First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்யக்கோரி இலங்கை அரசு கோரிக்கை - மதிமுகவிலிருந்து எல்.கணேசன், செஞ்சிராமசந்திரன் நீக்கம் - தமிழ்நாட்டிற்கு தினமும் 100 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு ஒப்புதல்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 3

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

மணப்பெண் சுகுணா நிறுத்துங்க! என்று வர,

இதென்ன இவள் இப்படிச் செய்கிறாள்? என்று இரண்டு படித்த பெண்மணிகள் எழுந்து அவளை நோக்கி அவசரித்து வந்தார்கள்.
அவள் கையைப் பிடித்துக் கொண்டு,

என்ன சுகுணா இது? நகை வந்தாச்சு! தெரியாதா? சம்பந்தி ஒத்துக் கொண்டாச்சு! தெரியாத உனக்கு? என்றார்கள்.

சுகுணா! வா! வா! முகூர்த்த நேரம் போயிட்டிருக்கு. மணையிலே உட்காரு! என்று செல்லமாக, தணிந்த குரலில் சற்று கண்டித்தே கூறினார்கள்.

சுகுணா முகத்தில் அந்தப் பார்வை மாறவில்லை. விழிகள் இரண்டும் சிலை விழிகள் போல அப்படியே நின்றன.

அக்கா! நீங்கள் எல்லாரும் விடுங்க! என்றாள் உதாசீனமாக.

நிலைமை சரியில்லை என்று அறிந்து ஆண் பெரியவர்கள் கூட்டத்தை விலக்கி வந்தார்கள்.

என்ன சுகுணா! நடந்தது நடந்தாச்சு! இப்போ எல்லாம் சுபமா முடியணும். வா! வா! என்று மணை நோக்கி அழைத்தார்கள்.

சுகுணா வரவில்லை. அவர்களையும் தவிர்த்துவிட்டு, நழுவியவாறு நேராக மாப்பிள்ளை முன் நின்றாள். தந்தை பக்கம் திரும்பினாள்.

இந்தாப்பா! எழுந்திருங்க! என்று கூறினாள்.

தந்தை பதறி அடித்து எழுந்தார். அவள் அருகில் வந்தார்.

நகை தாரை வார்ந்துடுத்து, கிடைச்சதும் போடறோம் ! இல்லாட்டி ஆறு மாசத்திலே புதுசு போடறோம்னு சொன்னீங்க! இந்த ஆண்பிள்ளை ஒத்துக்க மாட்டேன்னார். இந்த விஷயத்துக்கு ஒத்துக்கிடலைன்னா, வாழ்க்கையிலே எந்த விஷயத்துக்குத்தான் அனுசரிச்சுப் போவார்? இவரை நான் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன். இவரும் ஒரு ஆண்பிள்ளையா? தூ!

சொற்கள் ஆலங்கட்டித் துளிகள் போல் படீர் படீர் என்றுள விழுந்து உடைந்தன.

சுகுணா ! சுகுணா ! என்று பெண் குரல்கள் கண்டிப்போடு கேட்டன.

அம்மா, சுகுணா! என்று தந்தை கண்கலங்க, அவள் கைகளைப் பற்றினார்.

ஒரு பருமனான அம்மாள் கூடத்திலிருந்து பீறிக்கொண்டு வந்தாள். சுகுணாவின் கைகளைப் பிடித்தாள். அவள் பேசுவதற்குள் சுகுணா வெட்டிப் பேசினாள்.

நீங்க விடுங்கம்மா! நான் இவரை பண்ணிக்க மாட்டேன். வேறே ஒரு கழுதையைப் பண்ணிக்கச் சொல்லுங்க! பண்ணிக்கிறேன்! என்று சீறி ராஜ நாகம் போல் நின்றாள்.

மாப்பிள்ளையின் மீசை டுபு டுபு என்று துடித்தது. ஒரு கோபப் பார்வை அவனிடமிருந்து வீசி வந்தது.

அவ்வளவு திமிரா? என்று கத்தினான். சபையில் அது எதிரொலித்தது..

திமிர்னு சொல்லாதே! நான் உன் பொண்டாட்டி ஆகல்லே! போடா வாசலைப் பார்த்து!

வார்த்தைகள் ஏவுகணைகளாகப் பறந்தன.

உஷ்ணமாக ஒரு பெரிய சுவாசத்தை விட்டு, முகத்தை விருட்டென்று திருப்பி, கும்பலுக்குள் விடுவிடென்று நடந்து மறைந்து போனாள்.அடுத்த பதினைந்து நிமிடத்தில் சமாதானப் பேச்சுக்கள் இருபுறமும் கிளம்பின.
அதில் ஒரு உடன்பாடு வருவது போலிருந்தது.

பெண்ணைக் கூப்பிடுங்க! என்று பல திசை நோக்கிக் குரல்கள்!

சுகுணா அப்போது ஒரு தனி அறையில் பூக்கூடைகளிடையே அமர்ந்திருந்தாள்.

பல குரல்கள் சூழ்ந்து அவளை இழுக்க வந்தன.

இந்தாங்க! அந்த ஆளுக்கு நான் மாலை போட மாட்டேன்! இது சத்தியம் ! என்று தீ போல அவள் கூறினாள்.

அறைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்த பந்து போலத் திரும்பி வந்தார்கள். சம்பந்திகளிடையே சலசலப்பு!

ஒவ்வொருவராக வெளி நடந்தார்கள்.

பெண்ணின் தந்தை முகத்தில் துக்கம் குமுறியது! போட்டோதவித்து எல்லாவற்றையும் பார்த்தார்.

கல்யாணம் நிற்பது எவ்வளவு பெரிய அவமானம்.?

அதை அவரால் ஏற்க முடியுமா?

சுகுணா! சுகுணா! என்று போய் அவளிடம் பேசிப் பார்த்தார்.

இதுக்கே இவ்வளவு பாடுபடுத்தின அந்த ஆண்பிள்ளை பின்னாலே என்னை ஒழுங்கா வச்சுப்பானா?

பிசாசு மாதிரி பணம் கேட்டுக்கிட்டே இருக்க மாட்டானா? எனக்கு நிம்மதி வருமா அப்பா? அழுது கொண்டே கேட்ட அவள் கேள்விகள் , போட்டோய கத்தியாக அவரைத் தைத்தன..

தலையைத் தொங்கப் போட்டு தந்தை திரும்பினார்.

ஒரு மூதாட்டி அவர் முன்னே தோன்றினாள்.

இந்தா.......... பலராமு!.......... நம்ம பக்கத்திலே ஒரு பையனை உடனே பிடி.......... முகூர்த்தம் போயிடப் போகுது.

அத்தை முறை அவள்! அவள் சொன்னது அவர் மனத்தில் பலமாக ஆழ்ந்து, செய்திகள் பறந்தன. எங்கும் அவசரங்கள் பறந்தன. வந்திருந்த உறவினர்களில் ஒரு புதுப் பையனை தேடினார்கள். எதுவும் தோதுபடவில்லை! தகுதியுள்ள ஒரு பையன் ஆஸ்துமாவில் தவித்துக் கொண்டிருந்தான். திருமணம் செய்து கொள்ள மறுத்தான்.

இத்தனை நேரமும் நடப்பதைக் குறுக்கிட விரும்பாத விஜய் இப்போது எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானான். ஒருவேளை அவன் சீக்கிரமே வந்திருந்தால் திருமணம் ஒழுங்காக நடந்திருக்குமோ? மனம் வெதும்பியது!

மெள்ள அடிகளோடு நடக்க ஆரம்பித்தான்.

அடுத்த காட்டேஜ் தாண்டும்போது சன்னல் வழியே எதேச்சையாகத் திரும்ப, உள்ளே அவள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சுகுணா!

அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மனம் அவனைத் தூண்டியது. பதட்ட நெஞ்சுடன் படிகளில் ஏறினான்.

அறைக்குள் மெள்ள பிரவேசித்தான்.

உள்ளே போன போது திக் என்று அடித்தது. அவள் பிரமையோடு அமர்ந்திருந்தாள்.

சந்தன நிறமான மேனியில், புதுக்காறை கட்டி, அழகிய கால்களை ஒருவிதமாக மடக்கி உட்கார்ந்திருந்தாள்.

கண் மை கலைந்திருந்தது.

தலை தளர்ந்து இழைகள் நெற்றி கன்னமெல்லாம் வழிந்திருந்தன.
முகம் ஒரு சாம்பிய மலர் போல வாட்டம் காட்டியது. ஒரு புயல் ஓடி அவளை முறித்துப் போட்டிருந்தது. அதை உணர்ந்த அவன் நெஞ்சில் சொல் அப்படியே நின்றது. சோகம் அதை மூழ்கடித்தது.

தத்தளித்தான்.

கடைசியில் --- மேடம்! என்றான்.
அவள் நிமிர்ந்தாள்.

நீங்களா? என்றாள். மெல்லிய ரோஜா உதடுகள் நடுங்கின.

நான் தப்பு பண்ணிட்டேன். பெட்டி என்னுடையதான்னு பார்த்து எடுத்திருக்கணும். அல்லது காலைலே வந்திருக்கணும்! என்னாலேதான் எல்லாம் நின்னு போச்சு! ரொம்ப மன்னிக்கணும் ! தழதழப்பாகக் கூற, கண்ணில் ஈரம் கரைந்தது.

மன்னிப்பு எதுக்கு? என்றாள். மெதுவாக, --- என் விதி ! என்று முனகலாகக் கூறினாள். அறையில் யாருமில்லை..

கல்யாண சாமான்கள் கூளங்களாகக் கிடந்தன. பூக்கள் கூடைக்குள் புதைந்து கிடந்தன. சந்தனம், கஸ்தூரி , பன்னீர், கற்பூரம் எல்லாம் சேர்ந்து வினோத மணத்தை வீசிக் கொண்டிருக்க, அவற்றின் மணத்தூடே சோகம் ஊடுறுவியிருந்தது.

சுவர் மீது ஆணியில் பெரிதாக இரண்டு மாலைகள் தொங்கின.

அவற்றிலிருந்து ஒவ்வொரு இதழாக உதிர்வதைப் பார்த்தால் மாலை கண்ணீர் உகுப்பது போலிருந்தது.

நான் வரேன்! என்று அவன் சொல்ல, பாதி வார்த்தை அழிந்து போயிற்று. அவள் என்னவோ சொல்ல வேண்டி வாய் திறந்தாள்.. ஆனால் நின்று விட்டாள்.

அவளது உணர்ச்சிமிகும் கண்கள் அவன் மீது வீசிக் கொண்டு நின்றன. அவை அவனைத் தடைப்படுத்துவது போலிருந்தது.

மெள்ள எழுந்து அவன் அருகே வந்தாள்.

கையிலே காயம் பட்டதே! குணமாயிடிச்சா? என்றாள் ஆதுரமாக.

ஆயிடுச்சு ! என்று கையைத் திருப்பினான் அவன்.

சிவந்த கைகள். காயங்கள் ரேகைகள் விட்டிருந்தன.
கலக்கத்தோடு அவள் பார்த்தாள். அவள் கைகள் அவன் கை மீது படிந்தது. கீறல்களை அவள் உள்ளங்கையால் பொத்தினாள். அப்படிப் படிந்த கை அப்படியே நின்றுவிட்டது.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

அவள் வாய் கோணியது.

நேத்திக்கே........ என்றாள் இழைத்துக் கொண்டு.

உங்க கையைப் பிடிச்சாச்சு! பிடிச்சாச்சு! அரற்றிக் கொண்டு சொன்னாள். அவளால் நிற்க முடியவில்லை. கூம்பலாக அவன் காலடியில் உதிர்ந்து விழுந்தாள். ! ! !

இரண்டு நாட்களில் விஜய் ஊர் திரும்பும் போது அவன் மீது சந்தனம் மணத்தது.

கையில் ஒரு காப்பு கட்டியிருந்தது.

ரயிலை விட்டு இறங்கியதும் ஊருக்கு ஒரு மைல் தொலைவு போக வேண்டும்.

வாகனம் ஏதாவது வைக்க மனமில்லை. குறுக்கே தரிசை வெளியில் நடக்க ஆரம்பித்தான்.

மாலை நேரம் அது.

இரண்டு பெரிய மேகங்கள் மேலை விளிம்புகளை மறைத்து ஊதாவாக மாறி இருந்தன. அழுகை அவனுக்கு உள்ளே குமைந்தது. விழிகள் நிறைந்து விட்டன..

அம்மா இல்லாமல் கல்யாணமா?
அப்பா இல்லாமல் கல்யாணமா?
தங்கை இல்லாமல் கல்யாணமா?
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

எனினும் அதைத் தான் அவன் செய்திருந்தான்.
செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். நினைத்திருந்தாலும் அதை விலக்கி இருக்க முடியாது. தெய்வமே அவனைக் கொண்டு அங்கே சேர்த்து விட்டது. இல்லாவிடில் வேங்கடவன் வாழும் திருமலையில் அவனுக்குக் கல்யாணம் நடக்குமா?

ஏழுமலையானின் நேர்பார்வையில் நடக்குமா? ஏனோ கண்ணில் நீர் குழைந்தது. அவனை அறியாமல் சொட்டுகள் உதிர ஆரம்பித்தன. மூஊர் நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரின் தோற்றம் அவன் கண் திவலையில் ஆடியது. தெரு வந்ததும் நின்றான். தன் மீது மணக்கும் போட்டோமள சுகந்தங்களை அவனே ஒரு முறை முகர்ந்தான். நீண்டு ஒரு முறை மூச்சுவிட்டான்.

கையிலிருந்த காப்பை மெள்ள அவிழ்த்தான். பத்திரமாக எடுத்து பெட்டியின் அடியில் வைத்தான்.

வீடு சேர்ந்து படியேறினான். உள்ளே வந்ததும் அம்மா அவனைப் புதுமையாகப் பார்த்தாள்.

வேலை கிடைச்சுடுத்தா? என்று கேட்டாள்.

இல்லை ! சிபாரிசு லெட்டர் கிடைச்சுது! என்றான்.

வேலை எப்போ?

போய் கேட்கணும்!

வேலைதான் குதிரலையா? போ, பின்னே ஏண்டா முகத்திலே இவ்வளவு களை கட்டிட்டிருக்கு? அம்மா கேட்டுவிட்டாள்.

திடுக்கிட்டான் அவன். கங்கணத்தை எடுத்துவிட்டால் போதுமா? உள்ளே மென்மையாக நிறைந்துள்ள உணர்வுகளை எப்படி அகற்ற முடியும்?

தங்கை சுதா ஓடி வந்தாள். ஏது, நம்ப விஜய் ஒரு மாப்பிள்ளை மாதிரி வந்திருக்கிறானே! என்று கேட்டாள்.

வேலை கிடைக்காத செய்தி வீட்டில் இதற்கு முன் திரும்பத் திரும்பக் கேட்டு அலுத்த செய்தி.

அப்பாவும் கேட்டுவிட்டு முகத்தைக் கீழே இழுத்தார். ஒரு கொத்து இருமல் அவரைப் பாடாகப்படுத்தியது. விசித்திர நுரையீரல் வியாதி. விஜய் அன்று சரியாகச் சாப்பிடவில்லை.

சீக்கிரம் வருவீங்களா? என்று குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. சுகுணாவின் ஆழ்ந்த பார்வை அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தது.


விஜய்! உங்க மீது பெரிய பாரத்தைத் திணிச்சுட்டோம். உலகத்திலே எல்லாரும் எல்லாத்துக்கும் சம்மதிச்சுடுவாங்கன்னு சொல்ல முடியாது. ஒரு வேளை உங்களுக்கு வீட்டிலே இந்த திருமணத்துக்குச் சம்மதம் கிடைக்கலைன்னா...............

நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சுகுணா! என்று தழதழப்பில் கூறினான் அவன்.

ரயில் நகர்ந்த காட்சியும் நினைவில் வந்தது.

அவள் அவனது கண்களை அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

ரயில் இரக்கமில்லாமல் அவனை இழுத்தது. அது நகர நகர, பிளாட்பாரத்தில் அவள் உருவம் சோகமாக தனிமையாக அபலையாகத் தெரிந்தது. நினைவுகளில் நான்கு நாட்கள் ஓடிவிட்டன.

ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை.

ஒன்பது மணிக்கு அவன் போஸ்டாபீசுக்கு ஓடினான். போஸ்ட்மேன் தங்கவேலு வெளிவரும்போது அவரை வழி மறித்தான்.

ஸாருக்கு கடிதாசு இருக்கு! என்று அவர் கொடுக்க, அதை வாங்கி மேலே பார்த்ததுமே போட்டோந்துவிட்டது. அவசர அவசரமாகத் தனியாக ஓடினான்.

ஊரில் குளக்கரையைத் தாண்டி மாமரம்.
அதன் நிழலில் அமர்ந்து கடிதத்தைப் பிரித்தான்.
முத்து முத்தாக அவள் கையெழுத்து.

என் இதய மன்னருக்கு,
ஊர் சென்று தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. பரவசங்கள் என்னைத் திணற அடித்தன. உங்களை நான் திருமணம் செய்தது வெறும் கனவல்ல என்று தெரிந்தது. .............................................

முத்து முத்தாக அவள் கவிதை வரிகள் நீண்டன. அத்தனையும் அவள் நெஞ்சின் அலைகள். கடைசி வரிகள் அவன் நெஞ்சை அழுத்தின.

.................................................... பெற்றோர்களுக்குத் தெரிவிக்க
சந்தர்ப்பம் பார்ப்பதாக எழுதி உள்ளீர்கள்! சீக்கிரம் அது கிடைக்கும் என்று நம்பிக்கை! என் நம்பிக்கை வீணாகாது அல்லவா? உங்களை நான் சீக்கிரம் பார்க்க வேண்டும்.

உங்கள் சுகுணா.

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான். பையில் கடிதத்தை வைத்து கொண்டு வீடு நோக்கி நடந்தான். வீட்டில் நுழைந்தான். அம்மா கூடத்தில் உள்ள சுவாமி படங்களைக் கும்பிட்டுவிட்டு, அவன் நிழல் பார்த்து திரும்பினாள்.

மஞ்சள் பூசிய அவள் முகத்தில் மங்களம் வழிந்தது. தயங்கியவாறு அவன் நின்றான்.

அம்மா! என்றான்.

இப்படி ஒரு ஈன சுவரத்தில் அவளை அழைத்ததில்லை.

என்னடா?

உன்கிட்டே ஒன்று சொல்லணும் அம்மா! சொல்லட்டுமா?
அம்மா லேசாகப் புன்னகை காட்டினாள்.

அதுக்கு முன்னாடி நான் உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? என்றாள்.

சொல்லு அம்மா! என்று கண்களை அவன் விரித்தான்.
அப்பா சிநேகிதர் சேதுராம் இல்லே......

ஆமாம். அவர் வரப் போறார்.

எதுக்கு?

உன்னைப் பார்க்க!

ஏன்?

கல்யாணத்துக்கு................. என்றாள் அம்மா.

 

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter