First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகம் பேரணி: 19 ந் தேதி ராமேஸ்வரத்தில் நடக்கிறது - பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு - புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி? இலங்கை அதிபர் பரிசீலனை - ஆந்திராவில் கலவரம்: ஆறு பேர் உயிருடன் எரிப்பு - இலங்கை தமிழருக்காக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: தேமுதிக புறக்கணிப்பு
“ஷகிலா நடித்த மலையாளப் படங்கள் போல
இளசுகளிடம் பரபரப்பை ஏற்படுத்திய “நியூ”
திரு.கோவி.லெனின்

தணிக்கை செய்யாமல் 4 படங்களை அனுமதித்தால் “திராவிட நாடு” அடைந்து விடுவோம் என்றார் பேரறிஞர் அண்ணா. பாவம் அவருக்கு விவரம் போதவில்லை. நான்கைந்து படங்களுக்கு அவர் வசனம் எழுதியபோதும், அவையெல்லாம் தணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவந்தன. தணிக்கைத் துறையினருக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு திரைப்படம் எடுப்பது எப்படி என்பது அறிஞர் அண்ணாவுக்கும் தெரியவில்லை. அவர் காலத்து ஆட்களுக்கும் தெரியவில்லை. அதை இந்த நூற்றாண்டின் ஆபாசச் சிந்தனையாளனான இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கத்தான் அத்துப்படி, ஆபாசக் களஞ்சியமான “நியூ” படமே அதற்குச் சாட்சி.

அப்படி என்ன ஆபாசமாக சூர்யாவின் “நியூ” படத்தில் இடம் பெற்றுவிட்டது என்றும் ஆபாசம் ஆபாசம் என்று பேசுபவர்கள் அதையெல்லாம் செய்வதில்லையா என்றும் சூர்யாவின் வழக்கறிஞர்களாக திடீர் அவதாரம் எடுக்கும் திரைத் திறனாய்வாளர்களும் இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் இணைவது ஆபாசம் என்றால் நீயும் நானும் ஏது என வேதாந்தம் பேசுகிறார்கள் இந்த திடீர் வழக்கறிஞர்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை உண்டு, வரவேற்பறை உண்டு, அந்ததந்த அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவையெவை என்ற வரையறையும் உண்டு. கழிவறையில் போய்ச் சாப்பிட்டு விட்டு நடுக்கூடத்தில் வந்து கழிப்பது என்பது நமக்குத் தெரிந்து நாய்கள்தான் செய்யும், “நியூ” படத்தின் மூலம் திரையில் அதைச் செய்தவர் எஸ்.ஜே.சூர்யா.

விஞ்ஞான அடிப்படை என்ற முலாம்பூசி, சிறுவன் ஒருவனை வாலிபனாக்கி ஏறத்தாழ ஒரே வயதுடைய மனைவி மற்றும் தாய் இருவரின் நெஞ்சிலும் காட்சிக்குக் காட்சி சாய்ந்து கொள்ளும் கதாபாதிரத்தில் சூர்யாவே கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம்தான் “நியூ”. தாய் நெஞ்சும் போதாதென்று அதே வயதுடைய மடிசார் கட்டிய ஒரு மாமியின் நெஞ்சும் கூடுதலாகத் தேவைப்பட்டது “நியூ” சூர்யாவுக்கு.

ஆபாசத்துக்க அறிவியல் வண்ணம் பூசிய சூர்யாவின் நோக்கத்தை தணிக்கைத் துறையில் இருந்த சிலர் கண்டித்துக் கத்தரிக்கோலை கையில் எடுத்துள்ளனர். ஆனால் கத்தரியில் துண்டான காட்சிகளையும் திரையரங்கில் ஓடிய படத்தில் இணைத்து, ஒரு மாதிரியான மலையாளப் படம் நடுவே காட்டப்படும் துண்டுப்படம் போல “நியூ” படத்தை வெளியிட்டு கல்லா கட்டினார் சூர்யா.

ஓராண்டுக்கு முன் இந்தப் படம் வெளியான போதே, இயக்குநரின் வக்கிரச் சிந்தனையைக் கண்டித்து மகளிர் அமைப்புகள் பலரும் “நியூ” படம் ஓடிய திரையரங்குகளின் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆனால் திரையரங்கில் சீட்டு வாங்குவதற்காக நின்ற வரிசையினரில் பத்தில் ஒரு பங்கு அளவுகூட ஆர்பாட்டக்காரர்களின் அளவு இல்லை என்பதால் போராட்டம் நடத்தியவர்களை எகத்தாளமாகப் பார்த்தார் சூர்யா. ரசிகர்களின் வியர்வையைப் பாலாகக் குடித்த இந்த திருட்டுப் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்று சமூக அக்கறையுள்ள பலரும் யோசித்த வேளையில்தான், தந்தை பெரியாரின் தடத்தில் நடந்து வரும் வழக்கறிஞர் அருள்மொழி “நியூ” படத்திற்குத் தடைகோரி வழக்குப் போட்டார். அத்துடன் மேலும் சில வழக்குகளும் தொடரப்பட்டன.

ஷகிலா நடித்த மலையாளப் படங்கள் போல இளசுகளிடம் பரபரப்பை ஏற்படுத்திய “நியூ” படத்தை, இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்பதற்காகப் படம் வெளியாகிச் சில நாட்கள் கழித்து மேலும் ஒரு பாடல் காட்சியை சேர்த்தார் சூர்யா. அந்தப் பாடல் காட்சி ஏற்கனவே மும்பை தணிக்கை குழுவினரால் பல இடங்களில் கத்தரி போடப்பட்டிருந்தது. இதனை மறைத்துவிட்டு, ஒரே ஒரு இடம்தான் வெட்டப்பட்டது எனச் சென்னைத் தணிக்கை குழுவினருக்கு கடுக்காய் கொடுத்தார் சூர்யா.

தணிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்து வானதி சீனிவாசன் என்ற பெண்மணி இந்த மோசடியை சுட்டிக்காட்டியதுடன், என்னங்க படத்தில் எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு பெண்ணின் நெஞ்சில் சாய்ஞ்சுகிட்டே இருக்கீங்களே என்ன காரணம் எனக் கேட்டிருக்கிறார். அவர் சுட்டிக்காட்டிய மோசடியும் கேட்ட கேள்வியும் நியாயமானவை.

அதனால் சூடு கண்ட திருட்டுப் பூனையைப் போல் பதறிவிட்டார் சூர்யா. பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாததால் தனது செல்பேசியை அந்த பெண்மணியை நோக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக அந்தப் பெண்மணி கொடுத்த புகாரும் எஸ்.ஜே. சூர்யாவைச் சட்டரீதியாக இறுக்கத் தொடங்கியது.

இவை போதாதென்று, இன்னும் சில வழக்குகளும் சூர்யாவைப் பதம் பார்த்தன. சென்னை பாடி பகுதியில் உள்ள திரையரங்கில், தணிக்கைக் குழுவில் வெட்டப்பட்ட காட்சிகளையும் இணைத்து “நியூ” படம் ஓட்டப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் தணிக்கைத் துறையின் “ஏ” (ஆபாச) சான்றிதழ் முத்திரை இல்லாமலேயே “நியூ” படச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவை குறித்தும் வழக்குகள் பதிவாகின.

எஸ்.ஜே.சூர்யாவோ கல்லா கட்டிய களிப்பில் சட்டத்தை அலட்சியமாகப் பார்த்தபடி புளித்த ஏப்பம்விட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் சுத்தியலோ நங்கென்று அவரது தலைமீது அண்மையில் ஒரு போடு போட்டது. சூர்யா என்ற திருட்டுப் பூனையை முதன் முதலில் சட்டத்தின் துணையோடு இறுக்கிப்பிடித்த பெரியாரியப் பெண்மணி அருள்மொழி தொடர்ந்த வழக்கில்தான் அந்த சம்மட்டி அடித் தீர்ப்பு வெளியானது.

“நியூ” பத்திற்கு தடை என்பதே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆபாசக் காட்சிகளுக்காகத் தடை செய்யப்பட்ட ஒரே படம் என்ற பெருமை மகுடம் சூர்யாவுக்கு சூட்டப்பட்டது. அத்துடன் “நியூ” படம் தொடர்பான மற்ற வழக்குகளில் அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எஸ்.ஜே. சூர்யா ஓர் ஆபாசச் சிந்தனையாளன் என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனும் சான்றிதழைப் பெற்றுத் தந்தது வழக்கறிஞர் அருள்மொழியின் தீர்ப்பு. இதனையடுத்து செல்பேசியால் தணிக்கைக் குழு பெண் உறுப்பினரைத் தாக்க முயன்ற வழக்கில் சூர்யாவுக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. உண்மையிலேயே, ஒரு திருடனை அமுக்கிப் பிடிப்பது போலத்தான் சூர்யாவை மடிக்கிப் பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது காவல் துறை.

சூர்யா வசூல் ரீதியில் வெற்றிகரமான திரைப்புள்ளியாக இருக்கலாம். ஆனால் அவர் தரமான படைப்பாளி அல்லர் என்பதை உரத்துச் சொன்னது, அவர் கைதானபோது ஒட்டு மொத்தத் திரையுலகமும் கடைப்பிடித்த மவுனம். ஒரு பரவச அவசரத்தில் அவரது “நியூ” படத்தைப் பார்த்த மக்கள் கூட அவர் மீது என்ன மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு அவர் கைதான தினத்தன்று மாலையில் வெளியான நாளிதழ்களே சாட்சி.

எழும்பூர் காவல் நிலையத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லக் காவல் துறையினர் தயாராயினர். அப்போது காவல் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட அங்கு நின்ற 27பி பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி, இவன்தான் சூர்யாவா? ஒட்டடைக் குச்சியாட்டம் இருந்துகிட்டு என்னவெல்லாம் பண்ணுறான். நம்மகிட்டே டிக்கெட்டுக்கு பணம் வாங்கிப் பொழைக்கிற இவன் நம்மளைப் பத்தியே ஆபாசமா படம் எடுக்கிறான்னா என்ன தைரியம்? இவனை சும்மா விடக்கூடாது சவுக்கால அடிக்கணும் எனப் பேருந்தில் இருந்தபடியே சொன்னார் என்கிறது “மாலை முரசு” நாளிதழ்.அதே செய்தியின் தொடர்ச்சியாக ஒரு லாரி ஓட்டுநர் “இந்தக் கைது நடவடிக்கை கூட இவனுங்களுக்குப் பப்ளிசிட்டிதான்” என்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்திய தண்டணைச் சட்டத்திற்குட்பட்டு எஸ்.ஜ.சூர்யாவுக்குத் தீர்ப்பு வழங்கியது என்றால் தமிழக மக்களோ சூர்யாவுக்கு அரபு நாட்டுப் பாணியில் தண்டனை தரவேண்டும் என விரும்புகிறார்கள் என்பதையே மாலை நாளிதழில் வெளியான மக்கள் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

“நியூ” படம் வெளியான போதே அது குறித்து தாகம் இதழில் பேட்டியளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த ஜான்சிராணி அவர்கள், “மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வந்தாலும், எஸ்.ஜே. சூர்யாவின் “ஆபாசச் சிந்தனைக்கு அவரைத் தூக்கில் போட வேண்டும்” என்ற கருத்துப்பட கடுமையான குரலில் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்தக் குரலை சுவரொட்டியாக்கி ஒட்டப்பட்ட போது அதனை ஆள் வைத்து கிழித்தவர் எஸ்.ஜே. சூர்யா. அன்று சுவரொட்டியைக் கிழிக்கச் செய்தவரின் முகத்திரியை இன்று கிழித்திருக்கிறது வழக்கறிஞர் அருள்மொழி தொடுத்த வழக்கு.

தடை வித்க்கப்படுவதற்கு முன்பே “நியூ” படம் கல்லா கட்டியிருக்கலாம் . ஆனால் இனியும் ஆபாசத்தை மட்டுமே முதலீடாக்கி ரசிகர்களின் வியர்வையைக் கறந்து கல்லா கட்டலாம் என நினைப்பவர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். உனது சுதந்திரம் என்பது பக்கத்து வீட்டுகாரரின் படுக்கையறையை சாளரம் வழியே எட்டிப் பார்ப்பதல்ல, என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் சம்மட்டி அடிக்குள்ளாகி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுடிருக்கும் எஸ்.ஜே.சூர்யா திருந்தியிருப்பாரா?

கல்விக் கூடத்து அரிச்சுவடியான அ....ஆ..வை, கலவி நேரத்து முனகலின் ஒலியாக தொனிக்கும் வகையில் தனது அடுத்தப் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கும் “பி.எஃப்” சூர்யாவிடம் மாற்றத்தை எதிர்பார்க்கத்தான் முடியுமா?

கோவி.லெனின்


|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter