|
இப்படியும் இருப்பாங்களா
கோ.சுதா
நித்யாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. அவளுக்கு ஐந்து வயதாகிறது. அவள் பெயர் பிரேமி. பார்ப்பதற்கு கவர்ச்சியாய் இருப்பாள். துருதுருவெனப் பேசுவாள்.
ஒருநாள் தீக்காயங்களுடன் பிரேமியை தூக்கிக் கொண்டு நித்யா ஆஸ்பத்திரிக்கு போனாள். பிரேமி உடலில் ஆங்காங்கே பீடித்துண்டால் சூடு போட்டிருந்தது பார்த்து டாக்டர் உஷா துடிதுடித்து போனாள். இப்படி ஒரு குழந்தைக்கு எப்படி இந்தக் கொடூரம் நடந்தது? என பிரேமிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டே டாக்டர் உஷா கேட்டார்.
இப்படி ஒரு கேள்வி வரும் என நித்யா எதிர்ப்பார்க்கவே இல்லை. அதா டாக்டர்...... வந்து, இவ அப்பா குடிக்க பணம் கேட்பாரு. நான் கொடுக்கலேனா இவளுக்கு இப்படி பீடியை பற்ற வெச்சி சூடு போடுவாரு. அதுக்கு பயந்துக்கிட்டு நான் பணம் கொடுப்பேன். எங்கிட்ட பணம் பறிக்க எங்க வீட்டுக்காரர் கையாளும் வழி இது! என்றாள்.
இப்படிபட்ட ஆண்களை பெண்கள் வளர விடக்கூடாது. உங்க வீட்டுக்காரரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வாங்க! இதைக்கேட்டதும் நாகப் பாம்பு நித்யாவின் உடம்பிலே கொத்தியது போலே இருந்தது.
டாக்டரும் நர்ஸ§ம் போனபின் தான் இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என குழந்தையை தூக்கிக் கொண்டு மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டாள். சேத்துப்பட்டில் ஒரு குடிசை வீட்டிலிருக்கும் தன் சிநேகிதி உமாவைத் தேடி போனாள் நித்யா. நித்யா, நீயும் பிரேமியும் மட்டுமா வந்தீங்க? உன் வீட்டுக்காரர் வரலியா? என உமா கேட்டாள்.
அவரைக் கைகழுவி நான்கு வருடமாகிறது!
ஏன்?
ஒருநாள் எவளோ ஒருத்தியை அழைச்சுக்கிட்டு வந்து பிரியாணி பண்ணிப் போடச் சொன்னாரு. அதுக்குக் கூட அவரிடம் காசு இல்லை. நான் பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி பிரியாணி பண்ணிப் போட்டேன். பிரியாணி சாப்பிட்டுவிட்டு என் கண் முன்னாலேயே அவகூட இன்பமா இருந்தா எனக்குக் கோபம் வருமா வராதா? ஆசையா இருந்தா அவளை அழைச்சுக்கிட்டு எங்காவது போக வேண்டியதுதானே? செருப்பை எடுத்து அவளை சாத்து சாத்துன்னு சாத்தினேன். அவரு என்னை அடிச்சாரு. நான் குழந்தைய தூக்கிட்டு அன்னிக்கு வெளியேறியவள்தான். சித்தாளு வேலை மதுரையிலே செய்துக்கிட்டு இருந்தேன். அங்கேயும் இருக்க முடியாத சூழ்நிலை. நீ இங்கே இருப்பதால் உன்னை நம்பி வந்துட்டேன்!
கவலையை விடு. நானும் சித்தாளு வேலைதான் பார்க்கிறேன். என் கணவர் சாரத்திலே இருந்து கீழே விழுந்து ஆஸ்பத்திரியிலேதான் இருக்கார். அவர் வரும்வரை என்கூட இரு. அதுக்குள்ளே தனியா ஒரு குடிசை பார்த்திடலாம்! என உமா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
மேஸ்திரியிடம் ஏற்பாடு பண்ணி நித்யாவை கட்டிட வேலை செய்ய அழைத்துப் போனாள் உமா. நித்யாவுக்கு அதில் அனுபவம் இருந்ததால் வேலை சிரமமாகத் தெரியவில்லை.
அன்று வேலை முடிந்ததும் நீ வீட்டுக்குப் போ. உன் பொண்ணு தனியா இருப்பா. நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடறேன்! என நித்யாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் உமா. அந்த குடிசை பகுதியில் கடை வைத்திருந்தவர் புதிதாக வந்திருந்த பிரேமியை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் சிரித்து சிரித்து தன் மகள் பேசிக் கொண்டிருந்ததை தூரத்தில் வந்த நித்யா பார்த்து விட்டாள். வேகமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துத் தன் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு போனாள். அவனோடு உனக்கென்ன பேச்சு? என்று கேட்டவாறே கடா விளக்கைப் பற்ற வைத்து பிரேமியின் தலைமுடியை எரிக்கப் போனாள். அப்போது அங்கு வந்த உமா விளக்கைத் தட்டி, இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என அவளை திட்டி பிரேமியைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
இப்படித்தான் மாமி நான் எந்த தப்பும் செய்யலேன்னா கூட எங்கம்மா அடிக்கறாங்க. பெரியவங்க கூடப் பேசினாலும் இப்படித்தான் பண்ணுறாங்க. ஏன்னுதான் எனக்கே போட்டோயல! என பிரேமி அழுதுக் கொண்டே கூறினாள். நான் அதிக கண்டிப்புடன் என் குழந்தையை வளர்க்க நினைக்கிறதால இப்படி கொடுமைப் படுத்தறேனான்னு எனக்கே போட்டோயல. நான் பண்ணுவது தப்புன்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்னால இப்படி செய்யாமல் இருக்க முடியல! என்றாள் நித்யா.
பிரேமி! உன் அம்மா இப்படி மிருகத்தனமாக நடந்துக்கிட்டா இனிமேல் எங்கிட்ட வந்து சொல்லு! என உமா அவளை ஆறுதல் படுத்தினாள். மறுநாள் தன் கணவரை ஆஸ்பத்திரியில் பார்க்க போனாள் உமா. அங்கு டாக்டர் உஷாவை சந்தித்தாள். டாக்டர்! ஒரு தாய் தன் மகளையே தேவை இல்லாமல் சூடு போடுவாளா? வெறி பிடிச்சது போல் தன் மகளின் தலை முடியையே எரிக்கப் போவாளா? எனக் கேட்டாள். யார் மீது உள்ள கோபத்தையோ மகள் மீது காட்டி தன் கோபத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஒருவித மனநோய் இது! கணவன் சரியில்லை என்றாள் அந்த ஆத்திரத்தை மகள் மீது காட்டக்கூட இப்படி செய்யலாம்! என்றார் டாக்டர் உஷா.
இதை தீர்க்க முடியும் இல்லையா டாக்டர்?
ஏன் முடியாது? என் சிநேகிதியை நாளைக்கு அழைத்து வருகிறேன் எனப் போனாள் உமா. மறுநாள் நித்யாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் வந்தாள் உமா. டாக்டரிடம் நித்யாவை அறிமுகப்படுத்தி வைத்தாள். டாக்டர் யார் எனத் தெரிந்ததும் அங்கிருந்து ஓடப் பார்த்தாள். அவளைத் தடுத்து நிறுத்தினாள் டாக்டர். மதுரையில் கணவன் மகளை கொடுமைப்படுத்தியதாக என்னிடம் சொன்னாய். கணவனை அழைத்து வரச் சொன்னேன். எங்களுக்கு தெரியாமலே குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிப் போய் இங்கு வந்தும் குழந்தையை கொடுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறியா? என டாக்டர் கேட்டாள். என் கணவர் மோசமாக நடந்ததால் என் மகளும் எதிர்காலத்தில் மோசமாக நடந்துவிடக் கூடாதுன்னு அதிக கண்டிப்புடன் வளர்க்க நினைத்து என்னை அறியாமலே அவளுக்கு சூடு போட்டு விடுகிறேன் டாக்டர்!
உனக்கு ஆறுதலாக இருப்பதே உன் குழந்தைதான், அதன் மீது பாசத்தை பொழிவதற்கு பதிலாக கொடுமைப் படுத்தலாமா? அன்புடன் குழந்தையை அரவணைத்து நடந்துக்கொள். கணவன்மேல் உள்ள வெறுப்பை குழந்தையிடம் காட்டாதே. தொடர்ந்து இப்படி செய்தால் உன் மனநோய் கூடுமே தவிர குறையாது. எதிர்காலத்தில் குழந்தைக்கும் உன்மேல் வெறுப்பு ஏற்படும். ஜாக்கிரதை! என்றாள் டாக்டர். இனிமேல் அன்பு காட்டுகிறேன் என்றாள் நித்யா. அன்பு காட்டினாள். அவளின் மனநோய் குறைந்தது. பிரேமி அம்மாவை கொஞ்ச ஆரம்பித்தாள்.
|