|
அண்மைக்காலமாக, ஒருவகை நிகழ்ச்சிகளை செய்திப் பத்திரிகைகளும், வார பத்திரிகைகளும், மேலே பார்த்தால் சூடாகவும், விலக்கிப் பார்த்;தால் சுவையாகவும் சித்தரித்து வருகின்றன. ஈவ்டீசிங் என்றும் தலைப்பிடுகின்றன. எந்தக் குற்றமும் செய்யாத மாணவி சரிகாவின் மரணத்தையட்டி பதினைந்து நாட்கள் காரசாரமாக பேசப்பட்ட விவகாரம், பேப்பர் குப்பைகளில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அவை பரபரப்பாக பேசப்படுகிறது. அடங்கிக் கிடந்த வம்பர்கள் மீண்டும் கை வரிசையையும், வாய் வரிசையையும் காட்டுவதே காரணம்.
பாதிக்கிணறு தாண்டுதல் ஒரு அனாதரவான பெண்ணை, கிண்டலால், கேலியால் அவமானப் படுத்தும் கொடிய குற்றத்தை ஈவ்டீசிங் என்று சொல்வது பொழுதுபோக்கு செய்திகளே. முதலில் இந்தக் குற்றத்திற்கு பெண் கொடுமை அல்லது பெண்களை மானபங்கப் படுத்தல் என்று பெயரிட வேண்டும். ஈவ்றிசிங் என்ற வார்த்தையை தூக்கி தூர எறியவேண்டும். விவகாரத்தின் கடுமை, வாசகர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உறைக்கும்படி செய்திகளோ, காவல்துறையோ செயல்படவில்லை. இந்தக் குற்றத்தில் மாட்டிக் கொள்வதுகூட ஒரு விபத்து போலவே நினைக்கப்படுகிறது. நேற்றைய ரயிலில் விபத்து ஏற்பட்டால், இன்றைய ரயிலிலும் அது ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பயணிகள் நினைப்பதுபோல, நமது இளைஞர்களும் நினைக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடுமையாகத் தண்டிப்பதன் மூலமே, இத்தகைய மனப்போக்கை ஒழிக்கமுடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மைதான். ஆனால் பாதி உண்மையே தவிர, முழு உண்மையல்ல. இந்தப் பாதியை மட்டுமே, வைத்துக் கொண்டு செயல்படுவது, பாதிக்கிணறு தாண்டுவதுபோலதான். நோயின் அறிகுறிகள் பெண்களைக் கிண்டல் முதல் வம்பு வரை செய்கிறவர்கள் ஒரு நோயின் அறிகுறியே தவிர நோயல்ல. இவர்கள் ஏவுகணைகள். ஏவுதளங்களை நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். பாதுகாப்புப்படை ரகசியம் போல் இந்தத் தளங்கள் ஒளித்து வைக்கப்படாமல், பகிரங்கமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றுடன் கட்டிப்புரளாமல் இந்த வம்புதும்பு போட்டோயங்களை தடுக்க முடியாது. இந்த ஏவுதளங்கள் நமது எதிரிநாட்டு படைத்தளங்கள் அல்ல. நமது தொலைக் காட்சிகள், நாடகங்கள், பத்திரிகைகள்தான் இந்தத் தளங்கள்.
அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பெரும்பாலும் கவர்ச்சிக் கன்னிகளே தொகுப்பாளர்களாகத் தோன்றுகிறார்கள். இவர்கள் நுனிநாக்கில் பேசுவது, ஒரு கவர்ச்சியையும், சிணுங்குவது படுக்கையறைக் குரல் போலவும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்;ச்சி என்பது ஒவ்வொரு பார்வையாளரையும் தனித்து வசீகரிப்பது. இதைத் தனித்து பார்க்கும்போது, இந்த வசீகரம் வக்கிரமாகிரது. கவர்ச்சியான ஆடையுடன் முத்தம் கொடுப்பதுபோல் முகம் குவித்து, ஒரு இளம் பெண், சினிமாக்காதலைப் பற்றி வர்ணிக்கும்போது, அதை உற்றுப் பார்க்கும் இளைஞனிடம் ஒரு கிறக்கம் ஏற்படுகிறது. அந்தப்பெண், தன்னிடம் மட்டும் அந்தரங்கமாக பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் அறிமுகப் படுத்தும் ஒலிஒளிக் காட்சிகளோ ஆபாசத்தின் உச்சம். ஒரு காலத்தில் லாவகமாகவும், நளினமாகவும் இருந்த திரைப்பட நடனங்கள் இப்போது அசிங்கமாகி விட்டன. நடன இயக்குநர்கள், ஆட்டக் குழுவிற்கும், நாயகன், நாயகியருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி ஆட்டவேண்டும் என்று ஆட்டுவிக்கிறார்கள்.
திரைப்படங்களிலோ, கதாநாயகன் என்பவன் கதாநாயகியை நிச்சயம் இம்சை செய்யவேண்டும். அவள் சடையை பிடித்து இழுக்கவேண்டும். ஓடிப்போகிறவளின் முன்னால்போய் நின்று பாட்டுப் பாட வேண்டும். நண்பர்களிடம், பித்துப் பிடித்ததுப் போல் நடந்துக்கொண்டு தனது காதல் வெளிபாடுகளை காட்டவேண்டும். உடனே அவர்கள் ராசாத்தி......ராசாத்தி.......அட்ரஸ் என்ன கண்டுபிடி......, ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி......... என்று பாட வேண்டும். இல்லையானால், கதாநாயகன் பதுக்கி வைக்கப்பட்ட தனது காதலியைக் காண, அவளது வீட்டிற்குப் போவான். இதைப்பார்த்த நாயகியின் தந்தை, கதாநாயகனின் கையைப்பிடித்துத் தடுப்பார். உடனே அந்த நாயகன் இந்தக் கை, இவளை எனக்கு ஒரு காலத்தில் பிடித்துக் கொடுக்க வேண்டிய கை என்பதால் விட்டு வைக்கிறேன். இல்லையானால் வெட்டியிருப்பேன் என்று வீரவசனம் பேசுவான். கதாநாயகியும் அவனை புதிய புறநானூற்று வீரன்போல் பார்ப்பாள். (இப்படியரு திரைப்படத்தை நான் பார்த்தேன்.) சினிமாகாதலுக்கு அப்பன்களே வில்லன்களாய் ஆக்கப்படுகிறார்கள். பெத்;தவன், தன் கண் முன்னாலேயே, தன் வீட்டிலேயே, தன்னோட மகளை ஒரு இளைஞன் சல்லாபிக்கும்போது, சும்மா இருக்க வேண்டும்.
இத்தகைய சினிமாத்தனத்தை உள்ளடக்கிய படங்கள்தான் அரசாங்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பபடுகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்துவிட்டு, கண்போனபோக்கில் நடந்து, மனம்போனபோக்கில் பெண்களை இம்சிக்கும் இளைஞர்களை கைது செய்ய காக்கிச் சட்டை இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படங்களையும், தயாரிப்பாளர்களையும் தொலைக்காட்சி நிர்வாகிகளையும் கைது செய்ய, எந்த சட்டம் இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை, அது என்மீது போட்டதடி பழியை என்கிற கதைதான்.பெண்ணியப் போராளிகளின் பாராமுகம்
இவைபோதாதென்று, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இருபொருள் வசனங்கள். அதுவும் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை என்பது ஆபாசத்தின் ஊற்றாகிவிட்டது. இந்த ஊடகங்கள், இயற்கை மனிதர்களுக்கு செயற்கை மனிதர்களை காட்டிக் காட்டி, இப்போது இயற்கை மனிதர்களும் செயற்கை ஆகிவிட்டார்கள். இந்தத் திரைப்படங்களில் வருகிற ஆபாச வசனங்களை, அல்லது பாடல்களை இளைஞர்கள் பாடிக்காட்டும்போது, அவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட்டு கசையடிக்கும் உள்ளாகவேண்டும். அதே சமயம் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டால், இவர்களை இப்படித் தூண்டாமல் தூண்டும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை இருக்கிறது? தண்டனை இல்லையென்பதோடு, இதற்கு எதிர்விகிதத்தில் கார் கிடைக்கிறது, பங்களா கிடைக்கிறது. கள்ளப்பணம், மிதமிஞ்சி போகிறது. வெளிநாட்டு மேடைகளிலும் கைத்தட்டுக்கள் கிடைக்கின்றன. இந்த சினிமாக்காரர்கள், தங்களது சமூக விரோத நடிப்பை நியாயப்படுத்துவது, விஞ்ஞானி அப்துல்கலாம் சாதனையைவிட அதிக சாதனையாக சித்தரிக்கப்படுகிறது.
வாரப்பத்திரிக்கையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அழகான இளம் பெண்ணின் படத்தை அட்டைப்படமாக போடாத வாரப்பத்திரிகையே கிடையாது. இந்த அழகிய அட்டைப்பட முகப்பில் பாகிஸ்தானை எப்படி முறியடிப்பது போன்ற கேள்விகள். ஒரு தொலைக்காட்சியில், அதோடு சம்பந்தப்பட்ட வாரப்பத்திரிகை குறித்த விளம்பரவரிகளை பேசுகிற பெண்குரல் படுக்கையறைக்கு கூப்பிடுவது போல் ஒலிக்கிறது. இப்படிக் குறிப்பிடுவதால் நான் பெண்களைக் குறைக்கூறுவதாக ஆகாது. வயிற்றுப் பிழைப்பிற்கு வரும் பெண்களை வைத்தே பெண்மை கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதே பிரச்சனை. இந்தப் பெண்களைப் போல எல்லா பெண்களும் இல்லை. இவர்கள் சிறுபான்மையினர்தான். ஒரு ஆணின் ஒழுக்கத்திற்கு ஒரு பெண்ணே தன் ஆடை அலங்காரம் மூலம் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற அவலநிலை இருப்பதாக பெண்ணியப் போராளி மைதிலி சிவராமன் தெரிவிக்கும் வேதனையை நானும் பகிர்ந்துக் கொள்கிறேன். ஆனாலும் இத்தகைய கலாச்சாரச் சீரழிவுகளுக்கு எதிராக இத்தகைய போராளிகள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. ஆணாதிக்க ஆண்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
வாய்தாவே ஒரு அவதி
நீதிமன்றங்களும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும் அவை செய்திகளாவதில்லை. இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம். அதனால்தான் இப்படி செய்தேன், ஆட்கள் பார்த்துவிட்டதால் அவள் அலட்டிக் கொண்டாள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவன் கூசாமல் சொல்லி வழக்கை இழுத்துக்கொண்டே போகலாம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாய்தா என்பதே இன்னொரு தண்டனை. இதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற வாய்தாவிற்கு அவதி என்ற மண்வாசனைச் சொல் ஏற்பட்டுள்ளது. ஆண்கவர்ச்சி
பத்திரிகையில் வரும் கதைகளில் பெரும்பாலானவை ஆபாசக் களஞ்சியங்கள். ஆபாசம் என்பது அதற்குரிய வார்த்தைகளில் மட்டுமல்ல, அதைவிட ஆபாசமானது இலைமறைவு காய்மறைவான பாலியல் தூண்டுதல்தான். இதற்கு கதைகளில் பஞ்சமில்லை. இவை போதாதென்று, சினிமா கிசுகிசுப்புகள். எவன் பொண்டாட்டி எவனோடு போனாள் என்பது மாதிரியான சித்தரிப்புகள். தமிழகத்தில் பாலியல் கள்ள உறவு தவிர வேறு எதுவுமே இல்லையென்பது மாதிரியான மாய்மால எழுத்துக்கள்- இவைதான் இன்றைய பத்திரிகை அலங்காரங்கள். இப்போதோ திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ஆண்கவர்ச்சியும் தலைகாட்டுகின்றது. உருண்டு திரண்ட உடம்பை பனியனோடு காட்டும் பழக்கம் இப்போது துவங்கியிருக்கிறது.
செய்யத்தக்கவை
எடுத்துக்கொண்ட விவகாரத்துக்கு வருவோம். பெண்கேவலத்தில் ஈடுபடுகிறவர்கள், கைதான பிறகு, மாமூலாய் விடப்பட்டார்களா அல்லது மாமியார் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்களா என்பது நாட்டுக்குத் தெரியவேண்டும். காவல்துறையே இதுகுறித்து அவ்வப்போது அறிக்கை விடவேண்டும். இரண்டாவதாக, பேருந்துகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு செய்வது இந்தப் பிரச்சனையை கூட்டுமே தவிர குறைக்காது. டில்லி போன்ற பெருநகர்களில் பேருந்து இருக்கைகளில் ஆணும் பெண்ணும் இணையாகவே அமருகிறார்கள். எந்த இளைஞனும் எந்த பெண்ணையும் சீண்டியதில்லை. இதனை அவ்வப்போது டில்லிக்கு செல்லும் நான் பேருந்துகளில் பயணிக்கும் போதெல்லாம் உன்னிப்பாக பார்த்ததுண்டு. அங்கே பெண் என்பவள் பாலியல் உருவகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மானிடக்கூறு அவ்வளவுதான். இத்தகைய சமத்துவ இருக்கையை படிபடியாக இங்கே கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினை இல்லாது போகலாம். மூன்றாவதாக, இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்பை ஊட்ட வேண்டும். அந்தக்காலத்து மாணவர்களாகிய எங்களுக்கு தேசியம் - திராவிடம் என்பதே பேச்சாகவும், சிந்தனையாகவும் இருந்தது. பெண்களை ஏளனம் செய்வதோ, குடித்துவிட்டு வகுப்புக்குப் போவதோ நாங்கள் கனவில் கூட கண்டறியாதவை.
உடல்தேவை அல்ல
பாலியல் உணர்வு எள்பது உடல்தேவையாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. காலில் அடிப்பட்டால், தொடையில் நெறிகட்டுவதுபோல், வேறுசில அடிப்படைப் பிரச்சினைகள், பாலியல் உணர்வில் வரும். பொதுவாக அடிமன பயம் வெளிமனப் பாலியலாய் தோன்றும். இந்த பயத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இப்படி வரும் பாலியல் மனநோய் பெண்கேலியாக வெளிப்படும். உடலுறவாலும் இந்த மனநோய் தீராது. அடிமனபயத்தை ஒழித்தால் வெளிமனப் பாலியல் வக்கிரம் விடுபடும். மனம் என்பது நெருப்பு மாதிரி. எதையாவதுப் பற்றிக்கொண்டே இருக்கும். எனவே இளைஞர்கள் மனம் சமூகப்பொறுப்பை பற்றிக்கொள்ளுமாறு செய்யவேண்டும். இவர்களுக்கு உளக் கோட்பாடுகளிலும் பயிற்சி கொடுக்கவேண்டும். இதனால், பெண்களை எள்ளி நகையாடுவது ஒருவிதப் பேடித்தனம் என்பதை சம்பந்தப்பட்டவனால் அறிய முடியும்.
இறுதியாக, நமது திரைப்படங்களையும் தொலைக்காட்சிகளையும் பார்க்கும்போது இந்த நாட்டில் தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் விதிகளை கடுமையாக்கி, செயல்பாட்டை தீவிரமாக்க வேண்டும். இல்லையானால் இத்தகைய தணிக்கைக் குழு, திரைப்படத்துறை, தொலைக்காட்சி, பத்திரிகை, காவல்துறை, நீதிமன்றம் ஆகிய மாபெரும் அமைப்புகளின் சார்பில், நமது பெண்களை, வம்பர்கள் அவமானபடுத்துவது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் திரைப்பட அபத்தங்களையும் சொல்லியாக வேண்டும்.
அண்மையில் புதிதாக திருமணமான தன் தங்கையுடன், எனக்கு தெரிந்த ஒரு இளைஞர் அமெரிக்கா சென்றிருந்தார். அக்கா கணவரின் நண்பர்களான அமெரிக்கத் தம்பதிகள் புதுமண மக்களை வாழ்த்துவதற்கு அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அப்போது ஒரு அமெரிக்கர், புதிய தம்பதியரைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் டூயட் பாடி ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இவர்கள் மென்மையாக மறுத்ததோடு, அப்படி ஆணும் பெண்ணும் பாடிப்பாடி அணைத்துக் கொள்வது தமிழக மரபல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள். உடனே அந்த அமெரிக்கர், உங்கள் நாட்டு சினிமாக்களில் ஆணும் பெண்ணும் மரங்களை சுற்றியோ, மட்டைகளை சுற்றியோ, கோயில் குளங்களை சுற்றியோ ஆடுகிறார்களே என்று கேட்டிருக்கிறார்கள். நமது தம்பதியர், சினிமாவில் வரும் டூயட் மாதிரி காதலன் காதலியோ, அல்லது கணவன் மனைவியோ பாட்டு பாடி ஆடுவதில்லை என்று விளக்கியிருக்கிறார்கள். அந்த அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். இந்திய தம்பதியரோ அல்லது காதலர்களோ டூயட் பாடுவதைப் பார்த்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் காப்பி அடிக்கின்றன என்று அதுவரை நினைத்திருக்கிறார்கள். காரணம் அங்கே வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கேயோ திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.
அபத்தப் பிரியர்கள்
எனக்குத் தெரிந்து, இந்தியத் திரைப்படங்களில் மட்டுந்தான், டூயட் பாடல்கள் இடம்பெறுகின்றன. வேறு எந்த நாட்டுத் திரைப்படத்திலும், இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் கிடையாது. தேவைப்பட்டால் ஒரு கிளப்பின் ஆடல் பாடல் காட்சிகளையோ அல்லது மேடை நிகழ்ச்சிகளையோ, டேப்புகளை போட்டோ உள்ளது உள்ளபடி காட்டுவார்கள். இந்தியத் திரைப்படங்களில் இத்தகைய நம்ப முடியாத டூயட் பாடல்கள், ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பதுப் பேரை பேடியாக்குவது, மகன் இன்ஸ்பெக்டர், தந்தைக் கொள்ளைக்காரன், மகள் குற்றவாளி, தந்தை நீதிபதி, அம்மாவுக்குத் தெரிந்த மகன், மகனுக்குத் தெரியாத அம்மா, எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக வரும் போலீஸ், நீதிமன்ற களேபரங்கள் போன்ற அபத்தமான காட்சிகளை மக்களும் அபத்தமாகவே ரசிக்கிறார்கள். பெரும்பாலோர்க்கு இது செயற்கைத்தனம் என்றும், ஒரு திரைப்படத்திற்கு தேவையான மசாலா என்றும் தெரியும். இப்படித் தெரிந்துக் கொண்டுதான் ரசிக்கிறார்கள். அபத்தங்களை ரசிப்பதில்; நம்மவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம்.
ரத்தம் தேவைப்படாத கண்ணீர்
என்றாலும் விளையாட்டு, வினையாகும் என்பதுபோல், சினிமாத்துறையினர் எடுக்கும் சில அபத்தமான காட்சிகளும், கருத்துகளும் சமூகத்திற்கு கேடு வினைவிக்கின்றன. இவர்கள், விஞ்ஞான விரோதமான கருத்துக்களை நம்ப வைத்து பல சமூக விபரீதங்களை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்படுத்தும் படங்களும் சக்கைப் போடு போடுகின்றன. எடுத்துக்காட்டாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நாடறியச் செய்த ரத்தக் கண்ணீர் சினிமாவை மேற்கோள் காட்டலாம். இந்தப் படம், அந்தக் காலத்தில் கொடி கட்டிப் பறந்ததோடு, பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு, காந்தா என்ற தாசியோடு பாலியல் உறவு கொண்டதால்தான், அவருக்கு தொழுநோய் வந்ததாக கதைக்கரு அமைந்திருந்தது. இந்த நோய் பெண்களால் வரக்கூடியது என்ற ஒரு தவறான கருத்து அனைத்து மட்டத்திலும் இந்த திரைப்படத்தால் ஏற்பட்டது. இன்று கூட, இதன் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த தொழுநோய் பெண்களோடான பாலியல் உறவால் வருவதல்ல. மைக்கோ பாக்டீரியம் லெப்ரேணி என்ற கிருமிகளால் வரக்கூடியது. ஆகையால் இந்த நோய் உண்மையான பிரம்மச்சாரிகளுக்கும் வரலாம். இந்த விஞ்ஞான உண்மைக்கு புறம்பாக ரத்தக் கண்ணீர் திரைப்படம் தவறான தகவலை கொடுத்ததோடு பெண்களையும், கொடூரமாக நோக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. இது குறித்து கவிஞர் தணிகைச்செல்வன் தினமணியில் விபரமாகவே எழுதியிருக்கிறார்.
சிறு பிள்ளைத்தனமான கற்பனை
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படம். அதில் இளம் பெண்ணான ரேவதிக்கு ஏதோ ஒரு மனச்சிக்கலுக்காக க்ஷிப்னாட்டிஸம் எனப்படும் வசீக சிகிச்சை வழங்கப்படும். அதன் மூலம் ஒருவரை அவரது கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சிகிச்சையின்படி, ரேவதி, ஐந்தாறு வயது குழந்தை பருவத்துக்கு போய்விடுவார். அந்த சமயம் பார்த்து, அவரை அந்தக் குழந்தைப் பருவத்திற்குள் அழைத்துச் சென்ற டாக்டருக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படும். இதற்குப் பிறகு இளம் பெண்ணான ரேவதி ஒரு குழந்தை போலவே பேசுவார், நடப்பார். இவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு கதை. இப்படிப்பட்ட ஒரு மட்டமான கற்பனை எப்படி தோன்றியதோ?
மனநோய் சிகிச்சைகளுக்கு, பல வழிகள் உள்ளன. இவற்றில் மிகவும் எளியது க்ஷிப்னாட்டிஸம் என்று சொல்லக்கூடிய வசிய முறை. மனநோயாளியை, ஒரு மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்து சுருள் சுருளான வட்டக் கோடுகளின் மையத்தில் உள்ள ஒரு புள்ளியை மட்டும் பார்க்க வைத்து, சம்பந்தப்பட்ட மனோதத்துவ நிபுணர் இன்னும் பத்து சொல்வதற்குள் உங்கள் மனம் நான் சொன்னபடி கேட்கும் என்று சொல்வார். உடனே அந்த மனநோயாளியின் மனமும் நிபுணரின் வசப்படும். இந்த சிகிச்சைக்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். அவர் நிபுணர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவராக இருந்தால் க்ஷிப்னாட்டிஸம் எடுபடாது. என்றாலும், ஒத்துழைப்பு கொடுக்கும் மனநோயாளியை, அரை மயக்க நிலையில் வைத்து, அவரது அடிமனதை வெளிபடுத்தி, குழந்தைப் பருவம், வாலிப பருவம் போன்றவற்றை நிபுணரால் வெளிக்கொண்டு வரமுடியும். அந்த நோயாளியின் அடிமனதில் மண்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான உணர்வுகளை நோயாளியாலேயே பேச வைக்க முடியும். இதனால் அடிமனச்சுமை இறங்கும். பிறகு, இன்னும் பத்து சொல்வதற்குள் நீங்கள் பழைய படி ஆகிவிடுவீர்கள் என்று நிபுணர் சொல்லிவிட்டு, ஒன்று, இரண்டு என்று எண்ணும்போது சம்பந்தப்பட்ட மனநோயாளியும் இப்போதைய வயதுக்கு திரும்பி விடுவார்.
மனோதத்துவ நிபுணர் அந்தத் திரைப்படத்தில் வருவது மாதிரி ஒருவரை குழந்தையாக்கி விட்டு, சிவலோகமோ அல்லது பரலோகமோ போய்விட்டாலும், அந்த மனநோயாளி சிறிது இடைவேளைக்குப்பிறகு சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். மனோதத்துவ நிபுணரின் ஆணைகள் கேட்கப்படும் வரைக்குமே, அந்த நோயாளி குறிப்பிட்ட பருவக்கட்டத்தில் இருப்பார். அந்த ஆணைகள் தொடர்ந்து கிடைக்காதுப் போனால், நோயாளி மனோவசிய நிலையிலிருந்து பழைய நிலைக்கு தானாகவே மீண்டு விடுவார். இந்த சிகிச்சையையும் அதிக நேரத்திற்கு செய்ய முடியாது. அதாவது மனநோயாளியை அந்த நிபுணரின் மனோ ஆதிக்கத்தில் அதிக நேரம் வைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், குழந்தைப் பருவத்திற்கு கொண்டு போகப்பட்ட கதாநாயகி, ஆண்டுகணக்கில் குழந்தை போலவே ஆகிவிடுவதாக காட்டவது அப்பட்டமான அறியாமை. அல்லது வேண்டுமென்றே காது குத்தும் முயற்சி. ஆனாலும், காதுகள் குத்தபடாமல் ரசிகர்களின் மூளை குத்தப்படுகிறது.
பொதுவான பாமரத் தனங்கள்
பெரும்பாலான திரைப்படங்களில், பொதுவான பாமரத் தனங்களை நாம் பார்க்கலாம். வில்லன், கதாநாயகியையோ, அல்லது அவள் தந்தையையோ கடத்திக் கொண்டு போவான். மறைவான ஒரு இடத்தில் கட்டிப் போடுவான். பிறகு துப்பாக்கி முனையில் அத்தனைச் சொத்துக்களையும் கதாநாயகி அல்லது அவள் தந்தை தனக்கு எழுதிக் கொடுத்ததாக ஒரு பத்திரத்தைக் காட்டி அதில் கையெழுத்துப் போட சொல்வான். கதாநாயகி மறுப்பாள் அல்லது கையெழுத்துப் போட்டு தியாகம் செய்வாள். இது அபத்தத்திலும் மோசமான அபத்தம். ஒருவர் தனக்கு போட்டோமையான சொத்துக்களை பிறருக்குக் கொடுக்க வேண்டுமானால், பத்திரம் எழுதி கையெழுத்துப் போட்டால் மட்டும் செல்லாது. எந்தச்; சொத்தையும் அரசு பதிவு அலுவகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். விற்பவர் அங்கே சென்று சார்வு பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடவேண்டும். அவர் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்கையில், ஏதாவது ஒரு பத்திரத்தில் ஒரே ஒரு கையெழுத்துப் போட்டு விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்பதுபோல், நமது சினிமாக்காரர்கள் இந்தப் பொய்யை பரவலாக பரப்பி விடுகிறார்கள்.
திரைப்படங்களில் பொதுவாக வரும் இன்னொரு பாமரத்தனமான கருத்து. ஒருவர் தலையில் அடிப்பட்டு பைத்தியமாகத் திரிவார். இடைவேளைக்குப் பிறகு அதே தலையில் இன்னொரு அடிப்பட்டு அவருக்கு பைத்தியம் தெளிந்து விடுமாம். இப்படி பைத்தியக்காரத்தனமான படங்களை பார்க்க வேண்டியது நமது தலைவிதியாகி விட்டது. இன்னும் ஒரு பொதுப்படையான காட்சி. கதாநாயகன், கடத்தப்பட்ட காதல் பெண்ணைத் தேடிப் போகவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவனிடமோ வாகனம் ஏதும் இருக்காது. உடனே ஒரு சைக்கிள்காரனை இடித்துப் போட்டுவிட்டோ அல்லது கார்க்காரனை உருட்டிவிட்டோ அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு ஓடுவான். இதற்கு ரசிகர்களின் கைத்தட்டும் பலமாக இருக்கும். இப்படிச் செய்வது ஒரு கிரிமினல் குற்றம். இதை உண்மையாகவே செய்கிறவனுக்கு சிறை தண்டனைக் கிடைக்கும். இப்படிப்பட்ட நாயகனைப்போல் அவன் ரசிகனும் நடந்துக் கொண்டால் இந்த சமூகம் என்னாவது?
கொச்சைப் படுத்தப்படும் கிராமங்கள்
என் வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால், என் விருப்பத்திற்கு விரோதமாக சில திரைப்படங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நான் பார்த்த ஒரு படத்தில், கதாநாயகனான கார்த்திக், காதலர்களை ஒன்று சேர்த்து வைத்த குற்றத்திற்காக, ஊர்ப்பஞ்சாயத்து அவருக்கு பூமி பூஜை என்ற தண்டனை வழங்குகிறது. இதன்படி, சாத்திர சம்பிரதாயங்களோடு, மாலை மரியாதைகளோடு அவர் ஒரு குழிக்குள் இறக்கப்படுகிறார், மண்ணை மூட வேண்டியதுதான் பாக்கி. இப்படி எந்த ஊரில் பூமி பூஜை என்கிற உயிரோடு சமாதி வைத்தல் நடைபெறுகிறது? நடைபெறாத ஒரு கொடூரத்தை நடைப்பெறச் செய்ய நினைப்பதும் சட்டப்படியான குற்றமே.
இன்னொரு படத்தில், கதாநாயகி தன் கையால் கன்னத்தில் அறை வாங்கும் ஊர்வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கிறாள். உடனே ஊரே அவளிடம் அடி வாங்கி, தலைக்கு பத்து ரூபாய் வாங்க திரள்கிறதாம். இன்னொரு படம், இந்த படம் அதன் அப்போதைய புதிய இயக்குநரை நாடறிய செய்து, என் உயிரினும் இனிய தமிழ் மக்களே என்று பேச வைத்திருக்கும் வெற்றித் திரைப்படம். இந்தப் படத்தில் வறண்டு போன ஊருக்கு, மழையை வருவிப்பதற்காக, கன்னி கழியாத இளம் பெண் ஒருத்தி அந்த ஊரைச்சுற்றி நிர்வாணமாக போகிறாளாம். எந்த ஊரிலும் நடைபெறாத சம்பவம் இது. ஆனாலும், இந்தக் காட்சியை அந்த இயக்குநர் அரசு விருதுகள் சாட்சியாக நியாயப்படுத்துகிறார். இப்படி கிராமங்கள் கொச்சைப் படுத்தப்படுகின்றன.
கொடூரமான கொடுமை
கொடூரமான கிரிமினல் செயல்பாடுகளையும், நமது திரைப்பட நண்பர்கள் வியாபாரமாக்க தயங்குவதில்லை. உதாரணமாக, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரங்கா, பில்லா என்ற இரண்டு கொடூரமான ரவுடிகள் புதுதில்லியில் புத்தர் பூங்காவில், ஒரு ராணுவ அதிகாரியின் மகளை கற்பழித்துக் கொடூரமாக கொன்றார்கள். ஆனால், இவர்களின் போட்டோல் இங்கே திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவற்றின் கதைக் கருக்கள் மாறுபட்டது என்றாலும், அப்போது பரவலாக பேசப்பட்ட கொடிய கயவர்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு ஒரு இழிவான வியாபாரத்தனமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரிதான். அபத்தங்களை பட்டியலிட்டால் பெரும்பாலான திரைப்படங்கள் தேறாது. திரைப்படங்களில் பேன்டஸி எனப்படும் நம்பமுடியாத அதீதங்கள் தேவைப்படலாம். ஆனால் இவையே விஞ்ஞானத்திற்கு புறம்பாகவும், சமூகத்தில் நிலவாத சம்பவங்களை காட்சிப் படுத்துவதாகவும் இருக்கலாகாது. ஆனால் நமது திரைப்படக்காரர்களோ செயற்கையான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இப்போது மக்களையும் செயற்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
ஒரு வேண்டுகோள்
திரைப்படத் துறையினருக்கு, இந்த சமூகத்தின் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க வேண்டியதாகிறது. இவர்கள், வெறும் கனவு வியாபரிகளாக இல்லாமல், சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களாகவும் போட்டோணாமப்பட வேண்டும். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக் குழு ஒன்று இருப்பதாக அறிகிறேன். இந்தக் குழு காட்சிகளை தணிக்கை செய்கிறதே தவிர, விஞ்ஞான அல்லது சமூக விரோதமான கதைக்கருக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்தக் குழுவில் பெரும்பாலும் திரைப்பட வியாபாரிகளும், சமூக போலிகளுமே இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் மருத்துவர், பேராசிரியர், பொறியாளர், சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும். இதனால் திரைப்பட அபத்தங்கள் குறையாது போனாலும், விஞ்ஞானத்திற்கும், சமூக பொறுப்புக்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறாது என்று நம்பலாம்.
நன்றி-நவசக்தி வார இதழ்கள்
|