|
கோவேறு கழுதைகள்
செந்தில்குமார்.ஆர்.பி
நீயெல்லாம் மனுஷனாயா? சாயந்தரத்திலே கவலையில குடிக்கிறேங்கற, காலையில நைட் தண்ணி அடிச்சதால தலை வலிக்குது, கொஞ்சம் போட்டா சரி ஆயிடும்னு சொல்லிட்டு குடிக்கிற உன்ன எப்படியா திருத்தறது. சீறினாள் விலாசினி. நடுத்தர வர்க்கத்து நியாயமான சீறல்.
தலை சொறிந்தான் தினேஷ். இல்லம்மா ஆபிஸ்ல நிறைய வேலை, உடம்பு வலி. என்னம்மா பண்றது வயசாயிடுச்சில்ல என்றான் முப்பது வயது தினேஷ்.
ரெண்டு பொண்ணுங்க-இப்ப சேர்த்து வைக்கலேன்னு வச்சிக்க அதுங்க கன்னி கழியாமலேயே காலம் தள்ளிடும் ஞாபகம் வச்சிக்க. சரி சரி குழந்தைகளுக்கு பீஸ் கட்டணும் பணம் இருந்தா கொடு கேட்டாலேயழிய அவளே தினேஷ் பாக்கெட்டில் கை நுழைத்து எடுத்து சென்றாள் பணத்தை.
சிரித்து கொண்டே நின்றான் தினேஷ். அவள் திட்டுவது, கொட்டுவது ஏன் அடித்தால் கூட சிரித்து கொண்டு தான் இருப்பான். நடுத்தர வர்க்கத்தில் சண்டைகளில் தானே ஊடல் சுகத்தை அனுபவிக்க முடியும். அதுவும் செய்த தவறுக்கு படுக்கறையில் விலாசினி மன்னிப்பு கேட்பதற்காகவே திட்டு வாங்குவான், உதை வாங்குவான். தள்ளாடியபடியே உள்ளே நுழைந்தான் தினேஷ். உக்கிரமாய் முறைத்த விலாசினி எத்தனை மொறை சொல்றது, உனக்கு உறைக்கவே உறைக்காதா? ஊகூம்.... இன்னைக்கு உனக்கு தண்டனை கொடுத்தே ஆகனும். இப்போ உனக்கு சாப்பாடு கிடையாது பசியால சாவு. தீர்மானமாய் திரும்பினாள் விலாசினி. இதையெல்லாம் கேட்காமலே கீழே விழுந்து கண் மூடி இருந்தான் தினேஷ் கோபத்துடன் குழந்தைகளை கட்டிபிடித்து கொண்டு தூங்கி போனாள் விலாசினி. திடுக்கிட்டு விழித்தாள்- இரவு ஒரு மணி இருக்கும் ஓடிசென்று சட்டியை துழாவி சாப்பாட்டை அள்ளி தட்டில் போட்டு தினேஷ் தலையை அவள் மடியில் செல்லமாய் தூக்கி வைத்து ஊட்ட முயற்சித்தாள்.
பாவம் விலாசினி, பாவம் குழந்தைங்க. பாவம், பாவம்.......... தூங்கி போனான் தினேஷ் கண் கலங்கினாள் விலாசினி. கோவிச்சுக்காதம்மா தலைவலி என்று சொல்லி கொண்டே பாட்டிலில் இருந்த பாதி பிராந்தியை கிளாசில் ஊற்றி தண்ணி ஊற்றி மெல்லமாய் குடித்தான். பிராந்தி குடிக்கும் போது கூடவே ராமா பவன் இட்லி வேணுமே ஐயாவுக்கு. இல்லைன்னா பிராந்தி கூட உள்ளே இறங்காதே. தட்டை அவன் முன்னால் தள்ளி விட்டு தள்ளி நின்றாள். இரண்டையுமே உள்ளே தள்ளி கொண்டு இருந்தான் தினேஷ்.
குழந்தைங்க இருக்கே, சாப்பிட்டு இருக்குமா? பொண்டாட்டி இருக்காளே.... புலம்பி கொண்டே இருந்தாள் விலாசினி. சுருக்கென்றதுபோல் திரும்பினான். குழந்தைகளை அழைத்து இரண்டு வாய் ஊட்டினான். ஆச்சர்யமாய் பார்த்தாள் விலாசினி. அவளையும் அருகில் அழைத்து ஊட்டினான். போதை ஏறிட்சி அதான்........ என்று அவனுக்கு கேட்காமல் சொன்னாள். தெளிவாய் வீடு திரும்பினான்- குடி இல்லை ஆச்சர்யப்பட்டு போனாள் விலாசினி. இப்பதாங்க எனக்கு சந்தோஷம், இனிமே நாம பொழைச்சுப்போம். நெற்றி வியர்வையை துடைத்து விட்டாள்.
அமைதியாய் சாப்பிட்டான்- சீக்கிரமாய் படுத்தான், புரண்டு புரண்டு படுத்தான்- போதைக்கு மட்டுமே மசிந்த கண்கள் வெறுமனே மூட மறுத்தது. விலாசினி பார்த்து கொண்டே படுத்தாள். பொழுது விடிந்தது. அம்முலு........ பெரிய பொண்ணை ஆசையாய் அருகில் அழைத்து கட்டி முத்தமிட்டான். சாப்பிட என்னம்மா இருக்கு என்றான். கஞ்சிப்பா- அம்முலு.
எனக்கு கொஞ்சம் ஊத்தி குடும்மா
ஊத்தி கொடுத்தாள். அதை வாங்கி குடித்தான். ஓடி வந்த விலாசினி அதை பிடுங்கி எறிந்தாள். என்ன போட்டோயம் பண்ணினே என்று குழந்தையை முறைத்தாள். பையில் மறைத்து வைத்திருந்த பிராந்தி பாட்டிலையும், ராமா பவன் இட்லியையும் தினேஷ் முன் வைத்தாள். ம்.......சாப்பிடுங்க...... எதையுமே உடனே நிறுத்த முடியாதுங்க கொஞ்சம் கொஞ்சமாதான் நிறுத்தனும். நேத்தே நீங்க பிராந்தி குடிக்கலை தலை வலிக்கும் குடிங்க என்று தினேஷின் தலையை ஆறுதலாய் அமுக்கி விட்டாள்.
|