|
அத்தியாயம் 10
புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை
மழை நேர இரவில், தனி அறையில், இரு சொந்தமில்லா ஜீவன்கள் தனிமையில் அகப்பட்டுக் கொண்டன!
ஒரு கடமைக்காக அங்கே சிக்கிக் கொண்டன! இரண்டும் ஒன்றை ஒன்று ஆகர்ஷனம் செய்யக் கூடியவை. எனினும் ஒன்று அதில் மெத்தனமாக இருக்க, மற்றொன்று தாபமும், தாகமும் தாங்க மாட்டாமல் தன் இதய நினைவுகளைப் பேச ஆரம்பித்திருந்தது. தமா பேசிக் கொண்டு போனாள்.
விஜய்! நான் செய்தது நியாயத்திற்கு விரோதம்! தர்மத்திற்கு விரோதம். புண்ணியத்திற்கு விரோதம்! இப்போது நான் மனம் உவந்து செய்யும் உதவியை ஒரு பெண் மனம் உவந்து செய்வாளா? ஊஹ¨ம், செய்யவே மாட்டாள்! வேறு என்ன வேணாலும் செய்வாள்! இது மட்டும் செய்யவே மாட்டாள்! ஏன்? இது ஒருத்தர் கற்பைப் பாதிக்கிறது இல்லையா? சொல்லி நிறுத்தினாள் அவள்.
ஆனா, ஒரு உதவின்னு வரப்போ, நான் செஞ்சிட்டேன். அவ்வளவுதான். ஏதோ ஒருத்தரைக் காப்பாத்தறதுக்காக! அதனாலே அது நியாயமாப்படுது! சரி செஞ்சாச்சு! இப்போ உதவி செஞ்சவ பதிலுக்கு ஒரு உதவி கேட்கிறது நியாயமில்லையா? தாபத்துடன் கேட்டாள் அவள்.
அவன் கண்கள் தகித்தன.
மௌனம் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
மெல்லிதான குரலில் மிகவும் தணிந்து, நீ இப்போ கேட்கிறது பதில் உதவியிலே சேர்த்தியா? என்றான்.
ஏன் இல்லை? ஒரு அபலை! ஒரு அனாதை! ஒரு ஏழை! அவள் ஒரு கனவு காண போட்டோமை கிடையாதா? என்று வேகமாகக் கேட்டாள் அவள்.
உண்டு தமா!
ஒரு பெண் தனக்குக் கிடைக்காததை எல்லாம் எண்ணி ஒரு லட்சியக் கனவா காண்றா. அந்தக் கனவு நனவாகும்படியா ஒரு சந்தர்ப்பம் அவள் பக்கத்திலே நெருங்கி வந்ததுன்னு வச்சுக்குங்க! அதை அவள் ஏன் பயன்படுத்தக் கூடாது! சக்தி வாய்ந்த ஒரு வாதம் அது. அவன் தத்தளித்தான்.
நான் ஏழைச் சமையல்காரி மகள், ஒரு மத்தியதர குடித்தனத்துப் பிள்ளையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்காது! இப்போது என் திருமணம் பேசப்படறதே சாதாரண சமையல்காரப் பிள்ளைகளிடையே தான்! என்னுடைய வாழ்க்கையின் நிஜங்கள் இவைதான்னு நல்லா எனக்குத் தெரிஞ்சாச்சு. ஆனால் கனவிலே நான் நிறைய காணறேன். என் மனம் சந்தோஷப்படும்படி, நல்ல குடும்பத்திலே, நல்ல படிப்பு படிச்சு, நேர்த்தியான அழகா இருக்கிற பிள்ளையோடு என் வாழ்க்கையை பிணைச்சுப் பார்த்து நிறையக் கனவு காணறேன்.
அந்தக் கனவுகளை நனவாக்குவதற்குத் தகுதியா எனக்கு வாழ்க்கையிலே வசதி அமையவில்லை. நான் ஏழைதான் ஆனா எனக்கு நல்ல பர்ஸனாலிடி இருக்கே! மிஸ்டர் விஜய்! ஏன் நான் கனவு காணக் கூடாதா?
நிச்சயம் காணலாம் தமா!
அது நிறைவேற சந்தர்ப்பம் கைக்கு எட்டி வந்தா ஏன் பறிச்சுக்கக் கூடாதா?
நிச்சயம் பறிச்சுக்கலாம்.
கொள்கை அளவிலாவது அதை ஒத்துக்கிட்டீங்களே, அது போதும் !
அவள் மௌனமானாள்.
அவன் யோசனைகள் மென்மையாகப் படர்ந்தன.
வாழ்வில் எங்கெங்கே எதிர்பாராத இடங்களில் ஆசாபாசங்கள் எவ்வளவு மறைந்து கிடக்கின்றன?
உலகில் வாழும் எல்லாமே வாழத் துடிக்கின்றன. ஆனால் வாழ முடியாத நிலையில் எத்தனை தடைகள்? எத்தனை இடையூறுகள்? அவள் அவனைப் பறிக்க முயன்றது அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதற்கான முழு தைரியம் அவளிடம் இல்லை.
தமா! என்றான்.
நீ மனசைத் திறந்து பேசியதே ஆச்சரியம்! நிறைய பெண்களுக்கு அதை மூடி வைத்து மனசில் புழங்கத்தான் தெரியும்! இப்போ நான் என் கஷ்டத்தைச் சொல்றேன். என் குடும்பம் என்னைத்தான் எதிர்பார்க்கிறது அதன் ஜீவனத்திற்கே!
ஆனா நான் யாரோ ஒரு பெண்ணுக்கு உதவி செய்யணும்னு திடீர்னு தோணி, அவளைத் திருமணம் பண்ணிக்கிட்டேன்! இப்போ அதனாலே வீட்டிலே எல்லாம் சிக்கலாப் போச்சு! என் தங்கை வாழ்வு கேள்விக்குறியா கூடப் போச்சு! நான் யாருக்கோ தியாகம் செய்ய நினைக்கப் போய். அதன் விளைவு என்னென்னவோ ஆயிடுத்து. அதனாலே மேலும் மேலும் நான் அதே மாதிரி தப்பு செய்யக் கூடாதுன்னு பார்க்கிறேன்! இதை நீ போட்டோஞ்சுகிட்டா நல்லாருக்கும். அவள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.
அப்படியே தலைகுனிந்தாள்.
இரவு பூராவும் மழை! இடையில்லாமல் பெய்து தண்ணீர்க் கடலாக உலகை மாற்றி இருந்தது. பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் பிரயாணித்து தமாவும், விஜய்யும் ஊர் போன போது சுகுணா ஆவலுடன் காத்திருந்தாள்.
நேத்திக்கே வர்றதா இருந்தீங்களே! முடியலையா? என்று விஜயைப் பார்த்துக் கேட்டாள்.
புறப்பட்டோம். ஒரே மழை. பஸ்ஸே வரல்லை! திரும்ப வேண்டி வந்துட்டுதது!
ஓ! ராத்திரி உங்க வீட்டிலேதான் தங்கினீங்களா?
ஆமாம். வேறு எங்கே போக முடியும்?
ஒ! அந்த ஓ அவனை என்னவோ செய்தது!
தமா அட்ஜெஸ்ட் எல்லாம் பண்ணாளா?
நல்லாவே நடந்துக்கிட்டா!
தமா அன்று முழுதும் கண்ணில் படவில்லை. அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான். மாலையே சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் சாப்பிட்ட பிறகு களைப்பு பிழிந்து கொண்டு வந்தது. உணவும் ருசியாக இல்லை. உடம்பில் கண கண என்று ஒரு கணப்பு ஏற ஆரம்பித்தது. மூன்று மணிக்கு எல்லாம் நல்ல ஜுரம். மாடியில் அவனைப் படுக்கவிட்டார்கள். வேக வேகமாக ஜுரம் மேலே ஏற ஆரம்பித்தது. டாக்டரை அழைத்து வந்தார்கள்.
இஞ்செக்ஷன் போடப்பட்டது.
நாளை சரியாயிடும்! என்று டாக்டர் சொன்னார். ஆனால் கொதிப்பு அவனை விடுவதாக இல்லை. நினைவுகள் வெப்பம் தாங்காமல் பேதலிக்க ஆரம்பித்தன. டெலிரியம் வந்து விட்டது.
இரண்டு நாள் ஜுரம் வீசியது. மூன்றாம் நாள் தான் கண்ணை விழித்து உலகத்தைப் பார்க்க முடிந்தது. ஆச்சரியம். அருகில் தமா உட்கார்ந்திருந்தாள்.
புன்னகை ஒரு உதயக்கதிர் போல் வந்தது. ஆனால் கண்ணின் ஓரங்களில் சோகம் வரி விட்டிருந்தது.
நான்தான்!........... என்றாள். நான் தான் ரெண்டு நாளும் உங்களுக்குப் பணிவிடை செய்யறேன்! என்றாள்.
அப்படியா? என்றான்.
உங்களுக்குத் தெரியுமே? சுகுணா எழுந்திருக்க முடியாது. அவங்க அம்மாவுக்கு முடியலை.
வயசாயிடுத்து இல்லையா? மெள்ள எழுந்து உட்காரப் பார்த்தான்.
இருங்க! இருங்க! என்று சொல்லி, அவன் பின்னால் தலைகாணிகள் சரி செய்து, அவனைப் பிடித்து மெள்ள இருத்தினாள். அவன் பார்வை திகைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த கிண்ணியில் விழுந்தது.
சின்னக் கிண்ணி! உள்ளே பால் கொஞ்சமாக இருந்தது. அதில் ஊறியது ஒரு சிறு வெள்ளைத் துணி.
என்ன இதெல்லாம்? என்றான்.
உங்க டெம்பரேச்சர் குறையறதுக்காக செய்தோம். பாலை நனைத்து நனைத்து உங்கள் நெற்றியில் துணியை ஒட்டினோம். வெப்பத்தை இழுத்து விடும் இந்தப் பால்!
என்ன பால் இது?
இது......... ப்ரஸ்ட் மில்க்.......... என்று கூறியவள், இங்கே தெருவில் உள்ள பெண்மணிகள் பலரும் கொடுத்து உதவினாங்க! என்றாள். பிறகு அவள் காப்பி கொண்டு வந்தாள்.
மெல்லிய குரலில், எனக்கு ஒரு பாக்கியம் ! உங்களுக்கு நான் பணிவிடை செய்ய முடிந்தது. ஜுரம் இல்லாம இருந்தா நீங்க அதை அனுமதிச்சிருக்க மாட்டீங்க! நல்லவேளை ஜுரம் வந்து எனக்கு சந்தர்ப்பம் செய்து கொடுத்தது. உங்கள் நெற்றியைத் தொட்டு நான் தான் பால் துணியை ஒட்டினேன். உங்கள் முகத்தைத் துடைத்தேன்! தலையை வருடினேன்! இப்படிச் செய்தாளா? என்ற திகைப்புடன் அவன் அவளைப் பார்த்தான்.
எனக்கு இந்த ஸ்பரிசம் போதும். இதை வாழ்நாள் முழுதும் நினைவு வைத்துக் கொண்டிருப்பேன்! என்றாள். அவன் மேலே நிமிரவே இல்லை.
ராமகிருஷ்ண பரமஹம்சர் முத்துச் சிப்பியைப் பற்றி ஒரு விஷயம் கூறுவார், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றாள் அவள்.
இல்லையே?
முத்துச்சிப்பி சுவாதி நட்சத்திரத்தில் கடலுக்கு மேலே வந்து வாயைத் திறந்து வைத்திருக்குமாம். எப்போதாவது அபூர்வமாக வானிலிருந்து ஒரு சொட்டு நீர் அந்த வாயில் விழுமாம். உடனே வாயை மூடிக் கொண்டு கடல் அடிக்குப் போய், அந்த நீர்த் திவலையைச் சுற்றி முத்து உண்டாக்குமாம். அது மிகவும் அழகான முதுதாக வாய்க்குமாம். காப்பியை லேசாக அருந்தி விட்டு அவளைப் பார்த்தான் விஜய்.
நானும் அந்த நத்தையும் போல, உங்களுக்குப் பணிவிடை செய்ததை மனத்துள் பாதுகாத்து வாழ்நாள் முழுதும் அதைச் சுற்றி ஒரு கனவுக் கூண்டை கட்டிக் கொள்வேன்! என்றாள் அவள்.
அவளது பேச்சுக்கள் என்ன ஆழத்தோடு வந்தன? ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.
மறுநாள் ஊருக்குப் புறப்படும் போது, சுகுணா அவனைத் தாபத்துடன் பார்த்தாள்.
போய் வாங்க! என்றாள்.
சீக்கிரம் ரணம் ஆறி எழுந்திரு! உன்னை அழைச்சிட்டுப் போயிடுவேன்! என்றான் விஜய்!
எல்லாம் ஆறட்டும் ! என்றாள் அவள்.
சீக்கிரம் குணமாகும்! கடவுள் பார்த்துப்பார் என்றான்.
உங்களுக்கு தமா நல்லா சேவை செஞ்சா இல்லே? என்றாள் அவள்.
ம்.!
என்னைவிட நல்லா கவனிச்சிருப்பா.
அதெப்படி சுகுணா! உனக்கு ஈடு யார் செய்வாங்க? என் மேலே உயிரையே வச்சிருக்கியே!
நான் தான் இப்போ எதுக்கும் தகுதி இல்லை.
வீணா மனசை நொந்துக்காதே, சுகுணா எல்லாமே நல்லா ஆகி நல்லாவே
இருப்பே!.............
ஒரு விஷயம் பார்த்தீங்களா?
என்ன?
நான் உங்களோடு நெருக்கமா வாழ்ந்த சில நாட்களை விட தமா அதிகமா வாழ்ந்துட்டா இல்லையா? அவள் முகத்தில் புன்னகை கடூரமாக வளர்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான்.
அப்படி எல்லாம் சொல்லாதே! எனக்கு மனம் தவிச்சுப் போயிடும். நிம்மதி இல்லாம தத்தளிப்பேன்.
இனிமே சொல்லலை......... நீங்க போய் வாங்க!
புறப்பட்டான். வெளியே வந்தான். தெருவில் நீள நடந்தான். மனம் சஞ்சலித்தது! தமாவின் உருவம் அடிக்கடி ஏனோ வர, அதைத் தவிர்த்து நிறுத்தி விட்டு, விறு விறு என்று நடந்தான். தவறு! தமாவை மனைவியாக நடிக்கவிட்டது எவ்வளவு தவறு? அவள் நினைவு வந்தது கொண்டே இருக்கிறதே என்று நினைத்தான்.
Next
page..... |