|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

குளத்துமேட்டு தவளைகளும் கோனார் வீட்டு கலியமூர்த்தியும்

ஆர்.எஸ்.அந்தணன்

பிள்ளையார் கோவிலின் குளத்துமேட்டில் உட்கார்ந்திருக்கும் போது தாவித் தாவி ஓடும் தவளையைப் பார்த்தால் எனக்கு கோனார் வீட்டு கலியமூர்த்திதான் ஞாபகத்துக்கு வருவான். அந்த திரண்ட புல்வெளியில் மணல் மேட்டில் குதித்தோடும் அந்த தவளைகளை கலியமூர்த்தி என்று மெல்லிய குரலில் கூப்பிட்டால் அவைகள் திரும்பிப் பார்த்துவிட்டு ஓடுவதாய் எனக்கு தோன்றும்.

அந்த ஊரில் அவன் ஒரே ஒரு கலியமூர்த்திதான் என்றாலும், அவனுக்கு ஏன் கோனார் வீட்டு கலியமூர்த்தி என்று பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியாது. புரட்டி போட்ட தவளை மாதிரி வயிறோடு அவன் குதித்து குதித்து போவதை பார்த்தால் குப்பென்று சிரிப்பு வரும்.

அழுகிய நாற்றமும், ஒழுகிய மூக்குமாய் அவன் பள்ளிக்கு வருவதே ஒரு அழகு. அதென்னவோ தெரியாது அவன் எல்லாரையும் விட்டுவிட்டு என் பக்கத்தில்தான் வந்து உட்காருவான். எட்டாவதுவரை என்னோடு படித்த அவன் ஒரு மத்தியானப் பொழுதில் பள்ளிக்கூடம் விட்டு நின்றது பரமசிவம் வாத்தியாரால்தான். அந்த மத்தியானம் எங்கள் எல்லாருக்கும் தெரியாத எட்டாம் வாய்ப்பாடு அவனுக்கும் தெரியாமல் போனது. ஆனால் எல்லாரையும்விட அடி வாங்கியது அவன்தான்.

மறுநாள் சைக்கிளில் வந்த பரமசிவம் வாத்தியாரை கல்லால் அடித்து விட்டு கோ.வி.க.மூர்த்தி ஓடிய பிறகுதான் அவன் பள்ளிக்கூடத்தை விட்டு நின்று விட்டதாய் நாங்கள் அதிகாரப்பூர்வமாய் உணர்ந்தோம். அதற்குப் பிறகு பிள்ளையார் கோவிலின் குளத்து மேட்டில் எருமை மாட்டின் முதுகில் படுத்துக்
கொண்டு, கலியமூர்த்தி மாடு மேய்ப்பதும், தேவைப்பட்டால் அதன் முதுகிலேயே மூக்கைத் துடைத்துக் கொள்வதும். தவ்வி தவ்வி ஓடும் தவளைகளை எருமை ஓட்டும் குச்சியால் தட்டி தட்டி விரட்டுவதுமாய் என்ன ஒரு குதூகலம்! நமக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமையாதா என்று நான் ஏங்கியதுண்டு.

ஆனால் நான் எட்டாவது முடித்ததும் அப்பாவுக்கு மாற்றலாகி சென்னை வர நேர்ந்தது. சென்னை கிளம்பும்போது குளத்து மேட்டிற்கு சென்று மாடு மேய்த்து கொண்டிருந்த கலியமூர்த்தியிடமும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் குதித்து கொண்டிருந்த தவளைகளிடமும் நான் சொல்லிக் கொண்டு கிளம்பி இருபது வருடம் ஆகிறது. சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பு- அரசாங்க உத்தியோகம்- வெற்றிலை காவியேறிய பற்கள் என்று வாழ்க்கை உருண்டாலும், எப்போதாவது ஊருக்கு போக மனசு அரிக்கும். போனவாரம் அந்த அரிப்பை சொறிந்து கொண்டேன்.

ஊருக்குள் நுழையும்போதே சின்ன ராசாவே சித்தெரும்பு என்று அலறிய டேப்பின் கீழ் நாலைந்து இளைஞர்கள் ஃபங்க் வைத்துக்கொண்டு கையில் டீ கிளாசுடன் சுஸ்மிதா சென் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பழக்கடையும், ஸ்வீட் ஸ்டாலுமாய் ஊர் டவுனாகியிருந்தது. சுவற்றில் சாணி அடிக்கப்பட்ட போஸ்டர்களின் மத்தியில் தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சாணி படாத போஸ்டரில் கலியமூர்த்தி எம்.எல்.ஏ என்ற கொட்டை எழுத்து கண்ணில் பட்டது. ஊரில் பழசான பெரிசு ஒன்றிடம் விசாரித்தபோது, அது கோனார் வீட்டு கலியமூர்த்தி தான் என்று அறிந்ததும் மகிழ்ச்சி முன்னுக்குத் தள்ள, அடுத்த நிமிஷம் நான் எம்.எல்.ஏ. வீட்டிலிருந்தேன். கட்சிக் கொடியுடன் வாசலில் கார் நிற்க, திருட்டு அப்பிய முகத்துடன் நாலைந்து கரை வேட்டிகள் பரபரப்பாய் நின்று கொண்டிருந்தது.

யாருப்பா என்ன வேணும்? மிடுக்காய் கேட்டது கரைவேட்டி.

நான் கலியமூர்த்தியின் சின்ன வயசு பிரண்டு, பேரு வேணு.

தலைவரு வெளிய கிளம்பறாரு. கொஞ்சம் இரு. கரைவேட்டி உள்ளே போய் சில விநாடிகளில் வெளியே வந்தது. என்ன விஷயம்?- கரைவேட்டி.

ஒண்ணுமில்ல அவரு என் சின்ன வயசு பிரண்ட். சும்மா பாத்தட்டு போகலாம்னு. இப்படித்தான் சும்மா வந்தேன் அப்படி இப்படிம்பீங்க. அப்புறம் நூறு குடு. இருநூறு குடுன்னு தொந்தரவு பண்ணுவீங்க. காலங்காத்தால டிஸ்டர்ப் பண்ணாதீங்க- கரைவேட்டி ராஜஸ்தான் உஷ்ணகாற்றாய் அடித்தது.
அதற்கு மேல் கெஞ்ச விருப்பமில்லாமல் வெளியே வந்தபோது, வாசலில் நின்ற கூட்டம் ஐயா இருக்காரா என்றது. கூட்டத்தை விலக்கி வெளியே வந்தேன். எதிரே உள்ள பெட்டிக் கடையில் வெற்றிலை போடுகையில் எம்.எல்.ஏ. வெளியே வந்தார்.

தும்பை பூவாய் சட்டையும், சிவப்பு நிறத்துண்டும் கோனார் வீட்டு கலியமூர்த்தியா இது என்று கேட்க வைத்தது. கார் கதவை பவ்யமாய் திறந்து விட்ட கரைவேட்டி ஒதுங்கிக் கொள்ள, முன் ஸீட்டில் அலட்சியமாய் உட்கார்ந்த எம்.எல்.ஏவை மறைத்துக் கொண்டது கூட்டம். கொஞ்ச நேரம் பிள்ளையார் கோவிலின் குளத்து மேட்டில் உட்காரலாம் என்று தோன்ற மெல்ல நடந்தேன். குளம் படித்துரை கட்டி சுத்தமாயிருந்தது. கரையெல்லாம் மணலும், புற்களும் இல்லாமல் முழுவதுமாய் சிமெண்ட் தளமாகியிருந்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். எங்கும் நிசப்தம். தாவி தாவி போக தவளைகள்கூட இல்லை. ஒரு வேளை அவற்றிற்கும் கலியமூர்த்தி எம்.எல்.ஏ ஆன விஷயம் தெரிந்திருக்குமோ?

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter