கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் நூலிழை அளவு இடைவெளி இருப்பது வசதியாய் இருக்கிறது நம்மூர் நட்சத்திரங்களுக்கு..... நான் கவர்ச்சியாகத்தான் நடித்தேன், ஆபாசமாக அல்ல... என்ற வார்த்தையை அநேகமாக ஆடையை புறக்கணிக்கிற அத்தனை நடிகைகளும் சொல்லி வருவது தவிர்க்கமுடியாத தமாஷாகி விடுகிறது.
அவர்கள் சொல்கிறபடி கவர்ச்சி என்ற விஷயம் எந்த காலங்களில் தோன்றியது என்பதை கணிக்க முடிந்தாலும், எந்த காலங்களில் யாரால் முடித்து வைக்க இயலும் என்பது கணிக்க கூடியதாக இல்லை. அது நாளுக்கு நாள் வளர்ந்து ஆடைக்குறைப்பு மட்டுமே கவர்ச்சியல்ல... என்ற நிலை பெற்று தொப்புளின் மீது பம்பரம் விடுவதற்கும், ஆம்லெட் போடுவதற்குமான கால கட்டத்தை தொட்டு நிற்கிறது. (நிற்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு காரணம், சமீபத்திய படங்களில் அத்தகைய சமாச்சாரங்கள் இடம்பெறாமலிருக்கிறது என்ற ஆறுதலினால்தான்...)
எல்லா கால கட்டத்திலும் இந்த கவர்ச்சியை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அரைக்கால்சட்டையுடன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திரையில் தோன்றிய தவமணிதேவியை விசிலடித்து ரசித்தார்கள் என்பது சினிமா வரலாற்றின் அதிர்ச்சியான அதே நேரத்தில் ஹாஸ்யமான பக்கங்கள்.
கண்ணழகி என்ற வர்ணிக்கப்பட்ட காஞ்சனமாலா திரையுலகின் முதல் தலைமுறை கவர்ச்சி கன்னி... அதற்குபின் ஜி. வரலட்சுமி குணச்சித்திர வேடத்தில் முதலில் நடித்தாலும், நாளடைவில் கவர்ச்சியில் இறங்கியதும், நிஜ வாழ்க்கையில் தன்னை விட பதினைந்து வயது இளைய மல்யுத்த வீரரை மணந்து கொண்டதும் அவரின் இமேஜை காப்பாற்றிய விஷயங்கள்.... ஷீலா, சூர்ய கலா, டி.பி.ராஜலெட்சுமி, என்று ஆடைக்குறைப்பு விஷயங்களை அமுலுக்கு கொண்டு வந்தவர்களின் மத்தியில் அதெல்லாம் செய்யாமல், தன் கண்களாலேயே ரசிகர்களை கட்டிப்போட்டவர் டி.ஆர். ராஜகுமாரி.
நடிகை லட்சுமியின் அம்மா குமாரிருக்மணி (இப்போது ருக்மணியம்மாள் என்றால் லட்சுமி கோபிக்க மாட்டாரோ!) ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் அறிமுகமானதுடன், அப்போதைய நிலவரத்திற்கேற்றபடி கவர்ச்சி காட்டி வந்தார். இத்தாலி போய் போப் ஆண்டவர் முன்னால் பாடி போட்டோசு பெறுகிற அருகதையை பெற்றிருந்த சிறந்த பாடகி வசுந்தரா தேவி ஐம்பதுகளின் பின்னால் சிறந்த கவர்ச்சி நடிகையாம்... இவரின் மகள்தான் வைஜயந்திமாலா! தாய் பதினாறு அடி... குட்டி முப்பத்திரண்டு அடி... அளவான உடற்கட்டும், வளமான முகவெட்டும், இவர் இந்தி படங்களிலும் கொடி நாட்ட உதவியது. இவரின் கவர்ச்சிதான் பின்னாளில் இவரை எம்.பி.ஆக்கவும் உதவியது என்பதை மறுத்து சொல்பவர்கள் குறைவாகதான் இருக்கமுடியும். தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகமான அஞ்சலி தேவியும், மாங்கல்யம் மூலம் அறிமுகமான ராஜசுலோசனாவும், அமுதை பொழியும் நிலவே பாடிய ஜமுனாவும், கண்களாலும் கொஞ்சு தமிழ் பேசிய கன்னடத்து கிளி சரோஜா தேவியும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்ததில் முக்கியமானவர்கள். விமான பணிப்பெண்ணாக இருந்த காஞ்சனா, கனகாவின் அம்மா தேவிகா, நடுமார்பில் மச்சம் இருப்பதை காட்டி ரசிகர்களுக்கு பைத்தியமே பிடிக்க வைத்த பாரதி.... இவர்கள் போட்ட வலையிலிருந்து தமிழ்சினிமா ஒருபோதும் மீள முடியாது.
இப்போதும் வீடியோ கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் பதினாறு வயதினிலே மயிலு ஸ்ரீ தேவியும், இன்னும்.... இன்னும்... கொஞ்சம்... என்ற டயலாக்கிற்கு அவர் தொடை காட்டிய அழகும் மறக்கக்கூடிய காட்சிகளாக இல்லை. லேசான ஆண் குரலாக இருந்தாலும் மார்பு எகிற ஓடி வருகிற வித்தையை சொல்லிக்கொடுத்தவர் ஸ்ரீ ப்ரியாதான். (உயிரே... உயிரே... மனீஷா கொய்ராலாவுக்கெல்லாம் இவர்தான் அக்கா!)
தன் தாராளமான ஏராளமான மார்போடு தனி ஆவர்த்தனம் வாசித்தவர் தீபாதான்! இவர் படம் போட்ட போஸ்டரை பார்த்து விட்டே தூக்கத்தை இழந்த ரசிகர்களை இவர் தென்னாடெங்கும் பெற்று வைத்தவர். திடீரென்று கிறிஸ்தவ மத போதகராகி விட்டார். (ஆனாலும் இவர் பேரை சொல்லிக்கொண்டு இன்னமும் பிழைத்து வருகிற போட்டோங் தியேட்டர்காரர்கள் அதிகம்!) ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, இவர்களெல்லாம் ஊறுகாய்போல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் முழுக்க முழுக்க இவர்களின் கவர்ச்சியை பயன்படுத்தியவர் விட்டலாச்சார்யாதான்... ஜெயமாலினிக்கு ஹீரோயின் அந்தஸ்து கொடுத்தவர். இப்போது போலீஸ் அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவரின் சகோதரி ஜோதிலட்சுமி இபபோதும் கவர்ச்சி குறையாமல் ஆடி வருவதுடன் தன் மகளான ஜோதி மீனாவையும் இதே துறையில் இதே பாணியில் இறக்கியிருந்தது கொஞ்சம் ஆச்சர்யம்தான். அதைவிட ஆச்சர்யம், இருவரும் ஒரே பாடலுக்கு ஆடுவதும் ஒருவரையருவர் கவர்ச்சியில் மிஞ்சியதும்தான். அபிலாஷா, குயிலி, கவிதா ஸ்ரீ, என்று வந்து அறைகுறை ஆடையுடன் ஆடிப்போன இவர்களில் அபிலாஷா முதல்பாவம் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். குயிலியின் நிலா அது வானத்து மேலே டியூனுக்காக ரசிக்கப்பட்டது என்றாலும், குறிப்பிட்ட சதவீதத்தினர் குயிலிக்காகவும் அந்த பாடலை ரசித்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
கவர்ச்சி பாடல் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்ட நடிகைகளில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினிக்கு பிறகு அதிகப்படங்களில் ஆடி ரசிகர்களை சூடேற்றிய பெருமைக்குரியவர் டிஸ்கோ சாந்தி. தமிழ்சினிமா சரித்திரத்தில் சில்க் ஸ்மிதாவின் பெயர் அழியக்கூடியதாக இல்லை. அவருக்கு உடம்பின் அத்தனை அங்கங்களும் கவர்ச்சி என்றால் கண்கள் இரண்டும் கவர்ச்சியின் தலைநகரம். லேசாய் கண்களை சுழற்றி உதட்டை கடித்தபடி பார்க்கும் அவரின் பார்வையில் தமிழ்நாடே கட்டுண்டு கிடந்தது. அவர் சாப்பிட்டு மீதம் வைத்த ஆப்பிளை ஏலம் விட்டபோது அது பல ஆயிரம் ரூபாய்களுக்கு ஏலம் போனது என்கிறது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்!! அவரின் மரணம் வயதானவர்களையும் கண்ணீர் விட வைத்தது. சில்கின் மணவாழ்க்கையும் அவரின் மரணத்தை போலவே புதிரானதுதான்.
கவர்ச்சிக்காகவே பாடல்கள் திணிக்கப்பட்டு மேற்கண்ட நடனப் பெண்மணிகள் ஆடிவிட்டு போவதெல்லாம் ஒரு தருணத்தில் தகர்த்தெறியப்பட்டது, மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் ஒரு பாடலுக்காக பயன்படுத்தப்பட்டார் கதாநாயகி அந்தஸ்த்தில் இருந்த நிஷாந்தி! அதற்கு பின் ஒரு பாடலுக்காக மட்டும் கதாநாயகிகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்தது. தனியாக ஆடுவதை விட படத்தின் கதாநாயகிகளே கவர்ச்சி செய்ய ஆரம்பித்தது மணிரத்தினம் படங்களுக்கு பின்தான்!!! மும்பை நடிகைகள் வந்த பிறகு இவர்கள் கதாநாயகிகளாக நடித்தாலும் ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி இவர்கள் செய்கிற வேலைகளை சில காட்சிகளிலாவது செய்தார்கள். இதற்காகவே டூ இன் ஒன் உபயோகமாக இருக்கட்டும் என்று பல தயாரிப்பாளர்கள் மும்பை பக்கம் படையெடுத்து அங்கிருந்து நடிகைகளை இறக்குமதி செய்தனர். அதற்காக அவர்கள் ஏராளமான பணத்தை செலவு செய்யவும் தயாராக இருந்தனர். அப்படி மும்பையிலிருந்து வந்த நடிகைகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கடைவிரித்தனர். காதலன் படத்திற்காக மும்பையிலிருந்து வந்த நக்மா உடை விஷயத்தில் தாராளம் காட்டியதுடன் சுண்டி இழுக்கும் நடன அசைவுகளால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். கோபாலா, கோபாலா பாடலில் அவரது ஆட்டத்தை கண்டு ஆடாத ரசிகர்களே இருக்கமுடியாது. நக்மா மோகத்தை தகர்த்தெறிவதற்காகவே படைக்கப்பட்டவர்போல் வந்திறங்கினார் ரம்பா. அவரின் தொடையழகு ஒன்றே தயாரிப்பாளர்களுக்கு பெரிய முதலீடாக இருந்தது. ரசிகர்களின் வெறித்தனமான அன்பிற்கு முன் திக்குமுக்காடி போயின திரையரங்கங்கள். அவர் படம் திரையிடப்படுகிற தியேட்டர்களில் முட்டிமோதிய இளைஞர் கூட்டத்தில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே அதிகம். இவ்வளவு ஆர்பாட்டத்திற்கும் காரணமான தன் தொடையை அவர் பல லட்சங்களுக்கு இன்ஷ§ர் செய்திருக்கிறார் என்று பத்திரிகைகளும் கிசுகிசுக்கள் எழுதி வருகின்றன.
இவருக்கு முன் வந்த குஷ்புவிற்கு கோயிலே கட்டி வழிபட்ட ரசிகர்கள் அவருக்கும் பிரபுவிற்கும் திருமணம் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் அக்கோயிலை இடித்துவிட்டார்கள் என்பதெல்லாம் வியப்பூட்டும் விஷயங்கள். ஆனால் அவரைவிட அதிகம் ரசிகர்களையும் அவர்களின் வெறித்தனமான அன்பையும் பெற்று வைத்திருப்பவர் ரம்பாதான் என்று வாதம் செய்கிற திரைப்பட விமர்சகர்களும் உண்டு. அப்படிப்பட்ட ரம்பாவையே லேசாய் தடுமாற வைத்துவிட்டு புயல் வேகத்தில் நுழைந்திருக்கிறார் சிம்ரன். எந்த பத்திரிகையை புரட்டினாலும் சிம்ரன்..சிம்ரன்..சிம்ரன்... இதற்கெல்லாம் காரணம் அவரின் அசர வைக்கும் கவர்ச்சிதான். டூ பீஸ் உடையில் ரம்பா எந்த உயரத்திற்கு போனாரோ அதே உயரத்தை தொட இவரும் அதே டூ பீஸ் பாலிசியைத்தான் கையாள்கிறார். இப்போது வருகிற சிம்ரன் படங்களில் தப்பாமல் அவரின் குளியல் காட்சியும் இடம் பெற்றுவிடுகிறது. நக்மா ஃபீல்டை கலக்கிக் கொண்டிருக்கும்பொழுது நான் வந்தேன். ரசிகர்கள் என்னை மொய்த்துக்கொண்டார்கள். நக்மா இடத்தை நான் பிடித்துக் கொண்டேன். இப்போது என் இடத்தை பிடிக்க சிம்ரன் முயற்சிக்கிறார். சினிமாவில் இது சகஜம்தானே... என்று ரம்பா சொன்னாலும் தன்னை சிம்ரன் முந்திவிடக்கூடாது என்பதில் அவர் குறியாக இருப்பது தெரிகிறது. ரொம்பவும் கவர்ச்சியாக நடிக்காமல் மிதமாக கவர்ச்சி காட்டி வந்த மீனாவிற்கு என்ன நிர்பந்தமோ? நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் டூ பீஸ் உடையில் நடித்து ரம்பாவுக்கும், சிம்ரனுக்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறார். ஆனால் அதற்கேற்ற உடலமைப்பு அவரிடம் இல்லையென்பது மீனாவின் ரசிகர்களே ஒப்புக்கொண்ட விஷயம். சாக்ஷி, கீர்த்திரெட்டி போன்ற நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை தருகிற ரகம் என்றாலும் கவர்ச்சி காட்டுகிற விஷயத்தில் ரசிகர்களுக்கு இனிப்பானவர்கள்தான். கவர்ச்சியாய் நடிக்காமலேயே ஜெயித்து காட்டுவேன் என்று சொல்லும் சங்கீதாவும், சுவலட்சுமியும் ஓரளவிற்கு வெற்றியடைந்தாலும் குறுகிய காலத்தில் பனிப்புயல்போல் வந்துவிட்டு போகும் கவர்ச்சி கதாநாயகிகள் காலத்தே பயிர் செய்து அமோக விளைச்சலை அறுவடை செய்கிறார்கள் என்பதே உண்மை.