First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 5

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

தந்தை ரவீந்திரர் அருகில் விஜய் மிகவும் விநயம் காட்டி நின்றான்.

அவர் மூச்சு வாங்கும் விதமும், அதில் ஒரு நாடி மட்டும் கழுத்தில் புடைப்பதையும் பார்த்து அவன் மனத்தில் இரக்கம் தத்தளித்து எழுந்தது.

சேதுராம் வரன் பார்க்க வந்தார்! நீ வந்து.......... என்று அவர் ஆரம்பிக்க, அவன் திடுக்கிட்டான். ஏதோ சொல்ல வாயெடுத்துத் தவித்தான்.

நீ தவிக்க வேண்டாம்! உன் அம்மா சொல்லியாச்சு............... அதை ட்ராப் செய்யலாம்., என்றார் மிக சாதாரணமாக. அவன் திகைத்தான்.

அப்பா தொடர்ந்தார்.

நீ நீலங்குளம் போயிட்டு வேலைக்கு சிபாரிசு கடிதம் வாங்கி வந்திருக்கே! நீ அந்த எடுத்துக்கிட்டு ஆந்திரா மோபெட் கம்பெனிக்குப் போகணுமே! நெல்லூர் வரை போகணும்! நான் இன்னும் அனுப்பலை காரணம் தெரியுமா?

தெரியாது.

எனக்கு நெஞ்சுவலி உள்ளுர இருக்கு.. யாருக்கும் சொல்லலை! நீ இல்லாத போது ஏதாவது நடந்திடக்கூடாது பாரு..........

அப்பா! என்றான் உணர்ச்சிவசப்பட்டு. கண்களில் மளமள வென்று கண்ணீர் ஒழுகியது.

இப்போ இன்னொரு விஷயம்! கவனமா கேட்டுக்க. சுவாமிநாத் தெரியுமா? என்று தந்தை நீண்ட மூச்சுடன் ஆரம்பித்தார்.

ஓ! தெரியும். உங்க சிநேகிதர்தானே?

ஆமாம்! சொத்துக்காரன்! பெண் வச்சிருக்கான். பிள்ளையும் இருக்கு. பெண் நல்ல அழகு. அந்தப் பெண்ணும், அவ அம்மாவும் உன்னைப் பிடிச்சிருக்குன்னு ரொம்ப நாளாச் சொல்லிட்டிருக்காங்களாம் . உன் பையனுக்கு எடுத்துக்கன்னு. அவன் வலிய வந்து சொல்றான்.

அதிலே நமக்கு ஒரு அனுகூலம். அவனுக்கு ஒரு மகன் பி.ஈ. படிச்சிருக்கான். நம்ம சுதாவை அவனுக்குக் கட்டிக்கலாம்னு சொன்னான். பெண் கொடுத்து பெண் வாங்கறதை நான் தான் தள்ளிப் போட்டிருந்தேன். ஏண்டா என்னவோ மாதிரி இருக்கே? நிறுத்தினார் அவர்.

அவன் பேசவில்லை. அவர் தொடர்ந்தார்.

உன் பர்சனாலிடி, உன் படிப்பு எல்லாம் அவங்களுக்குப் பிடிச்சிருக்கும்........ வேறே தெரியாத இடத்திலே அவங்க பெண்ணைக் கொடுக்க விரும்பலை. அதுதான் ரகசியம். அவன் தன் கண்களில் ஈரத்தை விரைவாக அமுக்கிக் கொண்டிருந்தான்.

ஒண்ணுமில்லேப்பா! இவ்வளவு தூரம் குடும்ப விஷயத்தை என்னோடு பேச வந்துட்டீங்களேன்னு.............. கண்ணைத் துடைத்தான் அவன்.

உனக்கும் வயசாகல்லையா............... குடும்பத்தைப் பற்றி எப்பவாவது பேசித்தானே ஆகணும். அப்புறம் பார்த்துக்கோ, நேத்து கிணற்றடியில் கிடந்தேனே, செத்துப் பிழைச்சிருக்கேன்!

ஒரு கொத்து இருமல் அவரை உலுக்கியது. நெஞ்சைப் பிடித்து கண்களை மூடினார்.

திறக்க நேரமாகியது.

இப்பவே சொல்லிரணும். நாளைக்கு என்ன நடக்குமோ தெரியாது. இந்த சம்பந்தம் முதல்லே வேண்டாம்னு நினைச்சிட்டிருந்தேன். காரணம், பணக்கார இடத்திலே பெண்ணை எடுத்துக்கிறதிலே எனக்கு விருப்பமில்லை! ஆனா பகவான் வேறே மாதிரி நினைச்சுட்டார். ஒரு ஆட்டத்திலே அப்படி கிணற்றடியிலே ஜடமாகக் கிடக்க வச்சுட்டார் பாரு. யோசிச்சேன். இருமினார். நெஞ்சைத் தடவினார்.

சுதாவுக்குக் கல்யாணம் முடிக்காமல் எனக்கு நெஞ்சு வேகாது. அதனாலே நான் இருக்கிறதுக்குள்ளே அவளுக்கு உடனே பண்ணியாகணும். தீர்மானத்துக்கு வந்துட்டேன். நீ நேரே சுவாமிநாத்தைப் பார்க்கப் போ! அவசரமா உங்களை அப்பா பார்க்கணும்னு சொன்னார்னு சொல்லு! சீக்கிரம் வந்தா நல்லதுன்னு சொல்லு. சொல்றியா? இன்னொரு குலுக்கல் இருமல்கள் அவர் குடலைப் பிடுங்கி எடுத்தன. நெஞ்சைப் பிடித்தவாறு, நீண்ட சுவாசங்களோடு படுத்துக் கொண்டார்.

ஊரின் வெளியே அந்தக் குளம். அதன் பக்கத்தில் கிளை பரப்பிய மாமரம்.. விஜய் வழக்கம் போல் அங்கே போய் உட்கார்ந்தான். மதிய வெய்யில் கடுகடுத்து வந்தது. அப்பாவுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அப்பா இருக்கும் நிலையில் அவரால் தாங்க முடியாது. என்ன செய்ய? எதை நினைத்தாலும் கண் கலங்கியது.

பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தான். எழுத ஆரம்பித்தான்.

சுகுணா,

குளம் என் எதிரில் இல்லை. என் கண்ணில் இருக்கிறது.
என் தந்தை எனக்கு இதுவா, அதுவா என்ற புதிரைக் கொடுத்துவிட்டார். என்ன செய்வேன்? நிச்சயம் நீதான் எனக்கு வேணும்.. அதில் எந்தவித மாறுதலும் இல்லை. எனினும்

வாழ்வில் என் அப்பா சுகத்தை விட துக்கத்தை நிறைய அனுபவித்துவிட்டு, இப்போது அதன் கடைசி நுனியில் நிற்பவர்.
அவருக்கு கடைசி கணம் இது! அடுத்த கணம் தாவி மறைந்துவிடுவார். மனத்துள் அந்த துயரத்தை என்னால் தாங்கவே முடியாது, சுகுணா........ எனக்கு வாழ்வளித்து, இந்த நிலைக்கு என்னைக் கொண்டு வந்த அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுவரை அவர் அப்படிச் செய்ததில்லை. நீ எப்படி எனக்கு வேண்டுகோள் விடுத்தாயோ அது போன்றதே இது! ஆனால் உன் வேண்டலை ஏற்றுக் கொண்டேன். அவருடையதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன். சுகுணா, இதற்கு ஒரு வழி கூறமாட்டாயா? வரிகளைக் கண்ணீருடன் பார்த்தான்.

எதிரே குளத்தின் மறுகரையில் அவள் முகம் தெரிவது போல இருந்தது. அவள் புன்னகை ஒரு அலையாக அவனை நோக்கி மிதந்து வந்தது.

உன் மனசு தெரியணும். சுகுணா........ என்றான் மானசீகமாக.
அவள் புன்னகை செய்தாள்.

ஒரு காகிதத்தை இரண்டாக வெட்டி ஒன்றில்,

அப்பாவிடம் உண்மையை சொல் என்று ஒன்றில் எழுதினான். இன்னொன்றில், உண்மையைச் சொல்லாதே என்று எழுதினான். குலுக்கிப் போட்டு எடுத்தான். வீட்டிற்கு திரும்பினான். அம்மா அவனுக்காக காத்திருந்தாள்.

என்னடா! அவர் தவியா தவிச்சுக்கிட்டு இருக்காரே! என்ன பதில் சொல்லப் போறே? என்றாள். அவனிடம் பதில் இல்லை.

அவன் மௌனத்தைப் பார்த்து அவள் விழித்தாள்.

இந்தா நல்லது சொல்லப் போறியா? கெட்டது சொல்லப் போறியா? அம்மாவின் கைகளை அவன் பற்றினான்.

வா அம்மா! அவர்கிட்டே நேரே பேசறேன்!

நல்லது சொல்லு! இல்லாட்டி....... என்று விசும்பினாள் அவள். இருவரும் ரவீந்திரர் பக்கம் சென்றார்கள்.

அப்பா தலையைக் கீழே குனிந்து சுவாசம் விட்டுக் கொண்டிருந்தார். தலை நிமிர்ந்தால் சுவாசம் சரியாக விட முடியவில்லை.

இந்தாங்க! என்றாள் அவள்.

அவர் --- ம்ம்....... ம்ம்........ம்ம்.......... என்று ஆசுவாசமிட்டார்.

பிறகு சிறிதே தலையை அசைத்து, உம் பிள்ளை வந்துட்டானாம்மா? என்று கேட்டார்.

வந்தாச்சு! இதோ இருக்கான்! என்று கூறி கண்களைத் துடைத்தாள் அவள்.

டேய்! என்றார். நிமிரவில்லை.

டே.....ய்.......! சற்று கோபமாகக் கூவினார் அவர்.

டேய்...... பேசுடா....... பேசு....... நான் சொன்னதெல்லாம் பிடிக்காட்டாலும் தேவலைடா! பேசு! மனம் திறந்து பேசு! ஒரு தீர்மானத்தை இழக்கத் தயாராயிருந்தாலும் ஒரு மகனை இழக்கத் தயாராயில்லைடா! பேசு....... மூச்சு இழைத்து, மார்பு பூராவும் எலும்புகள் பளிச் பளிச் என்று ஒவ்வொரு மூச்சுக்கும் தெரித்து மறைந்தன.

வீ......ஸ்......வீ......ஸ்..... என்று மூச்சு இரைத்துக் கொண்டு பேசினார்.

அப்பா! என்றான்.

அது ஒரு தீனமான குரலாக இருந்தது.

சட்டென்று அவரது கால்களைத் தேடிப் பிடித்துக் கொண்டான்.
கையை அவர் மேலே தூக்கினார். அவனது தலை மட்டிலும் அதில் படிய, வாழ்க்கையில் முதல் முறையாக வயது வந்த மகனை மடிப்பக்கம் அமர்த்தி வருடிவிட்டார் அவர்.

அப்பா! உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டேம்பா! என்றான் அவன். அப்பா கண்களில் நீர் வடிந்திருந்தது. நிமிராமலேயே சொட்டவிட்டார்.

நீ எனக்கு துரோகம் செய்ய முடியாதுடா! குழந்தைடா நீ! மறைவா ஏதாவது செய்திருப்பேடா நீ! மறைவா ஒரு கவிதைப் புத்தகம் வாங்கற மாதிரி, மறைவா ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பேடா நீ! இதிலே துரோகம் என்னடா துரோகம்! சின்ன வயசிலே ரகசியமா ரவா உருண்டையை எடுத்து தெரியாமச் சாப்பிடுவியே அதைப் போலத்தாண்டா! அவர் குரல் தெளிவாக வந்தது. அதுமட்டுமல்ல!

அவரது தொனியிலேயே இதுபோன்ற கனிவு என்றும் இருந்ததில்லை. இது போன்ற தெளிவும் இருந்ததில்லை. அதிசயப்பட்டான் அவன்.

அப்பா! என்றான் தணிந்த குரலில்.

இவ்வளவு விசாலமா இருப்பேன்னு தெரியாது அப்பா! நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேம்பா!

பண்ணிக்கிட்டேன்! அதை என் சொந்த ஆசையிலே பண்ணிக்கிடலை அப்பா. தியாகத்துக்காகப் பண்ணிக்கிட்டேன்! ஒரு அழுகையில் குரல் வந்தது.

அப்பாவின் சலனம் நின்றது. அவனை நோக்கி நிமிர முனைந்தார். முடியவில்லை.

தியாகத்துக்கா? என்றார். யாரையேனும் ஊனமுள்ள பெண்ணைப் பண்ணிக்கிடல்லையே? என்றார் தாபத்தோடு

இல்லைப்பா! நல்ல அழகிதான்! நீ பார்த்தா மெச்சுவே! உங்க தங்கைக்கு ஒரு ஊனக் கணவனைப் பண்ணி வச்சதுக்காக நீங்க ரொம்ப வருஷம் வருத்தப்பட்டது எனக்குத் தெரியும் அப்பா! இவள் ஊனமில்லே! ஆனா நான் அன்னிக்கு பண்ணியிருக்காட்டா அவள் வாழ்க்கை ஊனமாகவே போயிருக்கும்! அவர் அதற்கு மேல் பேசவில்லை. தாயார் அவர் அருகில் போனாள்.

டேய்! டாக்டரைப் பாருடா! என்றாள் கலவரத்தில்! ! !

அந்த ஐந்து தினங்கள் எப்படி போனது என்று தெரியவில்லை. ரவீந்திரர் இன்டென்ஸிவ் போட்டோல் இருந்தார். அம்மா தவித்தாள். அவனுக்கு அழுகை குமறியது. அவன் திருமணம் ஒரு அதிர்ச்சி கொடுத்து விட்டதா? கடவுளே! என் தந்தையைக் காப்பாற்றிக் கொடு! என்று மனம் உருக வேண்டினான். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன்! அவரை ஒரு முறை வாழ விடு! என்றான் தழதழத்து.

ஆறாம் நாள் டாக்டர் அவனை நோக்கி வருவது தெரிந்தது.

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter