|
நேயத்துக்கு மரியாதை
பர்வதவர்த்தினி
ரயிலடிக்கு ராகவன் வந்து பார்த்த போது, ரயில் வந்து நின்று கிளம்பிச் சென்று பத்து நிமிட நேரமாகிவிட்டிருந்தது. மனமும் உடலும் பரபரக்க, காலியாகக் கிடந்த அந்த ரயிலடியை நோட்டம் விட்டார். பிளாட்பாரத்தின் இறுதிவரை வேகமாக நடந்து போய்த் தேடினார்.
அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரையும் கேட்டார்.
கொஞ்ச நேரம் முன்னால, வயசான கண்ணாடி போட்ட ஒல்லியான கிழவி கையில ஒரு சின்னப் பெட்டியுடன் ரயில்ல வந்து இறங்கினாங்களா?
யாருக்கும் தெரியவில்லை.
ரயில்வே உணவகத்தில் கூட விசாரித்தார்.
வழயில ஒரு பத்து நிமிஷம் தடங்கலாகிப் போச்சு...... மிஸ் பண்ணிட்டேன்! என்று புலம்பினார்.
வீட்டிற்குப் போன் செய்தார்.
அங்கும் கிழவி வந்து சேரவில்லையாம். ஒரு எஸ்.டி.டி போட்டுடறேன் எனச் சொல்லி ஊருக்கு போன் பேசினார்.
பாட்டியை ராத்திரி ரயிலில் ஏற்றி விட்டுட்டோமே? என்ற பதில் தான் வந்தது.
மனதில் கிலி அதிகமாயிற்று.
எங்கே போயிருப்பாள்? வேறு ஸ்டேஷன் எதிலாவது தவறுதலாகத் தெரியாமல் இறங்கி விட்டுத் தவிக்கிறாளோ? என்று கவலைப்பட்டார்.
இதைக் கண்ட சிலர் இவரைப் பாராட்டிப் பேசினதை இவர் கண்டு கொள்கிற நிலையில் இல்லை. அம்மாவைக் காணோம்னு எப்படித் தவிக்கிறார் பார்! இப்படிப்பட்ட ஒரு பிள்ளைப் பெற அந்தம்மா என்ன தவம் செய்தாங்களோ!
யாருக்கு வேண்டும் இந்த பாராட்டும் பத்திரமும். ஊரிலிருந்து வந்த கிழவியைக் காணவில்லை!....
வெளியே ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்துப் பார்த்தார்.
கை விரித்தார்கள்.
காலி ஆட்டோ ஒன்று வெளியிலிருந்து ஸ்டாண்டுக்குள் நுழைந்தது.
டிரைவர் தலையை வெளியே நீட்டி எங்கே போகணும்? என்று கேட்டார்.
எங்கேயும் போக வேண்டாம்...... ஒரு கிழவி இந்த ரயிலில் வரணும்....... வந்திருக்கிறா, ஆனா நான் இங்கே வர்றதுக்குள்ளே ரயில் கிளம்பிப் போயிட்டுது. அவங்களைத் தான் காணோம். ஒருவேளை தூங்கிப் போய்விட்டு இறங்காம அந்த ரயிலிலேயே போறாங்களோ என்னவோ? என்று கையை பிசைந்தார்.
கண்ணாடி போட்ட ஒல்லியான பெரியம்மாவா? - டிரைவர் கேட்டார்.
ஆமாம் நீங்க எங்காவது பாத்தீங்களா?
இப்பத்தான் பிள்ளையார் கோயில் தெரு, பதினெட்டாம் நெம்பர் வீட்டில இறக்கிட்டு வரேன். பத்து ரூபாய்க்கு மேல பைசா தரமோட்டேன்னு சொல்லிட்டாங்க....... பாட்டி கால ரேட்டு!
அப்பாடா! அவங்களேதான்! இப்பத்தான் உசிரே வநதது. நீங்க நல்ல இருப்பீங்க! என்று வாழ்த்தினார்.
வரேன்னு சொன்ன நீங்க ஏன் ஸ்டேஷனுக்கு வரலன்னு கவலைப்பட்டுக்கிட்டே போறாங்க....
ராகவன் நகர்ந்தார்.
ஆட்டோ ஸ்டாண்டில் பேச்சுக் கச்சேரி ஸ்வரம் சேர்க்கத் தொடங்கியது.
ஒருவர் சொன்னார் பெத்த தாயார் போல இருக்கு. அதான் மனுஷன் தவிச்சுப் போயிட்டாரு. பெண்சாதிக்கு பயந்து ஊருக்கு அனுப்பி இருந்திருப்பாரு! கிழவி கிளம்பி இங்கே வந்திருக்காங்க. வீட்ல கிழவிக்கும் இவருக்கும் இன்னிக்கு மண்டகப்பொடிதான்!.....
கொண்டு போய்க் கிழவியை வீட்டில் இறக்கி விட்டு வந்த டிரைவர் பதில் கூறினார்.
இது இவருடைய அம்மா இல்ல, மாமியார்! வண்டியில போறப்போ பெரியம்மா சொல்லிச்சு. பெத்த தாயார் இவருடைய வீட்லதான் இருக்காங்களாம்!
இந்தப் பதில் அந்த இடத்தில் மேலும் கேலிச் சிரிப்பைக் கிளப்பியது. விஷமத் தனமான விமர்சனமும் கூட!
மாமியாரா? அதானே பாத்தேன்!
தாயாரைவிட மனஷனுக்கு மாமியார்னா ஒருபடி மேலதான்!
அவனவனுக்கு மாமியாரை மிஸ் பண்ணினாத் தான்யா பயமே வருது! பெண்சாதிக்கு பதல் சொல்லியாவணுமே!
ராகவனுக்கு வயிற்றில் பால் வார்த்த ஆட்டோக்காரர் சத்தமாகப் பேசி அவர்கள் வாயை அடக்க முயன்றார்.
இப்படியெல்லாம் கேலி செய்து சிரிக்காதீங்கப்பா. ஆட்டோவுல போறப்ப பெரியம்மா சொல்லிட்டு போனதை வச்சு நான் சொல்றேன். இந்த ஆளோட தாய்க்கு இங்க உடம்பு சுகமில்லே. அந்த தாய்க்கு உதவி செய்யத்தான் இந்தப் பெரியம்மா தன்னோட தள்ளாத வயசிலும் ஊரில இருந்து இங்கே கிளம்பி வந்திருக்காங்க இதுல என்ன பெரிய விஷயம்னா கிழவியோட பொண்ணு அதான் அந்த ஆளோட சம்சாரம் செத்துப் போய் பத்து வருஷமாச்சாம்! அப்படியிருந்தும் இப்படி உதவி செய்ய ஒடி வராங்கன்னா அது பெரிய சமாசாரமில்லையா?
பேச்சுக் கச்சேரி தனக்குத் தானே மங்களம் பாடிக் கொண்டபோது ராகவனின் ஸ்கூட்டர் ரயிலடி வளாகத்தை விட்டு வெளியே சென்றுக் கொண்டிருந்தது.
|