|
அத்தியாயம் 4
புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை
தந்தையின் நண்பர் சேதுராம் வரப் போகிறார் விஜய்க்கு மணம் பேச. தாயார் அதைச் சொன்னதும் விஜய் முகத்தைக் குனிந்தான். இதயம் திரண்டு கண்ணில் ஒரு முத்து போல் உருண்டது.
என்னடா மௌனம் ஆயிட்டே? என்றாள் அம்மா.
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை! அதுக்குள்ளே கல்யாணமா?
அதான் சிபாரிசுக் கடிதம் கிடைச்சாச்சே! சீக்கிரம் வேலை கிடைச்சுடும் இல்லையோ?
கிடைச்சுடும்! ஆனால் கையிலே வர வரை நம்ப முடியுமா?
நல்லா நம்பலாம்! கடிதம் கொடுத்தவர் சாதாரண ஆளா? நான் சொல்றதைச் சொல்லிட்டேன்! நீ என்னவோ சொல்லப் போறேன்னு சொன்னியே! என்ன?
ஒன்னும் பெரிசில்லைம்மா! அப்புறம் சொல்றேன்!
மத்தியானம் சேதுராம் தம் மனைவியோடு வந்து இறங்கினார்.
உபசாரம் தடபுடல்!
கூடத்தில் நெய் பண்டங்களின் மணங்கள் கமழ்ந்தன. விஜயை சேதுராம் பூரண திருப்தியோடு பார்த்தார். முகத்தில் சந்தோஷம் ஓடி ஓடி வந்தது. சம்மதம் கொடுத்தால் அன்றைக்கே திருமணம் முடித்து விடுவார் போல இருந்தது.
அவர் மனைவி ஜாடை மாடையாய் விஜயைப் பார்த்து புளகாங்கிதம் ஆகிக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒரே பெண்! மகன் கிடையாது.
அதுக்கென்ன வேலை வர்றப்போ வரட்டும்! இல்லாட்டி நானே ஏற்பாடு பண்ண முடியும்! என்றார் சேதுராம்..
விஜயின் தந்தைக்கு மகிழ்ச்சியில் மேல் துண்டு கீழே விழுந்து கொண்டே இருந்தது.
அதுக்கென்ன சேதுராமா? உன்னோடு இப்படியாவது தொடர்பு கிடைச்சுதே, ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி !
கூடத்தில் இருந்த கலகலப்பும் போட்டோமளிப்பும், உள்ளே அறையில் வந்து விஜய் மீது மோதிய வண்ணம் இருந்தன. மனம் மெள்ள சோகமாகியது.
சுகுணா! என்று அது அழைத்தது.
சுகுணா மறுகலோடு அவனைப் பார்த்து நிற்பது போல் தோன்றியது.
சுகுணா! உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன்! என்று புலம்பலாக வார்த்தைகள் வெளிவந்தன.
மாலையில் திரும்பிய போது அப்பா உல்லாசமாகப் பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தார். நேராகப் பின்னம்பக்கம் தோட்டத்துக்குப் போனான். தொட்டியிலிருந்து நீர் எடுத்து அம்மா முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
அம்மா!
சந்தோஷமாக முகத்தைத் தூக்கியவள் சற்றே துணுக்கம் அடைந்தாள்.
என்ன இது? காலையிலிருந்தே பார்த்துக்கிட்டு இருக்கேன்! என்னவோ பறி போன மாதிரி நிற்கிறியே? என்றாள்.
அம்மா! பறி கொடுத்து விட்டுத் தான் வந்திருக்கிறேன்! என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.
அவன் தயங்கிக் கொண்டு தொட்டியின் பக்கம் பார்த்தான். உள்ளே அதன் நீர் மௌனமாக நின்றது.
அம்மா! ஒன்னு செய்வியா? என்றான்.
என்ன சொல்லு?
வருத்தப்பட மாட்டியே?
இல்லை.
எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்மா.
அம்மா கையில் உள்ள பிளாஸ்டிக் குவளை தொட்டியுள் விழுந்தது. தண்ணீரில் நிறைய அலைகள் சிலிர்த்தன.
ஏண்டா? என்றாள் அம்மா!
அதை அப்புறம் சொல்றேன்! கோவிச்சுக்காதே! என்றான் கெஞ்சிக் கொண்டு. அவள் அவனை இரக்கமாகப் பார்த்தாள்.

அம்மாவிடம் ஒரு நீண்ட மூச்சு! அவள் ரவிக்கை எல்லாம் வியர்வை ஒட்டி இருந்தது! முகம் மெலிந்து வாட்டத்தோடு இருந்தது. அவனுக்கே வருத்தம் பீறிட்டது.
இந்த வீட்டில் சுபிட்சம் போய் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!
குடும்பமே நலிந்து மெலிந்து விட்டதே!
பார்க்கலாம்! என்றாள் அம்மா. பிறகு வாளியில் ஊறிக் கொண்டிருந்த துணிகளை கைகளில் நரம்புகள் எல்லாம் புடைக்கும் வண்ணம் பிழிய ஆரம்பித்தாள்.
அவளை அந்த நிலையில் பார்ப்பதே மிக துக்கமாக இருந்தது.
இருதலைக் கொள்ளி எறும்புன்னு சொல்வாங்க! நானாத் தான் இருக்கும். எனக்கு எதுவும் செய்யத் தெரியலை ! மெள்ளத் தேம்பினான் விஜய். . மூக்கை ஒரு முறை உறிஞ்சினான்.
சுகுணா அவனை இரக்கத்துடன் பார்த்தாள். பார்ப்பது ஒரு சிலிர்ப்பாக இருந்தது. அவள் கண்களில் திவலை ஒட்டியிருந்தது.
அழாதீங்க! விஜய்! அழாதீங்க! என்றாள். மிருதுவான விரல்களால் அவன் முகவாயை நிமிர்த்தி விட்டாள்.
நீங்க என்ன செய்வீங்க விஜய்! திருமணப் பந்தலிலே என்னைக் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொன்னதே பெரிசு! அதை நடத்திக் காட்டியதும் பெரிசு! அதுக்கு மேலே குடித்தனம் வைன்னும் சொன்னா எப்படி? என்னைப் பார்க்கணும் என்கிற காரணத்திலே ராவோடு ராவா வந்திருக்கீங்களே அதுவே எல்லாத்திலேயும் பெரிசு!
வார்த்தைகள் துக்கத்தில் நனைந்து வந்தன.
அந்த விஸ்தார கிணற்றடியில் துவைக்கும் கல்லின் மடியில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
தொட்டித் திண்ணையின் விளிம்பில் அவன் சாய்ந்திருந்தான்.
சின்னச் சந்திரிகை வீசிக் கொண்டிருந்தது. பாதி உலகமும் சொப்பனமாகத் தெரிந்தது.
நள்ளிரவு நெருங்கி இருக்கும். எங்கும் ஆழ்நிலை தியானமான நிசப்தம். நெல்லூர் செல்லும் பாதையில் பூங்குழல் என்னும் கிராமம் அது. இரவோடு இரவாக வந்து அவன் அவளைச் சந்தித்திருந்தான்.
இல்லை சுகுணா! தினமும் புழுவா துடிக்கிறேன்! தூக்கம் வர மாட்டேங்குது. எந்தக் போட்டோயமும் செய்ய ஓடறதில்லை. அப்பாவானா திட்டறார். ஜடம் மாதிரி இருக்கியேன்னு! உன் நினைவுக்கு இவ்வளவு சக்தி இருக்கும்னு தெரிஞ்சா, நிச்சயம்; உன்னைக் கல்யாணம் செய்திருக்க மாட்டேன் சுகுணா! இது சத்தியம் !
அவளுக்கு சிரிப்பு வந்தது. அழுகையும் வந்தது.
நான் ஒரு துரதிர்ஷ்டக்காரி விஜய்! என்றாள். எனக்குத் திருமண அதிர்ஷ்டம் வந்தது.
ஆனா கணவன் இல்லாம நின்னுது. அப்புறம் கணவன் அதிர்ஷ்டம் வந்தது. குடும்பம் இல்லாம நிக்குது. மொத்தத்திலே......................
அவன் அவள் வாயைப் பொத்தினான். ஏதாவது சொல்லிடாதே சுகுணா! என் மனசு வெந்துடும்!
இப்போது பாதி வெந்திருக்கேன்! அப்புறம் நான் பஸ்பமாப் போயிடுவேன். கவலையே படாதே. சீக்கிரம் நமக்குக் கடவுள் வழி அமைச்சுக் கொடுப்பார் பாரு!
ஒரே ஒரு விஷயத்திலே தயங்கறேன். வீட்டிலே மட்டும் இல்லை. கிராமத்திலேயும் நல்ல பெயர் எடுத்திருக்கேன். ரவீந்திரன் பிள்ளையா? பக்கம் பார்க்கமாட்டானேன்னு ஜனங்க சொல்வாங்க! உயர்ந்த விசுவாசம் என் மேலே. அப்படிப்பட்டவன், திடீர்னு பானையைப் போட்டு உடைக்கிறாப்போல எதையும் செஞ்சிடக் கூடாது.
அப்பா ரொம்ப ரோஷக்காரர். யாரிட்டேயும் பணிஞ்சு போக மாட்டார். ரொம்ப கவுரவம் பார்ப்பாரு. குடும்பத்திலே ஒரு பழி வர விடமாட்டாரு. அப்படி எதாவது நடந்ததுன்னு கேள்விப்பட்டா அந்த இடத்திலேயே மனசு உடைஞ்சு செத்துப் போயிடுவார். அவ்வளவு உணர்ச்சியானவர் அவர். அப்பாவை நம்பித்தான் குடும்பம் இருக்கு. அப்பா போனா அம்மா இல்லை! தங்கையும் இல்லை!
என் தப்பிதத்தாலே அப்பா மறைஞ்சுட்டார்னு வை! அம்மாவும் தங்கையும் என்னை அன்னியமாத்தான் பார்ப்பா! சொந்தக்காரன்னு நினைக்கவே மாட்டாங்க! இந்த ஒரே விஷயத்திலேதான் தத்தளிக்கிறேன் சுகுணா!
இல்லாட்டி எப்பவோ வீட்டிலே சொல்லியிருப்பேன். மேள தாளத்தோடு உன்னை அழைச்சிட்டுப் போயிருப்பேன்.
அவள் மௌனமாக இருந்தாள். கண்கள் கொட்டிக் கொண்டு நின்றன. அவள் பங்கிலும் நிறைய காரணங்கள் தேங்கி இருந்தன. திருமணமாகி பல மாதங்களாகியும் அவள் இன்னும் வாழாக் கன்னியாக இருந்து வருகிறாள். ஊரில் அதன் கசமுசாக்கள் காற்றிலே மிதக்கின்றன. அவள் வெளியே வருவதை நிறுத்திவிட்டாள்.
வீடும் தோட்டமும் தான் அவள் வாழ்க்கையாகப் போய்விட்டது. அப்பா ஒரு மாதமாகப் படுத்திருக்கிறார். அருகில் போனால் போதும், ஒன்றும் சொல்லமாட்டார். ஒரே ஒரு பார்வை மட்டும் பார்ப்பார்! அதில் எவ்வளவு இரக்கம் இருக்கும்! தாபம் இருக்கும்! சோகம் இருக்கும்!
சுகுணா! இப்படி ஒண்ணும் செய்ய முடியாதவனாப் போயிட்டேன்னு ஒரு சமயம் அந்தப் பார்வை சொல்லும். ஒரு சமயம், நீயே உன் வாழ்க்கையைக் கெடுத்துகிட்டியே, பாவிப் பொண்ணு! என்று சொல்லும்.
அவளால் அந்தப் பார்வையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.
ஒரு விம்மலோடு எழுந்து விடுவாள். பிறகு அவளுக்கு கிணற்றங்கரைதான் புகலிடம்.
சரம் சரமாகக் கண்ணீர் உகுத்து நிற்பாள். அப்போது ஒரு ஆத்திரம் கூடத் தோன்றும். விஜய் மட்டும் எப்போதாவது வந்தால் ஒரே வார்த்தை, என்னை அழைச்சிட்டுப் போறீங்களா?
இல்லையா? என்று கேட்டுவிட வேண்டும். எத்தனை தரம் மனத்தில் மானசீகமாக அதை நினைத்திருக்கிறாள். ஆனால், இன்று............
இன்று அவன் உயிரும் சதையுமாக அவள் முன் நின்ற போது தன் சோகத்தை விட அவன் சோகந்தான் அதிகமாகத் தோன்றுகிறது. அவன் துயரத்தைத் துடைக்கத்தான் மனம் தாவுகிறது.
சுகுணா! ஏதாவது திட்டு சுகுணா! என்னை ரெண்டு திட்டாவது திட்டு. மனசு சமாதானப்படும். இல்லாட்டி விம்மியே செத்துருவேன், சுகுணா! என்று கையை நீட்டினான் அவன். அவள் ஏந்திக் கொண்டாள்.
இல்லை விஜய்! ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். உங்களுக்கு எதிரா ஒரு எழுத்துகூட சொல்லமாட்டேன். இது உறுதி! என்று உன்மத்தமுடன் கூறினாள் அவள். ! ! !
இரண்டு மாதங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடிவிடுகின்றன? அன்று விஜயின் அப்பா பின்னம்புறம் போனவர் கிணற்றடியில் விழுந்து கிடந்தார்.
விஜய்! என்று அம்மா கத்தினாள். மூவரும் சேர்ந்து அவரை உள்ளே எடுத்து வந்தார்கள். படுக்கையில் கிடத்தினார்கள். மாலையில் நகரத்திலிருந்து டாக்டரை அழைத்து வந்தார்கள்.
பலவீனம் தான்! என்று டாக்டர் ஒரு மேலெழுந்தவாரி காரணத்தை வலியுறுத்தி விட்டுப் போய்விட்டார். மறுபடி அப்பாவால் எழுந்திருக்க முடியவில்லை. சாதத்தட்டு படுக்கைக்குப் போனது.
பதினோரு மணிக்கு விஜய்யை அழைத்தார் அவர்.
வந்ததும் இடத்தைக் காட்டி, உட்கார்! என்றார். உட்கார்ந்தான்.
பெரிய பீடிகையாக ஒரு நீள மௌனத்தில் இருந்தார். அவர் அப்படி இருந்ததே இல்லை. அப்படி அவனை அழைத்ததும் இல்லை.
அப்படி பேச முயற்சித்ததும் இல்லை.
கடைசியில் --- விஜய்! என்றார்.
விஜய் நிமிர்ந்து பார்த்தான். கண்கள் மங்கி இருந்தன.
Next
page..... |