இல்லை...... நம்ப தெருப் பொண்கள் பாதிப் பேருக்கு மேல ரெகுலரா போறா.... நீ போனதே இல்லையா யமுனா, பாங்க் காஷியர் பொண்டாட்டி நீ, ரொம்ப சிக்கனமான்னு சிரிக்கிறா.

பாதிப் பேர்தானே போறா? மீதிப் பேர் வீட்லே கண்ணாடி முன்னாடி நின்னுதானே அலங்காரம் பண்ணிக்கிறா? ஒரு தடவைதானே? முப்பது வயது ஆனாலே முகத்துல தசைகள் சுருங்க ஆரம்பிச்சுடுமாம். மஸாஜ் ரொம்ப முக்கியமாம். ஃபேஷியல் செஞ்சு, மானிக்யூர், பெடிகியூர் எல்லாம் செஞ்சு, புருவத்தையும் ட்ரிம் பண்ணி ரொம்ப ஆசையா இருக்கு எனக்கு. போயிட்டு வரட்டுமா? யமுனாவின் குரல் குழந்தையின் கெஞ்சுதலாய் ஒலித்தது.

புரிஞ்சுதானா பேசறே நீ? என்றான் உணர்ச்சியே இல்லாத முகத்துடன், ஏமாத்து வேலை அதெல்லாம்னு தெரியாதவளா நீ? பயத்த மாவும் கஸ்தூரி மஞ்சளும் தேச்சுகிட்டு, விளக்கெண்ணலை வாழை நார் போட்டு போட்டோ பிடிச்ச மைய கண்ல வெச்சுகிட்டு, அழுக்கு சேராம கை கால் நகங்களை வெட்டி பராமரிக்க சோம்பல் படறதுங்க போற இடம் அது.... தேவையில்லாத வேலை.... வெந்நீர் எடுத்து வை. டயமாச்சு கார்ப்பரேஷன் பேமென்ட் இன்னிக்கு. அவன் எழுந்து கொண்டான்.

நீங்க சொல்றது கரெக்ட்தான். திரும்ப திரும்ப போறது வேஸ்ட்தான். ஒரே ஒரு தடவை..... வெடிங் டே அதுக்காக........ அவள் தழைந்து கேட்டாள்.

வெள்ளில சிமிழ் வேணும்னு கேட்டியே.... வாங்கிக்கோ..... உருப்படியான செலவு.....துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டான் அவன். அவள் கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது.

வேலை தோள்பட்டைக்கு சவால் விட்டது. நோட்டுக்களை எண்ணி எண்ணி விரல்கள் நோவெடுத்தன.

ரகு கழுத்தில் வலியை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தான். கண்ணுக்கெட்டிய வரை வரிசை முழுக்க தலைகள் தெரிந்தன. இன்னும் ஐம்பது பேமன்ட்டாவது செய்ய வேண்டியிருக்கும். சே! என்ன பிழைப்பு இது என்று எரிச்சலாக வந்தது. மிடில் கிளாஸ் என்கிற உழைக்கும் வர்க்கம் சாகும் வரை பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எவன் போட்ட விதி? முதல் தேதிக்கே சம்பளம் முழுக்க வாங்க வேண்டும் என்று ஓடிவந்து நிற்கிறவர்கள் மேல் கோபம் கொப்புளித்து.

ஒரு வழியாக இரண்டேகாலுக்கு ஹால் காலியானது. பசி வயிற்றை கிள்ளியது. எதற்கும் ஒரு தடவை ரஃப் கால்குலேஷன் முடித்து விடலாம் என்று நினைத்து கொண்டான். கேஷ் ஹெவி இன்றைக்கு. டாலி ஆகி விட்டால் நிம்மதியாக சாப்பிடலாம். திக்கென்றது. எண்ணினான். மறுபடி எண்ணினான். சட்டென்று இதயம் ஒரு கணம் நின்றுவிட்டு, பிறகே துடித்தது. நாற்பதாயரம் கணக்கில் குறைந்தது!

ரகு ஸ்தம்பித்துப் போனான். பிரமையாக இருக்கும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். மீண்டும் ஒரு தடவை எண்ணிப் பார்த்தான். சந்தேகமே இல்ல. நாற்பதாயிரம் தெளிவாக குறைச்சலாய் இருந்தது.

என்ன ரகு, ஸம்திங் ராங் போல தெரியுதே? என்ன? அகஸ்டஸ் கை கழுவியபடி வந்தான்.

நாப்பதமாயிரம் குறையுதுப்பா.

அய்யோ.....

நூறு ரூபா கட்டுக்கு பதிலா ஐநூறு ரூபா கட்டு கொடுத்திருக்கேன். மைகாட்! சே.... சே...... ரகுவுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. நூத்திநாலு பேமன்ட்ப்பா அகஸ்டஸ்! கடுவன்பூனை மேனேஜர அஸிஸ்டென்ட் குடுன்னு கேட்டாலும் ஆளில்லே ஆளில்லேன்னு ஒரே பல்லவி தான் பாடுது... அய்யோ நாப்பதாயிரம்பா! எங்கப்பா போவேன்.

சரி சரி..... அகஸ்டஸ் பொறுமையாக பேமென்ட் ஆன செக்குகளை எடுத்து பார்வையிட்டான். புலம்பவே கூடாதுப்பா ரகு. எப்படி வெளில வரலாம்னு பாக்கலாம் இரு. மொதல்ல யாருக்கு போயிருக்கு எக்ஸஸ்னு பாப்போம். நல்ல வேளை டினாமினேஷன் தெளிவா எழுதியிருக்கே. அடுத்த ஆறாவது நிமிடம் தெரிந்துவிட்டது. ப்ரியா கன்ஸல்ட்டன்சிக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

யோசிச்சுப் பாரு.... வந்தது யாரு? ஓனரா, பேரரா..... என்ன நடந்தது? ரகு ஒரு கணம் மனதில் ஓட விட்டான். ரெட் கலர் டீ சர்ட் போட்டுக்கிட்டு ஒருத்தன் வந்தான்ப்பா..... பேர் கூட வித்தியாசமா.... ராகுலன்னு சொன்னான்..... இப்பதான் புதுசா வேலைல சேர்ந்தானாம். பிடிக்கல சார்.... சினிமாதான் எய்ம்னு தானே பேசினான்.

சரி..... மெதல்ல ஃபோன் பண்றேன். நீ மத்த வேலைய முடிச்சுக்க. அகஸ்டஸ் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுப் போனான். மனம் வலித்தது. யமுனாவின் ஏக்கமான முகம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு பொறுமையாக கேட்டாள்? எத்தனை பொறுப்புணர்வுடன் ஆசையை வெளிப்படுத்தினாள். புடவை வேண்டாம், நகை வேண்டாம் என்றாளே. நானூறு ரூபாய் எடுத்துக் கொடுக்க மனசு வரவில்லையே? நூறு மடங்காக இப்போது பறிக்கப்பட்டு விட்டதே? அய்யோ..... யமுனா! என்னை மன்னித்து விடடி பெண்ணே..... எவ்வளவு அல்ப்பத்தனம் நான் செய்தது? அந்த பணம் மட்டும் கிடைத்து விடட்டும். இன்றைக்கே உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் யமுனா......

மச்சக்காரன்டா நீ.... அகஸ்டஸ் வாய் நிறைய சிரிப்புடன் வந்தான். நா பண்றதுக்கு முன்னாலே அந்தப் பையன் கௌம்பி வந்திட்டிருக்கானாம். இப்பதான் பாத்தானாம் ஸாரின்னு உருகிறான்.

அகஸ்டஸ் மேலே பேசியது எதுவும் காதில் விழவில்லை. ரகு துள்ளிக் கொண்டிருந்தான்.

நிஜம்மாதான் சொல்றீங்களா?

ஏற்கனவே பெரிய விழிகளை மேலும் விரித்துப் பார்த்தபோது யமுனா அழகாகவே இருந்தாள்.

என்ன சந்தேகம் உனக்கு? மனைவியின் கன்னத்தை அவன் ஆசையுடன் தட்டினான். ஃபேஷியல், மஸாஜ் எல்லாம் செஞ்சுக்க.... கெமிக்கல்ஸ் கெட்டதாமே. ஹெர்பல் மஸாஜ்னு வந்திருக்காமே அதயே செய்ய சொல்லு. இந்தா....

தாங்கஸ்ங்க.... ரொம்ப தாங்க்ஸ்.... யமுனா குழந்தை போல பணத்தை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.
ஒரு நிமிஷம் யமுனா.....

வாசல்படி அருகே நின்றவள் திரும்பி பார்த்தாள். என்ன?

இந்த ஒரு தடவைதான்.... இனிமே இப்படி காசை போட்டோயாக்கக்கூடாது என்றான் ரகு.

பழைய ரகு.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter