Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

முகத்தைத் தேடி

சுதா

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம். ரேடியோ பாட்டில் லயித்துப் போயிருந்தாள் வனஜா. ஒவ்வொரு நாளும் காலை நேரம் இந்த ரேடியோ பாட்டுக்கள்தான் அவளுடைய வாழ்நாள் சந்தோஷங்களிலேயே இனிமையானது. சந்தோஷங்கள்
என்று கூட சொல்ல முடியாது. இந்த ஒரு சந்தோஷம் மட்டும்தான். வேறென்ன அவள் வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நடந்துவிடக்கூடாதா என்று ஆசைதான். ஆனால் என்ன நடந்து விடும்?

இயந்திரத்தனமான அலுவலக அக்கவுண்ட்களையும், உப்பு சப்பில்லாத வாழ்க்கையையும் இப்படித்தான் நகர்த்திக் கொண்டிருக்கிறாள். ஐயையோ மணி எட்டே முக்காலா? அம்மா என் டிபன்பாக்ஸ் ரெடியா? இன்னிக்கு என்னத் தரப்போற?

நீ முதல்ல குளிக்கப் போடீ. எவ்ளோ நேரமா சொல்றேன். அந்த ரேடியோ வால்யூமை குறைச்சுத் தொலையிறியா? இந்த வீட்ல காலங்காத்தால எழுந்து நான்தான் நாயா பேயா உழைக்கணும். யாராலாவது ஒரு உதவி உண்டா? அம்மா பேசி கொண்டே வந்து ஹாலில் இருந்த ரேடியோவை நிறுத்தினாள்.

அம்மா ப்ளீஸ் ஆஃப் பண்ணிடாத. ரேடியோ மீண்டும் சன்னமாக ஒலித்தது. பவுடர் போட்டபோது சிவராமகிருஷ்ணன் சொன்னது ஞாபகம் வந்தது. அழகுதானா முக்கியம். ஒரு பொண்ணு அறிவுள்ளவளா குடும்பத்தை நல்லா நிர்வாகம் பண்ணிட்டு முக்கியமா புருஷன் மேல அன்பானவளா இருக்கனும். அதை எல்லாம் பாக்காம இப்ப எல்லாரும் ஃபேர் அண்ட் லவ்லி முகத்தைத்தான் பார்க்கிறான்க.

அலுவலகத்தில் ராதிகா கறுப்பு என்பதால் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனதை பற்றி பேச்சு வந்தபோதுதான் சிவராமகிருஷ்ணன் அப்படிச் சொன்னான். இவ்ளோ அசிங்கமான என் முகத்தை பார்த்துக்கூட வெறுக்க மாட்டியா சிவா. தனக்குள்ளேயே கேட்டபடி கண்ணாடியை பார்த்தாள். கண்ணாடியில் கண்ட தன் உருவத்தைப் பார்த்து அவளுக்கே எரிச்சலாயிருந்தது. கன்னம் ஒட்டிப் போய் மாநிறமாய் நீண்டு போன முகம். உடம்பாவது கொஞ்சம் குண்டாக இருந்திருக்கலாம்.

அதுவுமில்லை. கல்யாணமானா உடம்பு தானா குண்டாயிடும். எல்லாரும் சொல்வது. அதற்கும் வழி ஏற்படவில்லை. இதுவரை வந்து விட்டுப்போன மூன்று, நான்கு வரன்கள், பொண்ணு சுமார்தான். என் பையன் அழகுக்கு எத்தனையோ வரன்தேடிட்டு வந்தது. நீங்க ஒரு ஐம்பதாயிரம் கையில கொடுக்க ஒத்துக்கிட்டீங்கன்னா நாம மேற்கொண்டு பேசலாம். இன்னொரு மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள். நீங்க போடறேன்னு சொல்றதைவிட ஒரு பத்து பவுன் கூட போட்டீங்கன்னா உங்க பொண்ணோட முகத்துல அழகு கூடும். என்ன சொல்றீங்க? அப்பாவால் என்ன சொல்ல முடியும். ஏற்கனவே இரண்டு பெண்களுக்கு கல்யாணம் செய்து முடித்துவிட்டு இருப்பதை கொண்டு சமாளிக்க வேண்டுமே என்கிற கவலை அவருக்கு. நான் பிறக்காமலேயே இருந்திருக்கலாம். மூன்றாவதா பையன் பொறப்பான் என்கிற நப்பாசை. நான்காவதாகத்தான் பிறந்தான் பையன். இப்படி நகைப் போட்டால் அழகு கூடுமே என்று சொல்கிற மனிதர்களை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது. யாரைப் போய் குறை சொல்வது? தன்னையே நொந்துக் கொண்டாள் வனஜா.

உன் அழகு மூஞ்சிக்கு கல்யாணந்தான் ஒரு கேடா? தன் கண்ணாடி முகத்திடம் எரிந்து விழுந்தாள். என்னடீ மேக்கப் முடிஞ்சுதா? அப்பவே காச்மூச்சுனு கத்தினியே. மணி ஒன்பது நாப்பது. எவ்ளோ நேரமா கண்ணாடி முன்னால நின்னாலும் இருக்கிற மூஞ்சிதானே இருக்கும். இந்தா சாப்பிட்டுட்டு கிளம்பு. அவளுடைய அம்மா டிபனை தட்டில் கொண்டு வந்து நீட்டினாள்.

பதினோரு மணியாக இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது. நேரம் சீக்கிரம் நகரக்கூடாதா? கேண்டீனில் சிவாவை அப்போதுதான் சந்திக்க முடியும். பக்கத்து செக்ஷன், அவனும் அக்கவுண்ட்ஸ் பார்ப்பதால் வேலை விஷயமாக பேசத் தொடங்கி இப்போது நட்பு நெருக்கமாகி விட்டது. தினமும் ஒருமுறையாவது பார்க்காவிடில் வேலையே ஓடவில்லை வனஜாவுக்கு. போன்
பண்ணியாவது பேசிவிடுகிறாள். இப்படி யாரிடமும் நெருக்கமாக இருக்கக் கூடாது என்று நினைத்தாலும் மனம் கேட்கின்றதா?

என்ன மேடம் இப்பவெல்லாம் நம்பசீட் பக்கமே எட்டிக்கூட பார்க்கிறதில்லை. அக்கவுண்ட்ஸ் பார்க்கறதுல ரொம்ப தேறிட்டீங்களோ? கேண்டீனில் வைத்து கேட்டான் சிவராமகிருஷ்ணன். அலுவலகத்தில் இவளைவிட நான்கு வருடம் அனுபவம் அதிகம் அவனுக்கு. அப்படியெல்லாம் கிடையாது. உங்களை ரொம்ப தொந்தரவு பண்ண வேண்டாமேன்னுதான் என்று பொய் சொன்னாள். உன்னை டெய்லி பார்க்கனும். எப்பவும் பேசிக்கிட்டே இருக்கணும்னு ஆசைதான். ஆனால் அதெல்லாம் முடியுமா? நினைக்கிறதை எல்லாம் பேசிக்கிட்டே இருக்கவா முடிகிறது. வெளியில் சொல்லத்தான் முடிகிறதா? மனசுக்குள் எண்ணியபடி காபியை உறிஞ்சினாள் வனஜா.

அதுக்கப்புறம் யாரும் பெண்ணு பாக்க வரலியா வனஜா?

என்ன கிண்டலா?

நான் எப்பவாவது கிண்டல் பண்ணுவேனா? நெஜமாத்தான் கேட்டேன். எனக்கு இந்த நான்ஸென்ஸ் எல்லாம் பிடிக்கிறதே இல்ல. ஒரு பொண்ணை பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நிக்க வைக்கிறது. நான் கல்யாணத்துக்கு தயாரா ஆயிட்டேன்ற மாதிரி ஒவ்வொருத்தர் கிட்டயும் காட்றதுன்னு என்ன பழக்கவழக்கமோ? நம்ம பெரியவங்க லவ் மேரேஜ்னா வெறுக்கிறாங்க. ஆனா இதைப்போல மடத்தனத்தை வளர்க்கிறாங்களே.

அப்ப நீங்க லவ் மேரேஜ்தானா?அதுக்கும் பயமா இருக்கு தோள்களை குலுக்கினான்.

லவ் பண்ண பயமா? வனஜா கேட்டாள்.

இருவரும் காபியை முடித்துவிட்டு கேண்டீனைவிட்டு ஆபிஸ் வராண்டாவில் நடந்துக் கொண்டிருந்தனர். அப்படி கிடையாது. காதலிக்கறவங்க முதல்ல ரெண்டு பேரும் போட்டோஞ்சுக்கணும். அதை விட்டுட்டு பைத்தியம் பிடிச்ச மாதிரி அலையறது பிடிக்காது. காதல்னா தெளிவா இருக்கனும். அது காதலோ, வீட்ல பார்க்கறாங்களோ எனக்கு ஒரு பொண்ணு மனைவியா தேவைதான். அவ இப்படித்தான் இருக்கணும்னு கண்டிஷனெல்லாம் கிடையாது. முக்கியமா எங்க அம்மாவுக்கு பிடிச்சிருக்கணும்.

அம்மா மேல அவ்வளவு பயமா சிவா. பயம்னு சொல்ல முடியாது. பக்தின்னு வேணா சொல்லலாம். அவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள். அப்பா ஏழு வயசுல விட்டுட்டு போனதுக்கப்புறம் அந்த கஷ்டத்தோட நிழல்கூட படாம வளர்த்தாங்க. எனக்காகவே வாழற அவங்க நிம்மதிதான் எனக்கு முக்கியம். அவங்க விருப்பத்துக்கே என்னோட வருங்காலம் அமையட்டும்.

அப்ப உங்கம்மா காட்ற பொண்ணுக் கழுத்துலதான் தாலி கட்டுவேன்னு சொல்லிட்டீங்க. அப்படித்தானே?

ஆமாம். அவங்களுக்கும் அழகோ பணமோ முக்கியமே இல்லை. குணந்தான் பார்ப்பாங்க. அவரவர் இருப்பிடம் வந்ததால் பிரிந்தனர் இருவரும். சாயங்காலம் காண்டீனுக்கு வரும்போது பாக்கலாம் வனஜா. கைகளை ஆட்டி விடை கொடுத்தான். மதியம் சாப்பிடும்போது உமா கேட்டாள். ஏண்டி வனஜா ஒரு மாதிரியா இருக்கே. எதுவும் பிரச்சனையா? அந்த கிழட்டு மேனேஜர் மறுபடியும் எதுவும் வாலாட்டுதா?

அதெல்லாம் ஒண்ணும் இல்லடீ. சிவாவை பற்றி உமாவிடம் பேசலாமா? வேண்டாம். நமக்கே ஒரு முடிவும் தெரியாமல் என்னவென்று சொல்வது? கவலைப்படாதே. சீக்கிரம் என்னை மாதிரி கல்யாணம் பண்ணிக்கோ. அப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல. அந்த கிழவனுக்கு ஃபிரஷ்ஷானதுதான் பிடிக்கும், கண் சிமிட்டி சிரித்தாள் உமா.

அசிங்கமா பேசாதடீ. கல்யாணம் ஆனதும் நீயும் கெட்டு போயிட்ட. சாப்பாட்டு வேளை முடிந்த பிறகும் வேலையே ஓடவில்லை வனஜாவுக்கு. லவ் பண்ண மாட்டானாம். ஆனால் பொண்ணு எப்படியிருந்தாலும் ஓ.கே.யாம். நான் நினைப்பது போல் அவனும் ஏதாவது...... எப்படிக் கேட்பது. சினிமா மாதிரி அவங்க அம்மாவின் காலில் போய் விழுந்து விடலாமா? அவனை பற்றிய நினைவுகளை அகற்றத்தான் இவளால் முடிகிறதா? அலுவலகம் வந்தால் இதே நினைவுகள்தான் இவளை மிகவும் அலைகழித்து, வேலை செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருவேளை நானாக இப்படித் தவறான கற்பனையில் இறங்கி விட்டேனோ? குழப்பமாயிருந்தது. மாலையில் சிவராமகிருஷ்ணன் பர்மிஷன் போட்டுவிட்டு சீக்கிரமே புறப்பட்டு விட்டதாக சொன்னார்கள். அடுத்த நாள் காலை பத்து மணிக்கே ஆபிஸ் தொடங்கும் வேளையிலேயே அவளிடத்தைத் தேடி வந்தான் அவன்.

என்னை இந்த நேரத்துல எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. இல்லையா வனஜா?

ஆமாம் என்ன சர்ப்ரைஸ்.....?

இவனும் நம்மைப் போல இரவு முழுவதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தானோ? படப்படப்பாய் இருந்தது வனஜாவுக்கு.

நேத்து சாயங்காலம் எங்கம்மா திடீர்னு போன் பண்றாங்க. உடனே ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வாடான்னு. என்னன்னு போய் பார்த்தா பொண்ணு பார்க்க கிளம்பணுமாம். நான் எவ்வளவோ பிடிவாதம் பிடிச்சேன். நீங்க போய் பாத்துட்டு வாங்க என்னை கூப்பிடாதீங்கன்னு. என் பிடிவாதம் அவங்ககிட்ட பலிச்சாதானே. விடாப்பிடியா இழுத்துட்டு போய் நிக்க வெச்சு.........

அப்புறம் என்ன ஆச்சு? ஆவலை அடக்க முடியவில்லை வனஜாவால்.

அப்புறம் என்ன? நான் போய் அங்க பொண்ணு மாதிரி நின்னேன். அவங்க வீட்ல எல்லாரும் கலகலடைப். விந்தியாகூட நல்ல அழகு வனஜா. போட்டோ அனுப்புவாங்க பாருங்களேன். அப்ப ஓ.கே. உங்கம்மாவுக்கும் பிடிச்சிருந்துதா?
அவங்களோட செலக்ஷன்தானே. பிடிக்காம போகுமா? மொதல்ல உங்ககிட்டதான் சொல்லணும்னு தோணுச்சு போன்ல சொல்றதைவிட நேர்ல சொல்லிடறது பெட்டர் இல்லியா.

மாப்பிள்ளையா ஆயிட்டீங்க. ரொம்ப அதிர்ஷ்டசாலிதான் சிவா. நீங்க பார்த்த முதல் பொண்ணே பிடிச்சும் போச்சு இல்லையா? ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே சிரிக்க முயன்றாள் வனஜா.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter