|
அத்தியாயம் 1
புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை
மணி நான்கு அடித்தது.
ஜெயில் சூப்பிரண்டெண்ட் குணசாகர் கடைசி பைலை கையெழுத்திட்டு நிமிர்ந்தார். நாற்காலியில் சாய்ந்தார். வீட்டுக்கு உடனே போக வேண்டும் என்று நினைப்பு. அதற்குள் வாசலில் ஒரு நிழல். வார்டன் கோபால் எட்டி பார்த்தான். என்ன மிஸ்டர் என்றார் சாகர். கோபால் உள்ளே வந்தான்.
“ஸார் கைதி பீமனும், வீரனும் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க! குரூப் பிரிச்சுக்கிறாங்க!”
அடக்கறது கஷ்டமாயிருக்கு! சாகர் முகத்தை சுளித்தார். இதைப்போல் தினம் தினம் எத்தனை கேஸ்கள். பிரச்சனைகள். என்ன செய்ய சொல்றீங்க? என்றார் சாகர் அவனை பார்த்து.
ரெண்டு பேரையும் பிரிச்சுட்டா நல்லாருக்கும்.
சரி. செய்றேன் போங்க!
கோபால் வெளியே போனான். உண்மையில் அந்த கைதிகள் பற்றி நிறைய புகார்கள்.
சமையல்காரனிலிருந்து, சிறை ஆஸ்பத்திரி சிப்பந்தி வரை கூறிவிட்டார்கள். இங்கே இனிமேல் வைத்திருப்பது தவறு! வேலூருக்கு மாற்றலாம் என்பது சாகரின் நினைப்பு!
மேலிடத்திற்கு எழுதிவிட்டார். ரகசியமாக அதை செய்து முடிக்க வேண்டும்.
பெருமூச்சுடன் சாகர் எழுந்தார். மனம் வெதும்பியது. ஜெயிலின் உள்ளே கைதிகள் இருப்பதைவிட அவர்தான் இருப்பதாக தோன்றியது. தினம் தினம் கைதிகளின் முகங்கள் பார்த்து வெறித்துவிட்டது. இவைகளைத்தவிர,
பிளசண்டாக ஏதாவது உண்டா? வெளி உலக ஆண் பெண்களை பார்த்தோம், பேசினோம், சந்தோஷப்பட்டோம் என்று உண்டா? ஜெயில் கோட்டைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறதே! இதற்காகவா ஐ.பி.எஸ் படித்தோம்? வெறுப்பில் எழுந்தார். மணி அடித்தார். ஒரு சேவகன் உள்ளே வந்தான். அவனும் ஒரு கைதிதான்.! ஆபிசில் வேலை செய்கிறான்.
எல்லாம் குளோஸ் பண்ணு! நான் கிளம்பிட்டேன்! என்றார். கதவு சாத்தப்பட்டது. கீழே இறங்கி வருவதற்குள் கையில் அவர் பையை எடுத்துக்கொண்டு சேவகன் கூடவே விரைந்து வந்தான். ஜெயில் கோட்டையின் பெரிய கதவை சாகர் அடைந்தார். கதவுக்குள் சின்ன கதவு ஒன்று உண்டு. அந்த சின்ன கதவின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டது.
அப்போது காலடி சத்தம் அவசரமாக கேட்டது. திரும்பி பார்த்தார். இப்போது வார்டன் சின்னச்சாமி ஓடிவந்தான். அந்த அவசரம் அவர் முகத்தை சுளிக்க வைத்தது.
என்னப்பா? என்றார் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
கைதி நம்பர் 405 ஸார்! என்றான்.
ஓ! என்றார்.
ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் பெண்டிங் விஷயம். அந்த கைதி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தான். தனி அறை கொடுக்கும்படி கேட்டிருந்தான்.
சிறையில் தனி அறையை யாரும் கேட்க மாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள். பொதுவாக தூக்கு தண்டனை கைதிகளைத்தான் அதில் போட்டு வைப்பார்கள். அந்த அறையில் தனியாகவே இருக்க வேண்டும். சிறை சிப்பந்திகளை தவிர யாரும் வர மாட்டார்கள். பேச்சுத்துணைக்கு யாரும் கிடையாது. எனவே இந்த தனி அறை பிடிக்காமல் கைதிகள் எல்லாரும் பொது அறைதான் விரும்புவார்கள்! மற்ற கைதிகளோடு பொது அறையில் பேசிக்கொண்டு இருக்கலாம். அதைதான் அவர்கள் விரும்புவார்கள்.
இந்த 405 கைதி பலமுறை தனி அறை கேட்டுவிட்டான். ஒரு வித்தியாச ஆசாமியாக இருந்தான். இன்று முடிவு எடுக்கிறேன் என்று சாகர் சொல்லியிருந்தார். ஆனால் முடிவு எடுக்காமல் வீட்டுக்கு போவது சரியில்லை...... மனசில் அது சின்ன வலி கொடுத்தது.
ஏம்பா? கைதி எப்படிப்பட்டவர்? என்றார் அவர்.
நீங்கதான் பார்த்திருக்கீங்களே! ஒரு மாதிரியா இருப்பான்! ஆனா ரொம்ப ஒழுங்கு! ஒரு பேச்சை மீற மாட்டான்.
ஏதாவது ஏடாகூடம் பண்ண மாட்டானே?
அதாவது தற்கொலை ஏதாவது செய்துகொள்ள மாட்டானே என்று சாகர் கவலை.
அப்படி தோணலை சார். அந்த அறையிலே ஒண்ணும் செய்ய முடியாதே சார்.
யோசித்தார் சாகர். ஏதாவது முடிவெடுத்தாக வேண்டும்.
சரிப்பா. உடனே மாத்திடு!
வார்டன் அவசரமாக திரும்பி போனான்.
சாகருக்கு இப்போது மனதில் நிம்மதி. சிறைக்கூடத்தின் சின்ன வாசலில் கலை வைத்து வெளியே வந்தார். வெளியில் வந்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சு. ஆபிஸ் தொல்லைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். வீடு அருகில்தான். 100 கெஜ தூரத்தில் குவார்ட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள். ஜெயில் கோட்டையின் அருகிலேயே வீடு. அதுவும் சாகருக்கு மனக்கஷ்டம்தான்.
நகருக்குள் எங்கேயாவது கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? வீட்டுக்கு நடந்தார் சட்டையை அவிழத்து சோபாவில் அமர்ந்தார்.
மனைவி கருணா பொறுமைசாலி. காப்பியை கொடுத்துவிட்டு சிறிது பேசினா£ள். அவர் காப்பி அருந்தியதும் அவள் உள்ளே போய்விட்டாள். டி.வி.யை போட்டு காலை நீட்டிக்கொண்டு சோபாவில் உடம்பை தளர்த்தியவாறு சாகர் பார்க்க ஆரம்பித்தார். இரவு எட்டு மணிக்கு குணசாகருக்கு ஸ்பெஷல் ரவுண்ட் உண்டு. அதற்காகதான் சீக்கிரம் வீட்டுக்கு போய்விட்டார். சமீபத்தில் சில கைதிகள் தப்பி ஒடியது காரணமாக சில பாதுகாப்பு முறைகள் அதிகபடுத்தப்பட்டன. தவிர, ஜெயிலுக்குள் என்னென்ன எப்போது நடக்கும் என்று சொல்லவே முடியாது. கண்காணிப்பு இல்லாவிட்டால் போச்சு! இந்த ஸ்பெஷல் ரவுண்டு ஒருவித கண்காணிப்பு. அப்படியே அயர்ந்துவிட்டு ஏழு மணிக்கு மேல் சாப்பிட்டார். சாப்பிட்டு இரவு எட்டு மணிக்கு மேல் புறப்பட்டார்.
ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே இரண்டு பாதுகாப்பு கேட்களை தாண்டி உள்ள டார்மிடரி பக்கம் போனார். அங்கே ஒரு மெல்லிய கானம் அவரை இழுத்தது. யாரோ கந்தர்வ குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஜெயில் தப்பி தவறி சில கலைஞர்கள் மாட்டிக்கொள்வது உண்டு. ஆனால் இது போல் ஒரு குரல் இனிமை படைத்த நபரை அவர் அறிந்ததில்லை. அன்றைக்கு எட்டாம்பிறை. ஒரு சில்லு நிலா சன்னமாக வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருந்தது. நிதானமான காற்று உள்ளே உலாவி ஜெயில் வெளியை வருடிவிட்டு சென்றது.
மனம் அந்த வேளையில் மோகனமாக பறக்கும்போது இந்த தீஞ்சுவை கானம் மெள்ள ஒரு ஊஞ்சல் போல் அவர் காதுகளில் தாலாட்டியது.
உள்ளத்தில் நினைக்க இயலா இன்பம். ஒரு மெல்லிய போதை!
சின்னச்சாமி! என்றார்.
டர்மிடரி கேட்டை பூட்டிக்கொண்டிருந்தவன் ஓடி வந்தான்.
யார் பாடறாங்க? என்றார்.
அதான் அந்த 405!
தனி அறையில் போட்டாச்சா?
நீங்கதான் உத்தரவு கொடுத்தீங்களே.
சரி. இந்த கைதி தினமும் பாடுவானா?
என்னிக்காவது நினைச்சுகிட்டா பாடுவான்.
தனி அறை பகுதியை திறந்துவிடு.
அந்த பகுதிதான் சிறையில் கொடுமை பகுதி. கடுமையான குற்றவாளிகளை அந்த அறையில் அடைத்து போடுவார்கள். கைதிகள் யாராவது ஒழுங்கீனமாக நடந்தால்கூட அந்த பகுதிக்கு மாற்றிவிடுவார்கள். சின்னசாமி இரண்டு பூட்டுகளை திறந்துவிட்டான். பழங்கால இரும்பு கதவு பிரயத்தனம் செய்தே தள்ள வேண்டும். முக்கிக்கொண்டே சின்னசாமி தள்ளினான். உள்ளே ஒரு நீண்ட சதுர முற்றம். முற்றத்தின் இரண்டு புறமும் தனி அறைகள்.
சாகர் உள்ளே நுழைந்தார். முற்றத்தில் நிலா விழுந்து கிடந்தது. காற்று மென்மையாக ஊடிற்று! அவர் காதில் பிரவாகம்போல் அந்த கீதம் இப்போது விழுந்தது. ராமலிங்கர் பாடலாக இருக்கும். சிற்சில வார்த்தைகள் தெளிவாக கேட்டன.
சாகாருக்கு பாட்டில் பிரியம் உண்டு.அங்கே எழுந்த பாட்டு நெஞ்சை அங்கங்கே தொட்டுவிட்டு சென்றன.
ஒரு ஊமையான வலி சாகருக்கு ஏற்பட்டது. அது மோகன ராகம் என்று நினைத்தார். சில கார்வைகள் அவர் மனசுக்குள் ஒரு தாபத்தை உண்டு பண்ணின. ஒரு ஆனந்த அழுகை அழ வேண்டும் போலிருந்தது.
தனி அறை கைதியை பா£க்க போனால் போதுமான பாதுகாப்போடு போக வேண்டும் என்று சட்டம்.
ஸார்... வரட்டுமா? என்றான் சின்னசாமி.
வேண்டாம். நீ போய் மற்ற வேலையை கவனி! என்றார்.
மெள்ள அந்த பாடல் வரும் திசை நோக்கி ஒரு கட்டுண்ட ஜந்துபோல் ஊர்ந்தார். அருகில் போனபோது கைதி 405 மெய் மறந்து பாடிக்கொண்டிருந்தான். அவன் பெயர் சந்திரன்.
அவன் கண்கள் மூடி இருந்தன. அழகான பத்மாசன அமைப்பில் உட்கார்ந்து இசையோடு உயிரையும் கலந்து பாடிக்கொண்டிருந்தான்.
அறைக்கு வெளியே பெரிய திண்ணையும் படிகளும். ஒரு படியில் அமர்ந்து ஆர்வமாக பாடலை கேட்க ஆரம்பித்தார். பாடல் இன்னும் ஐந்து நிமிடம் தொடர்ந்தது. ஒரு அற்புதமான தீர்க்க தொனியில் போய் நின்றது. கசிந்து உருகும் ஆத்மாவின் உருக்கமான வேண்டுகோள் போல் அது இருந்தது.
அதன் ரீங்காரம் மாய சுழல்களாக அங்கே வளைய வந்தன.
பாட்டு நின்றபிறகும் கூட சாகர் மனம் ஒரு எல்லைக்கு வரவில்லை. ககன வெளியில் இருந்து இறங்க இன்னும் தவித்து கொண்டிருந்தது.
யார்? என்று குரல் கேட்டு திடுக்கிட்டார் குணசேகர். சந்திரன் எழுந்து நின்றிருந்தான்.
சூப்பிரண்டெண்டா? என்று திடுக்கிட்டு கூறினான்.
ஆமாம். என்றார்!
ஸாரி! ஏதோ உணர்ச்சியிலே பாடிட்டு இருந்திட்டேன். நீங்க வந்ததை கவனிக்கலை.
மன்னிக்கணும்! என்றான்.
கதவு அருகில் போய் சாகர் பூட்டை திறந்தார்.
சந்திரன் கொஞ்சம் வா! என்றார்.
அவனை வெளியில் அழைத்து நீண்ட திண்ணை மீது உட்கார சொன்னார். அவரும் உட்கார்ந்தார்.
ஸார்! எனக்கு இந்த தனி அறை கொடுத்தற்கு ரொம்ப நன்றி ஸார்! என்று அவன் கூறினான். உட்கார்ந்தான்.
ரொம்ப அருமையா பாடுறே! உன் குரல் கேட்டுதான் நான் இங்கே வந்தேன்! என்றார்.
ஒரு குழந்தைபோல் குழைந்து கூறினார்.
என்னவோ கடவுள் கொடுத்த பிரசாதம்! பாடறேன். உங்களை கொஞ்சம் தொந்தரவு பண்ணிடுத்து. என்றான் இன்னும் தாழ்ந்து கொண்டு.
அவரால் அவன் கண்களை பா£க்க முடிந்தது. ஒரு கண்ணாடி போன்ற பளபளப்பு. மாயமாக சில அபூர்வ ஒளிகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனப்பெரும் குளிர்ச்சி!
தொந்தரவு இல்லை. மனசு அப்படியே நிரம்பி போச்சு. மெய் மற்ந்துதான் இங்கே வந்தேன். நீ உண்மையிலே மேன்மையானவன். இல்லாட்டி இப்படி ஒரு குரல் உனக்கு கிடைச்சிருக்காது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். கேட்கலாமா? என்றார்.
கேளுங்களேன்! என்றான் அவன்.
உன்னை பற்றி பல பேர் சொல்லி கேட்டிருக்கேன். பல நாளாகவே உன்னை பார்க்க வேணுமின்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்குதான் சந்தாப்பம் கிடைச்சுது. எப்படி இந்த குற்றம் செய்தே? என்று ஆர்வமோடு கேட்டார்.
பேச்சில்லை.
அன்பு மழையாக சாகரை ஒரு பார்வை பார்த்தான். மெள்ள ஒரு புன்னகை போட்டோந்தான். நீங்களும் கேட்டுட்டீங்க! நானும் சொல்ல கடமைபட்டவன்தான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில வெளியே போயிடுவேன். அதற்கப்புறம் எங்கே இருக்க போறன்னு தெரியாது. யாரிட்டேயாவது கதையயை சொன்னேன்னா எனக்கும் நிம்மதியா இருக்கும். மனதும் ஆனந்தமா இருக்கும். ஸாருக்கு நேரம் இருக்குமா? என்றான்.
நிறைய இருக்கு! ஆவலோடுதான் வந்திருக்கேன். உள்ளே போனான். தண்ணீர் கொஞ்சம் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்தான். பேச ஆரம்பித்தான்,
ரயிலில் விஜய் ஏறியபோது கூட்டம் இல்லை. திருப்பதிக்கு அவன் அவசரமாக போகிறான். அங்கே அவன் அப்பாவுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவனுக்கு ஆந்திரா மொபெட்ஸில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ரயில் புறப்பட மணியடித்தது. அவசர அவசரமாக ஒரு குடும்ப கோஷ்டி வந்து சேர்ந்தது. திபு திபு என்று உள்ளே ஏறினார்கள். உரக்க பேசிக்கொண்டு கம்பார்ட்மெண்ட் முழுதும் நிறைந்தார்கள். ஒரே இரைச்சலாக சிறிது நேரம் இருந்தது. அந்த வம்பளப்புகள் அவனுக்கு பிடிக்கவில்லை. கையில் அன்றைய பேப்பர் இருந்தது. அதில் ஈடுபட்டதுபோல் முழுகிவிட்டான்.
ரயில் கூவியது. நகாந்தது. சீக்கிரம் பிளாட்பாரம் ஓடி மறைந்தது. நகரத்தின் கடைசி விளிம்புகள் ஓடிவிட்டன. ஒரு சுத்தமான வெளிபுறத்தில் ஓடும்போதுதான் அவன் தலை நிமிர்ந்தான். காற்று இதமாக வீசியது.
நிமிர்வதற்கும் எதிரே உள்ள பெஞ்சில் ஜன்னல் ஓரம் இருக்கும் இளம் பெண்ணை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் ஒரு அழகி. வயது இருபது இருக்கும். மெல்லிய சந்தன நிறம். நீண்ட புருவங்களின் கீழ் இரு நீள விழிகள். மென்மை ரோஜா உதடுகள். கூந்தல் அடர்ந்து தோளில்
அருவிபோல் குதித்து பின்னால் இறங்கியிருந்தது.
ஒரு பார்வைதான். மனதுள் சென்று அது பதிந்து கொண்டது. உள்ளே அதன் சலனங்களில் எழுந்த ஆனந்தம் இதுவரை எங்கும் கண்டிராதது போல இருந்தது. விஜய் தன் பார்வையை திருப்பினான். மறுபுறத்து ஜன்னலை நோக்கி திருப்பிவிட்டான். மனத்தூய்மையை விரும்புகிறவன் அவன். பார்வை
கூட தூய்மையாக இருக்க வேண்டும். அந்த பெண்ணை பார்த்துகூட அவனுக்கு தவறாக தோன்றியது.
வண்டி பூராவும் பெண்கள் கூட்டம்! பல தரப்பட்ட வயதுகள். குடும்ப விஷயங்களை பிரலாபமாக பேசிக்கொண்டு குழந்தைகளை அடிக்கடி அடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியில் ஒரே ரகளை!
அவனுக்கு அப்போது நிம்மதி வேண்டியிருந்தது.
அதை எதிர்பார்த்துதான் அந்த வண்டியில் ஏறியிருந்தான். ஆனால் அது இந்த முறையில் குலைக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. திருத்தணியில் வண்டி நின்றது. வெளியே ஏதோ கலாட்டா என்றார்கள். ரயில் போகாது என்று வதந்தி விட்டார்கள். அதை தொடர்ந்து எழுந்த பேச்சில் அந்த பெண்கள் அனைவரும் ஒரு திருமண கோஷ்டியார் என்ற தெரிந்தது. திருமலையில் கல்யாணத்திற்கு போகிறார்கள். ஆழ்வார் திருநகர் காட்டேஜ்களில் தங்குகிறார்கள். அத்தனை விஷயங்களும் அவன் காதில் தாமாக விழுந்தன. அரை மணி சென்றது. வண்டி புறப்பட்டது. விஜய்
பாத்ரூமில் இருந்தான். முகத்தை கழுவினான். துடைத்துக்கொண்டான். தலையை சீவிக்கொண்டான்,
கதவைத் திறந்து வெளியே வரும்போது ஏதோ சத்தம் கேட்டது. யாரோ ஆ என்றது போல! வண்டி அப்போது ஒரு பெரிய குலுக்கலில் ஆடியிருந்தது. வாசல் கதவு ஒன்று படாரென்று அடித்திருந்தது. விஜய்க்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சட்டென்று அந்த கதவை திறந்தான். அங்கே கண்ட காட்சி அவனை உலுக்கியது.
அந்த பெண் கைப்பிடியை மட்டும் பிடித்து தத்தளித்துக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன. வாசலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு வந்திருக்கிறாள் அவள். திருப்பத்தில் கதவு அடித்த வெளியே தள்ளியிருந்தது. நல்லவேளை கைப்பிடியை அவள் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தது தெய்வாதீனம்.
சட்டென்று அவள் கையை பிடித்தான். மேலே இழுத்தான். வண்டியின் குலுக்கலில் அது சற்று கஷ்டமாக இருந்தது. கதவு ஒரு புறம் வந்து அவனையும் பின்னால் இடித்தது. விடவில்லை. ஒரு காலை அழுத்தமாக வைத்து கதவை பின்னால் தள்ளி வைத்தான். இரு கைகளாலும் அவளை மேலே இழுத்தான்.
அவள் தத்தளித்துக் கொண்டு மேலே வந்தாள். காலை ஸ்திரமாக தரையில் பதித்தாள். இன்னும் உடம்பு நடுங்க அவன் மீதுள்ள பிடியை அவள் விடவில்லை. கதவை மெள்ள அடைத்தான். பின் அவள் கையை விடுவித்தான்.
தயவுசெய்து அவங்கிட்ட சொல்லாதீங்க. அபசகுணம்னு நினைப்பாங்க! என்றாள் அந்த பெண்.
ஒரு அடி எடுத்து வைத்தவள் சட்டென்று திரும்பி இதென்ன ரத்தம்? என்றாள்.
அவன் வலது கையில் சிராய்த்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
வளை உடைஞ்சு கீறியிருக்கு! என்றாள் அவள். ஸாரி. மன்னிச்சுடுங்க! என்று மறுகியவாறு கூறினாள்.
பரவாயில்ல! என்று அவன் சொல்லுவதற்குள் அவள் போய்விட்டாள்.
இதென்ன அபூர்வ ஒற்றுமை! அந்த பெண்ணை நினைத்து சலனப்பட்டோம். இப்போது அவளையே காப்பாற்ற நேர்ந்ததே! என்று நினைத்தான். அவள் தொட்ட இடமெல்லாம் குளிர்ச்சி எழுந்தது.
வண்டி ஓடிக்கொண்டேயிருந்தது.
Next
page..... |