பொட்டனம் முதல் பட்டணம் வரை...-5
ஊருக்கு எல்லாரும் கிளம்பிகிட்டு இருக்காங்க. ரவியண்ணனை கூப்பிட்ட பாலாண்ணன், இவன் ஊருக்கு போயி அம்மாவ பார்த்துட்டு வர்றானா? இல்ல, உங்க கூடவே மெட்ராசு வர்றானான்னு கேட்டாரு. என்னப்பா சொல்ற?ன்னு அவருக்கு நேராவே என்னய கேட்கிறாரு ரவியண்ணன். எனக்கும் ஒரு சபலந்தான் அண்ணனோட மெட்ராசுக்கு போயிரலாம்னு. என்னா இருந்தாலும் நம்ம கேரக்டர சுருக்கிப்புட்டாரேன்னும் ஒரு வருத்தம். இருந்தாலும் ஒரு ரெண்டாயிரம் ரூவா கொடுங்க. ஆத்தாட்ட குடுத்துட்டு வர்றேன்னு நான் சொல்லவும், படக்குன்னு எடுத்து குடுத்தாரு.
எம்மேல அவருக்கு ஏன் அம்புட்டு பாசம்னு தெரியல. நான் என்னா கேட்டாலும் சரின்னுதான் சொல்லிருக்காரு. அவரு ஆபிஸ்லேர்ந்து நான் கௌம்புறேன்னு சொன்னப்பவும் கூட! அந்த கதையை அப்புறம் சொல்றேன். இப்போ இத கேளுங்க...
நானும் அப்பிடியே ஊருக்கு கௌம்பிட்டேன். போனா அம்புட்டு பய புள்ளைகளும் ஏதோ நடிகர் திலகமே ஊருக்கு வந்திருக்கிற ரேஞ்சுக்கு ஒரே பில்டப்பு கொடுக்கிறாய்ங்க. சாயங்காலம் வயகாட்டு பக்கம் போயி பழைய மாதிரி சரக்கடிக்கலாம்னா, நீங்க எங்க கூடவெல்லாம் சரக்கு அடிப்பியளான்னு கேட்குறாய்ங்க. இவனுக குடுக்குற பில்டப்புக்கு நம்ம மூஞ்சிய பதினாலு ரீல்ல காட்னாலும் பத்தாது போலருக்கேடான்னு ஒரே பீலிங்கா வருது. சரி படம் வந்த பொறவு என்ன நடக்குதோ நடக்கட்டும். இப்ப சந்தோசமா இருப்போம்னு அவய்ங்ககிட்ட ஷ§ட்டிங்ல நடந்த விசயத்தையெல்லாம் சொல்லி சிரிச்சேன். அதுவும் சிம்ரனக்கா என்னைய பேச வச்சு பேச வச்சு என்ன புரிஞ்சுதுன்னு அம்புட்டு சிரிப்பு சிரிச்சுதோ, அத பத்தியெல்லாம் இவய்ங்ககிட்ட சொல்லி சந்தோசப்படுறேன்.
ஊருக்கு போயி ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ளே பாலாண்ணன் ஆபிசுலேர்ந்து போனு. இப்ப மாதிரி அப்ப செல்போனா இருந்திச்சு எங்கிட்ட? என்னைய புடிக்கறதுக்கு அவக ரொம்பதான் பாடு பட்ருப்பாங்க போலருக்கு. ஊர்ல ஒரு முக்கியமானவரு வீட்டுக்கு போன போட்டு என்னைய வரச் சொல்றாரு. போனா ரவியண்ணன்தான் பேசுறாரு. என்னா கருப்பு? போன எடத்துலேயே சாக்க விரிச்சு போட்டு படுத்துட்ட போலிருக்கு. டைரக்டரு நீ எப்ப வருவன்னு கேட்குறாரு. நான் என்ன சொல்லட்டும்ன்னு கேக்குறாரு. வேற வழியில்லாம ஆத்தாகிட்ட சொல்லிட்டு நானும் அன்னைக்கே கிளம்பி வந்துட்டேன்.
யார் யாரையோ விசாரிச்சு எப்பிடியோ அசோக் பில்லரு ஆபிசுக்கு வந்துட்டேன். என்னய பார்த்ததுமே ஏண்டா இப்பிடி தாடியும் மீசயுமா இருக்கான் இவன்? போய் முடிய வெட்ட சொல்லுன்னு சொன்னாரு அண்ணன். அங்கதாம்ணே நிக்குது அவரு மனசு. போன வாரந்தானே ரெண்டாயிரம் குடுத்தோம்? அந்த காசுல கொஞ்சம் வச்சுருப்பானேன்னு நினைக்காம அப்புறம் ஒரு ஐநு£ரு ரூவாயயும் எடுத்துக் கொடுக்காரு. இப்படி தாயா புள்ளையா அவரு பார்த்துக்கிட்டாலும் நான் அங்கனயே இருந்தாதானே? அந்த படத்துல ஒரு சீன்ல நடிக்க வச்சு ஆசய காட்டி விட்டுட்டாரு. வேற வேற படத்துல நடிக்கணும், பெரிய நடிகனாகணும்னு எனக்கும் ஆச வந்திருச்சு.
அந்த ஆசய வெளிய காட்டிக்காம நானு கிச்சன்லேயே கெடக்கேன். வேளா வேளைக்கு மீனு வாங்குறதும், அத கிழிச்சு மசாலா தடவுறதும், கோழி வாங்குறதும் அத உறிச்சு மசாலா தடவறதுமா போவுது பொழப்பு. பாலாண்ணன் ஆபிஸ்ல தெனோமும் திருவிழா கணக்கா பிரியாணி வேவும். அசைவ சாப்பாடு மணக்க மணக்க தயாராவும். ஆனா அண்ணன் எம்புட்டு திம்பாருங்கிறீங்க? ஒரு மூணு உருண்ட தின்னா பெரிய விசயம். அப்புறம் அம்புட்டு சமையலும் யாருக்காம்? வேற யாருக்கு. அங்க வந்து போற பெரிய மனுசங்க. படத்துல வேலை பார்க்குற அசிஸ்டென்டு டைரக்டருங்க. இவங்களுக்குதான். நானும் சலிக்காம சமைச்சு போடுறேன். இந்த நேரத்துலதான் உனக்குள்ள கெடக்குற நடிகனை எப்படா தட்டி எழுப்பப் போறன்னு உள் மனசு கேள்வியா கேக்குது. வேலிய தாண்டி ஒணான் தலய நீட்ன மாதிரி நானும் அப்படியே தலைய வெளிய நீட்டி வேற வேற கம்பெனிங்கள பத்தி வெசாரிக்க ஆரம்பிச்சேன்.
செல்லத்துரைன்னு ஆர்ட் டைரக்டரு ஒருத்தரு. அவருகிட்ட, அண்ணே. நமக்கேத்த மாதிரி நல்ல கேரக்டரு எங்காவது கெடச்சா சொல்லுங்கண்ணே, நடிச்சுருவோம். பெரிசா சம்பளம் கூட தர வேணாம். ப்பிரீயா நடிச்சு தாரம்னு சொன்னேன். ப்பிரியா நடிக்கிறாராம்ல ப்பிரீயான்னு அவரும் கோவப்படாம போற இடத்துல என்னைய பற்றி சொல்லியிருக்காரு போல. ஒரு நாளு பாலாண்ணன் ஆபிசுக்கு போனு வருது. நான்தான் எடுக்குறேன். அங்க கருப்புன்னு யாராவது இருக்காங்களான்னு யாரோ கேக்க, நாந்தான்ங்க அது. என்னா சொல்லுங்கன்னு கேட்குறேன். கமலு சாரு ஆபிசுலேர்ந்து பேசுறோம்னு சொல்றாங்க. ஆத்தாடி... அம்புட்டு து£ரம் நம்மளோட நடிப்பு பவரு தெரிஞ்சு போச்சான்னு ஒரே மெதப்பு எனக்கு. சொல்லுங்க சொல்லுங்கன்னு கேக்க, ஆபிசு வரைக்கும் வந்துட்டு போங்கன்னு ஒரு எடத்தை சொன்னாங்க. போனா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்துல டெட் பாடி மாதிரி ஒரு கேரக்டரு. ஆனா இம்புட்டு தாடியும் மீசையுமா இருக்குறீங்க. ரெண்டுத்தையும் எடுக்கணும். மொட்ட வேற போடணும்னு சொல்றாங்க.
கமலு சாரு கூட காம்பினேசன் இருக்கு. அவரே ஒன்னைய கட்டியெல்லாம் புடிப்பாருனு வேற சொல்றாங்க. எனக்கா ஆச தாங்கல. விடக்கூடாதுரான்னு மனசு சொன்னாலும், ஒரு விசயம் போட்டு உலுக்குது. ஆத்தாவுக்கு போன போட்டு கேட்ராலாமான்னும் தோணுது. படக்குன்னு சொல்லுங்க. முடியாதுன்னா அடுத்தாள பாக்கணும்னு சொல்றாங்க. எனக்கு மனசே இல்ல. இருந்தாலும் சாமீய்... ஒன்னைய பகைச்சுகிட்டு இந்த படத்துல நடிக்கணுமான்னு மனசுக்குள்ளேயே கேட்டுக்கிறேன். வேணாம்ணே. கோவிச்சுக்காதீய ன்னு சொல்லிட்டு படார்னு வெளியே வர்றேன். ஏம்ப்பா. நீ என்னா லு£சாங்குற மாதிரியே பார்க்குறாங்க அங்க நின்ன அம்புட்டு பேரும்.
நான் ஏன் வேணாம்னேன்? அது எனக்கும் எங்க ஆத்தாவுக்கும் தான தெரியும்?
(அட்ட'ஹாஸ்யம்' தொடரும்) |