புத்தகத்தின் பெயர் : பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் |
விலை : ரூ.800 |
எழுத்தாளர் : பழ.நெடுமாறன் |
பதிப்பகம் :
தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன் , சி பல்லவபுரம்,
சென்னை – 600 043.
|
வீறுகொண்ட வேங்கையாய் தமிழனின் உணர்ச்சியாய் ரத்தத்தில் கலந்துவிட்ட வீரத்திருமகன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய முழு விவரம் அடங்கிய ஒரு புத்தகம் இல்லையே எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம்.
உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். 1988ஆம் முதல் பதிப்பாக 104 பக்கங்களை கொண்டு வெளிவந்தது . இரண்டாம் பதிப்பாக 1208 பக்கங்களுடன் வெளிவந்து இருக்கிறது.
பிரபாகரனை பற்றிய முழு விவரமும் அடங்கிய புத்தகம் வரவேண்டும் என்றால் அது அவரே சுயசரிதை எழுதி இருந்தால் தான் சாத்தியப்பட்டு இருக்கும். ஏனெனில் பிரபாகரனின் வாழ்க்கை அவ்வளவு துன்பங்களும், சாகசங்களும் நிறைந்தது. ஆனால் இந்த புத்தகத்தில் அவரே பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் உள்ளன என்று விளக்கம் அளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.
புத்தகத்திற்கு அணிந்துரை ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள். பிரபாகரனின் வாழ்க்கையை வெறும் வரலாறாக மட்டும் அல்லாமல் அத்துடன் இணைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் , தமிழீழ விடுதலை புலிகளை பற்றியும் விரிவான விளக்கம் உள்ளது.
ஆண்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன், மாத்தையா, கிட்டு, புலேந்திரன், பொன்னம்மான், விக்டர், சீலன், இளங்குமரன், குமரப்பா ஆகியோர் உடனான பிரபாகரனின் நட்பை பற்றிய குறிப்புகள் சுவாரசியமானவை. பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதங்கள், சிறு வயதில் இருந்து இளமை பருவம், போராட்டக்களத்தில் , குடும்பத்துடன் என அவரது அழகான வண்ணப்படங்கள் தொகுப்பு அருமை.
மேலும், பெட்டி செய்தியாக பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக நெடுமாறன் அய்யா அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு தவறாமல் பிரபாகரனின் பெற்றோர்கள் கலந்துகொண்டார்களாம் . அன்றைய முதல்வர் ஜெயலலிதா திருமண விழாவில் கலந்துகொண்ட அதேசமயத்தில் மணமக்களுக்கு மோதிரம் பரிசளிக்கப்பட்டதாம் பிரபாகரன் சார்பாக போன்ற ரகசிய தகவல்கள் எல்லாம் இப்புத்தகத்தில் படிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
ராஜீவ்காந்தி-பிரபாகரன் சந்திப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், திலீபனின் உண்ணாநிலை ஏற்படுத்திய புரட்சி, அமைதிப்படை ஏற்படுத்திய அழிவு, மதிவதனியும் பிரபாகரனும் தமிழீழ போராட்டத்தில் தம்பதியானது என ஒவ்வொரு தகவலும் உலகுக்கு அறைகுறையாய் தெரிந்ததை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிற உண்மை தொகுப்பு இந்த புத்தகம்.
விடுதலை புலிகளை பற்றியும், தமிழீழ விடுதலை போராட்டத்தை பற்றியும் அதனை தலைமையேற்று நடத்திய மேதகு பிரபாகரனை பற்றியும் என அனைத்து தகவல்களையும் ஒரே தொகுப்பில் கொண்டுள்ள இந்த புத்தகம் ஒரு வகையில் தகவல் களஞ்சியமாகிறது.
இந்திய இலங்கை உடன்படிக்கை, ரணில் –பிரபாகரன் உடன்படிக்கை, இடைக்காலத்தில் தன்னாட்சி அதிகார திட்டம் ஆகியனை இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றையும் அதை செயலாக்கிய தலைவனை பற்றியும் விளக்கம் அளிக்கும் இந்த புத்தகம் தமிழர்கள் படித்து பாதுக்காக்க வேண்டிய பொக்கிசம்.
புத்தகம் கிடைக்குமிடம்
தமிழ்க்குலம் பதிப்பாலயம்
58, 3வது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை - 600 087.
தொலைபேசி : 91-44-2377-5536.
|