பொட்டணம் முதல் பட்டணம் வரை... 6
கமலு சாரு படத்தையே வேணாம்னு சொல்ல வச்ச அந்த சங்கதி என்னான்னு தெரிஞ்சுக்க நீங்கள்ளலாம் ஆர்வமா இருந்திருப்பிய. அத சொல்றதுக்கு ரெண்டு வாரம் ஆயிருச்சு. ஏன்னா நிறைய படத்துல நடிச்சிட்டு இருக்கேனா. நிக்க நேரம் இல்ல. நிமிர நேரம் இல்ல. து£ங்கும் போது கொசு கடிச்சா கூட ஸ்டார்ட், ஆக்ஷன்னு சொன்னாதான் கையி கொசுவை கொல்லும் போலருக்கு. அப்படி ஒரு மிசினு மாதிரி நடிக்க வேண்டியதாப் போச்சு. இந்த தொடரு அப்பப்ப ஸாட்டிங் டிரபுளு ஆச்சுன்னா, நானு வெளியூர்ல இருக்கேன்னு அர்த்தம்.
சரி வெசயத்துக்கு வருவோம். தலை முடிய வெட்டு, தாடிய எடு, மொட்டைய போடுன்னு கமல் சாரு ஆபிஸ்ல சொல்றாங்க. நானும் ஆத்தாவும் சேர்ந்து இந்த பொக்கிஷத்தையெல்லாம் அந்த கருப்பு சாமிக்கு தர்றோம்னு வேண்டிகிட்டதையும், அத நிறைவேத்தாம மொட்டைய போட்டா கருப்பு கோவிச்சுக்கும்னும் இவங்ககிட்ட சொன்னா புரியுமான்னும் தெரியல.
தொட்ட தொண்ணு£ருக்கும் ஆத்தா கருப்ப சாமிய கூப்டுதான் யோஜனை கேட்கும். பிதாமகன் படம் முடிஞ்சு நானு ஊருக்கு போனப்ப ரெண்டு நாளு காய்ச்சல் வந்திருச்சு. சரக்கு டூப்ளிகேட்டா, அல்லது மிக்சிங் சரியில்லயா தெரியல. ஆத்தாவுக்கு என்னா. படக்குன்னு கருப்பு சாமீய். எம்புள்ளைக்கு ஒண்ணும் ஆவக் கூடாது. கோவுல்ல வச்சு மொட்டைய போட்றேன்று வேண்டிகிச்சு. திரும்ப மெட்ராசு கௌம்பும்போது, கருப்பு... கண்ட கடையில முடிய வெட்டிராத. கொஞ்சம் வளந்ததும் வந்து கருப்புக்கு காணிக்கை கொடுத்திட்டு போயிருன்னு சொல்லவும் நானும் சரின்னு சொல்லிட்டேன். அப்படியாப்பட்ட முடியதான் கமல் ஆபிஸ்ல கேட்குறாவ. நானு என்னத்தை சொல்றது? வாயவே தொறக்காம வந்துட்டேன்.
இப்படி அடிக்கடி வெளிய போறதையும் நடிக்க அலையுறதையும் பாலாண்ணன்கிட்ட ஒருத்தரும் சொல்லல. நானும் அது வெளிய தெரியாமதான் வேலைய பாக்குறேன். ஒருநா காலையில எட்டு மணியிருக்கும். மீனு அரிஞ்சுகிட்டு இருக்கேன். போனு... ஓடிப்போயி எடுத்தா அமீரு ஆபிசுலேர்ந்து பேசுறோம். அங்க கருப்பு இருக்காராங்கிறாய்ங்க. அமீரண்ணன நான் சேது படத்து சூட்டிங் அப்பவே பார்த்திருக்கேன். ஒரு தடவ அந்த சூட்டிங்கை வேடிக்க பார்க்க போயிருக்கேன். அப்ப என்னய பாலாண்ணனுக்கும் தெரியாது. அமீரண்ணனுக்கும் தெரியாது. பொறவு அவங்க ரெண்டு பேரும் தனித்தனியா ஆயிட்டாங்க.
அமீரு ஆபிசுன்னதும் எனக்கு புரிஞ்சுபோச்சு. அவருதான் இவருன்னு. ஆனா அந்த போனு எனக்குன்னு நெனக்கல. இந்த ஆபிஸ்ல அவரோட முன்னாடி வேல பார்த்த யாருக்கோதான் பேசுறாங்கன்னு நினைச்சுகிட்டே என்னா வெசயம்னு கேக்குறேன். அங்க கருப்புன்னு யாரு இருக்காங்கன்னு கேக்குறாங்க. அட நான்தாம்ங்க அதுன்னு சொன்னதும் ஆபிசு வரைக்கும் வந்துட்டு போங்க. ஒரு கேரட்டரு இருக்குன்னு சொல்லவும் எனக்கு பயங்கர கொழப்பம். சரிண்ணே... எத்தனை மணிக்கு வரட்டும்னு மட்டும் கேட்டுகிட்டேன்.
போன வச்சிட்ட பொறவு அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாரோன்னு ஒரு யோஜனை. போறதா, வேணாமான்னு கொழப்பம். அப்படியே கிச்சனுக்கு போயி மீனை புடிச்சு கல்லுல வச்சு தேயு தேயுன்னு தேச்சுட்டு இருக்கேன். மறுபடி ட்ரிங்கு ட்ரிங்குன்னு சத்தம். போனுதான். எடுத்தா மண்டையில ஃபேன் கழண்டு வுழுந்தா கூட அப்படி ஒரு கிறுகிறுப்பு வராது. எனக்கு வந்திருச்சு.
டைரக்டரு சங்கரு கம்பெனியிலேர்ந்து பேசுறோம். ஒரு கேரக்டரு இருக்கு. வர்றியளான்னு கேட்குறாங்க. பாலாண்ணனுக்கு வெசயம் தெரிஞ்சு எவனையாவது விட்டு வெறுப்பேத்துறாரா, இல்ல எவனாவது நம்ம சினிமா ஆசைய வச்சு களி கிண்டுறானான்னு ஒரே கொழப்பம். இருந்தாலும் அவங்க கொடுத்த இடத்துக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். அவசரமா அறிஞ்சு வச்ச மீனையெல்லாம் மசாலாவுல தடவி வெச்சுட்டு நைசா கௌம்பிட்டேன்.
வந்தா கேரட்டரு. வரலன்னா அலைச்சலு. போவியா. இதுக்கு போயி என்னாத்துக்கு கொழம்பணும்னு எனக்கு நானே கேள்விய கேட்டு அதுக்கு பதிலும் சொல்லிட்டு கௌம்பிட்டேன். போனா... ஒரு அம்பது அறுவது பேரு வரிச கட்டி நிக்குறாய்ங்க. ஒவ்வொருத்தனயா ரூமுக்குள்ள கொண்டு போயி வச்சு அத பேசு. இத பேசு. குதி. சிரின்னு என்னென்னவோ சொல்ல சொல்லி வீடியோவுல படம் எடுக்குறாய்ங்க.
இப்ப ஈரம்னு ஒரு படத்த எடுத்தாரே, டைரக்டர் அறிவழகன். அப்ப அவருதான் சங்கர் சாரோட அசிஸ்டென்டு. என்னைய கூப்டு நடின்னு சொல்லி வீடியோ எடுத்தவரும் அவருதான். அந்நியன் படத்துல சார்லி சாரு நடிச்சிருப்பாரே ஒரு கேரக்டரு. அதுதான் நான் நடிக்க வேண்டியது. பார்க்குல வேல இல்லாதவன் படுத்து கிடந்தா எப்படி கெடப்பான். அது மாதிரி நடின்னாரு அறிவழகன். சும்மா படுத்துக் கெடக்காம நானு அங்க நின்னுகிட்டு இருந்த ஒரு ஆள கூப்புட்டு பக்கத்துல நிக்க வச்சுகிட்டு அவன வெறுப்பேத்துற மாதிரியெல்லாம் என்னென்னவோ செஞ்சு அசத்துறேன். எல்லாத்தையும் வீடியோவுல படம் புடிக்கிறாரு அவரு.
எடுத்து முடிச்சதும் என்ன நெனச்சாரோ, அங்கயிருந்த ஒருத்தர கூப்புட்டு இவரு சட்டய அளவெடுங்கன்னாரு. அங்கனையே நான் முடிவு பண்ணிட்டேன். நம்மதான் இந்த கேரக்டருக்குன்னு. கௌம்பும்போது கையில 250 ரூவாவ கொடுத்து கொஞ்ச நேரத்துல போன் பண்றேன். போன்னு அனுப்பி வச்சாரு அறிவழகன்.
அப்புறம் ஏன் அதுல நடிக்கல....?
(அட்ட'ஹாஸ்யம்' தொடரும்)
|