போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றம் சாட்டுகிறோம் என்று சர்வதேச விசாரனைக்கான கையேடு We accuse: War crimes and genocide என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தேவநேயப்பாவணர் நூலகத்தில் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் என்ற அமைப்பு நடத்திய இவ்விழாவிற்கு வருகை புரிந்த மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது…
ஹிட்லர் என்றால் யூதர்களுக்கு எதிராக இருந்து லட்சக்கணக்கான மக்களை கொன்று ஒழித்தான். குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு என்றால் அங்கே இறந்த பல மக்கள் கண் முன் நிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் என்றால் ஒரு இனம் அழிப்பு நடந்ததை சொல்கிறது. இவற்றிற்கு எல்லாம் ஆளும் வர்க்கம் துணை புரிந்தததாலே நடைபெற்றது.
வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள் என பாரபட்சம் இல்லாமல் இலங்கை அரசு ஒரு இனப்படு கொலை செய்து வைத்து இருக்கிறது. இதை மறக்க முடியுமா..? ஐநா சபையினர் ஒரு குழு அமைத்து ஏதேதோ செய்தார்கள் . எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனால் நாம் அப்படி இருக்க இயலாது. அப்பாவி மக்களை கொன்று ஒழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாம் ஒன்று திரண்டு நியாயம் நீதி கேட்கிறோம் அதை பெறும் வரை உறங்க முடியாது.
2009 நாடாளுமன்ற தேர்தலின் போது நான் போட்டியிட்டேன். அன்று சென்னையில் உண்ணாவிரத நாடகம் நடத்தினார் முன்னாள் முதல்வர் அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நான் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடந்தால் அதற்கு பெயர் சூரிய நமஸ்காரம் இல்லை என்றேன்.
இலங்கை அரசு நல்லிணக்க ஆணையம் அமைத்து எட்டு பேரை அக்குழுவில் நியமித்தனர். ஒரு பெண் உறுப்பினர் . பதினெட்டு மாதம் செயல்பட்ட அந்த அமைப்பு போர் நடந்த பகுதிகளுக்கு ஆறு நாள் தான் போனது. பதினேழு நாட்கள் ஆய்வு நடத்தியது. இதெல்லாம் ஒரு வகையான கண் துடைப்பு தான், இலங்கை அரசு நடத்திய நாடகமாகும்.
அக்டோபர் 2008 முதல் மே 2009 வரை நடந்த இலங்கை இன அழிப்பு போரில் 1,46,619 பேரை காணவில்லை என மன்னார் பகுதியை சேர்ந்த பிசப் ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஐநா சபையின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டது. சேனல்-4 ஆவணப்படம் வெளியிட்டது. ரெட்கிராஸ் அமைப்புகள் மருத்துவமனையை பயன்படுத்த விடவில்லை என புகார் அளித்தது.
இது போன்ற பல ஆதாரம் இருந்தும் எதுவுமே நடக்காதது போல் இந்திய அரசு இருக்கிறது. ஒரு இனம் அழிக்கப்பட்டுகொண்டு இருந்தபோது இந்திய அரசு வக்கற்ற கையாளாகாத தனத்தை தான் செய்துகொண்டு இருந்தது.
கேரளாவில் இத்தாலி கப்பல் ஒரு மீனவனை சுட்டுவிட்டது அதற்காக பேச்சு வார்த்தை நடத்த இத்தாலியில் இருந்து பலர் வருகிறார்கள். 300 மீனவர்களுக்கு மேலான தமிழக மீனவர்களை கொன்று ஒழித்தது இலங்கை கப்பல் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு எல்லாம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். நஷ்ட ஈடு கேட்க வேண்டும். தமிழீழ மக்களை காப்பாற்ற வேண்டும். மதம், கொள்கை இப்படி எதில் வெவ்வேறாக இருந்தாலும் தமிழீழ பிரச்சனையில் ஒரே அணியாக திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை செய்து ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற வேண்டுமென நான் வழக்கு தொடுத்து இருக்கிறேன் அதற்காக ஒரே அணியாக இருந்து உழைப்போம்…
-தமிழ்தாசன்..,
|