|
மாங்கல்யம் தந்துனானே!
அகத்யா
விடியற்காலை ஆறு மணிக்கு கல்யாணம். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். எங்கோ சுப்ரபாதம் கேட்டது. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து கேட்டாலும் காதுக்குள் ஐஸ் வாட்டராய் இறங்குகிற அந்த குரல்.
இப்படிப்பட்ட விடியலில்தான் என் பிந்துவிற்கு லெட்டர் கொடுத்தேன். தலையில் சுற்றிய ஈர டவரோடு கீழே உட்கார்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது கொடுத்தேன். முகத்தில் கலவரமும், பீதியும் பற்றி கொள்ள விரல் நடுங்கி வாங்கிக் கொண்டது அந்த மங்கிய இருட்டிலும் நன்றாக புலப்பட்டது. அப்போதும் எங்கேயோ இதே சுப்ரபாதம்தான் ஒலித்துக்
கொண்டிருந்தது. நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிக்கிறாயா?
தாஜ்மகாலை யார் கட்டியது என்பது மாதிரி மொட்டைத் தனமான கேள்வி. அந்த வயதில் எனக்கு தோன்றியது அவ்வளவுதான்! அதற்குபிறகு ஆறு வருடங்கள், யாருக்கும் தெரியாமல் முகம் பார்த்து, கண்களால் நலம் விசாரித்து, எப்போதாவது கவிதை எழுதி காதலுக்க உரம் போட்டோம். உன் கூந்தல் பூவைக் கிள்ளி எறி என் மீது நிலா விழுந்ததாய் நினைத்துக் கொள்கிறேன்!
ஒரு நாள், கோயிலில் வைத்து இந்த கவிதையை கொடுத்தேன். அந்த கவிதையை அவள் நிறைய ரசித்திருக்க வேண்டும். மறுநாள் கன்னம் குழிய சிரித்தாள். நிறைய பூ வைத்திருந்தாள் அதில் எந்த பூ நிலா பூ? காக்கைகள் கரைய ஆரம்பித்திருந்தன. மணியைப் பார்த்தேன் ஐந்து- சீக்கிரம் கியளம்புடா. முகூர்த்தத்துக்க நேரமாச்சு. அப்பா சொன்னதும் சட்டென்று எழுந்து பரப்பரப்பாய் கிளம்பினேன். கல்யாண மண்டபம்- கொஞ்ச நேரத்தில் பிந்து வந்து விடுவாள். வாசலில் சத்தமாய் சினிமா பாட்டில், இந்த மாளிகை வசந்த மாளிகை என்று டி.எம்.எஸ். அழுதுக் கொண்டிருந்தார். சே......விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்..........கல்யாண வீட்டில் என்ன பாட்டுப் போட வேண்டுமென்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல்.......
ஐயர் ஏதேதோ மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு எதிலும் ஒட்டவில்லை. பிந்து வருகிற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ. அய்யரின் குரல் கேட்டதும் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேன். இரண்டு மூன்று பேர் புடைசூழ பிந்து வந்தாள். அவளை பார்த்ததும் இதயத்தின் மூலையில் என்னவோ செய்தது. மணவரையை சுற்றி வந்து அவள் உட்கார்ந்த போது கூட்டத்தின் மொத்த கண்களும் அவளையே பார்த்தது. மெல்ல தலை உயர்த்தி பிந்துவை பார்த்தேன். லேசாய் அழுதிருக்க வேண்டும். கண்கள் சொல்லிற்று.
நீ எனக்காக சில
கண்ணீர் துளிகளை இழந்தால்
உனக்காக நான் கண்களையே இழப்பேன்.
எங்கோ படித்த கவிதை ஞாபகத்தில் வந்து போனது. ஒரு பந்தி முடிந்திருக்க வேண்டும். காலியாயிருந்த நாறிகாலியை பாதிக் கூட்டம் ஆக்ரமித்தது. மீதி கூட்டம் சாப்பிடுவதற்காக உள்ளே ஓடியது. கல்யாண வீட்டில் பாதி பேர் சாப்பிடுவதற்காகவே வருகிறார்கள். நினைக்கவே வெறுப்பாயிருந்தது. இடைப்பட்ட சலசலப்பில் பிந்து தலை நிமிர்ந்தாள். என்னைப் பார்த்திருக்க வேண்டும். சட்டென்று தலை குனிந்துக் கொண்டாள். அய்யர் ஒரு தட்டில் மாங்ல்யம் வைத்து, ஆசிரிவாதம் பண்ணுங்கோ என்றபடி ஒவ்வொருவராய் காட்டிக் கொண்டிருந்தார், சின்ன சின்ன குழந்தைகள்,
நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மாங்கல்ய தட்டை ஒற்றி கண்களல் வைத்துக் கொண்டனர். இப்போது மண்டபத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. வெளியே மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. பாதிக் கூட்டம் மழைக்கு ஒதுங்கியதாக தெரிந்தது. நெருப்பை பற்ற வைத்து அதில் நெய்யை ஊற்றி அய்யர் ஏதேதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். நெருப்பிலிருந்து புகை அதிகமாகி என் பிந்துவின் கண்களில் பட்டு அடிக்கடி கர்ச்சீப்பால் கண்களை துடைத்துக் கொண்டாள்.
நான்- நானும் பிந்துவும் காதலித்த நாட்களை அசைப் போட்டுக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று அய்யர், மாங்கல்யம் தந்துநானே நவ ஜீவன ஹேசுனா............. கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றபோது- என் கைகள் அனிச்சை செயலாய் மேளத்தை தட்டியது. டும்....டும்....டுடுடும்டும்.
பக்கத்தில் அப்பா மெய்மறந்து உச்சஸ்தாயில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். வெளியே வானம் இன்னும் அழுத்தமாய் அழுதது.
|