மிஷ்கினின்
மெ
ல்
ல
ந
க
ரு
ம்
ஸ்டைல்தான் இந்த படமும்! ஹரி போன்ற இயக்குனர்களிடம் இந்த கதை சிக்கியிருந்தால் முதல் பாதியை ஒரு ரீலிலும் இரண்டாவது பாதியை இன்னொரு ரீலிலும் அடக்கியிருந்திருப்பார். ஆனால் இவ்விரு ரீல்களையும் நீட்டி முழக்கியிருக்கிறார் மிஷ்கின். என்றாலும் யுத்தம் செய்யை ரசிக்க முடிவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஒளிப்பதிவு, மற்றொன்று பின்னணி இசை!
தமிழ்சினிமா இதுவரை காண்பித்த த்ரில்லர்களை அசால்ட்டாக ஓரம் கட்டிவிடுகிறது ஒவ்வொரு பிரேமும்! அரையிருட்டும், அதிர வைக்கும் குரூரமும் நெஞ்சை அறுக்கிறது.
செயல்பட முடியாத பணக்கார கிழவர்களின் இச்சைக்கு பலியாகும் பெண்களும், அவர்தம் குடும்பத்தினரின் குமுறலும்தான் கதை. இதற்கு மேல் விலாவாரியாக சொன்னால் படம் பார்க்கும்போது காற்று போன பலு£னாகிவிடுவீர்கள் என்பதால் நிற்க.
சிபிஐ ஆபிசர் சேரனுக்கு குற்றவாளியை கண்டு பிடிக்கிற வேலை. அதே நேரத்தில் காணாமல் போன தனது தங்கையையும் தேடுகிறார். காவல் துறையின் பாலிடிக்ஸ். கரண்ட் அரசியலை விட கொடுமையாக இருக்கிறது. அதில் சிக்கிக் கொள்ளும் தங்கை ஒருபக்கம். கசாப்பு கடையில் சிக்கிய கறி ஆடு மாதிரி சிதைக்கப்பட்டு பார்சலாக வெளியே வரும் கை கால், தலை சமாச்சாரங்கள் இன்னொரு பக்கம் தேடிக்கொண்ண்ண்ண்ண்ண்டேயிருக்கிறார் சேரன். முடிவு? ரொம்பவே பவர்ஃபுல்!
மிஷ்கினின் ஸ்டைலுக்குள் புதைந்து போயிருக்கிறார் சேரனும். ஆனால் நரேனும் சேரனும் ஒண்ணு என்று நினைக்க முடியாதபடி சில காட்சிகளில் தனித்தும் தெரிகிறார். அந்த சண்டைக்காட்சி சித்திரம் பேசுதடியை நினைவு படுத்தினாலும், நம்மையறியாமல் விசிலடிக்க வைப்பது நிஜம்.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி முத்துவுக்கு (இவரும் ஒரு இயக்குனர். பெயர் மாரிமுத்து) தனி அப்ளாஸ் கொடுக்கலாம். அத்தனை ஜகஜ்ஜாலங்களையும் அடக்கியாள்கிறது அந்த முகம். தெருவோர வண்டியிலிருந்து பூசணிக்காய் திருடும் அந்த அரையிருட்டிலும் களவாணித்தனத்தை வெளிப்படுத்துகிறது லகுவாக!
ஜெயப்பிரகாஷ் வழக்கம் போலவே பிரமாதப்படுத்தியிருக்கிறார். குடல் குத்தப்பட்டு மரண வாசலில் நிற்கும்போது கூட உடற்கூறுகளின் அறிவியல் பெயர்களை சொல்லி, அதெல்லாம் டேமேஜ் ஆயிடுச்சு. பொழைக்க மாட்டேன் என்கிறார். மருத்துவரல்லவா?
சேரனுடன் எப்போதும் வளைய வரும் வசனகர்த்தா ஈ.ராமதாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாம். சேரனையே சிபிசிஐடி ஆபிசர் என்று நம்பியாகிவிட்டது. பிறகு இவரென்ன...? விடுங்களய்யா!
ரசிகர்களை அசர வைத்திருக்கிறார் அம்மா நடிகை லட்சுமி. அதுவும் க்ளைமாக்சில் மேலே பாயும் குண்டுகளை தாங்கியபடியே எதிரிகளை குத்திக் கொல்கிற காட்சியை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இது வித்தியாசமான படம்தான். ஆனால் அந்த கேரக்டரில் இவரை சகித்துக் கொள்ள தனி தைரியம் வேண்டும் ரசிகனுக்கு!
ஜவுளிக்கடையில் உடை மாற்றுவதை பார்க்கும் முதலாளிகளின் வக்கிரத்தை இந்த மாதத்திலேயே மூன்று படங்களில் பார்த்தாயிற்று. ஃபிளாஷ்பேக்கும் கிட்டதட்ட ஒரே மாதிரிதான். (பர்மா பஜார் மீது பழி போடுவதை தவிர வேறு வழியில்லை)
சத்யாவின் ஒளிப்பதிவுக்காக யுத்தம் செய்யை மற்றுமொரு முறை சிலாகிக்கலாம். கே என்பவர் இசையமைத்திருக்கிறார். 'கன்னித்தீவு பொண்ணா' கதையில் ஒட்டவில்லை என்றாலும், மனசுக்குள் பசை போட்டுக் கொள்கிறது. பின்னணி இசையிலும் பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மீடியாவுக்கு முன்னாடி வாங்க கே!
மிஷ்கினை போலவே ஃபார்முலாவுக்குள் அடங்காமல் நிற்கிறது படமும். ஹீரோ, ஹீரோயின், டூயட், காமெடி என்று எதுவுமே இல்லை படத்தில். இப்படிப்பட்ட வித்யாசமான முயற்சிகளுக்கு ரசிகர்கள் கை கொடுத்தால் இன்னும் பல அதிசயங்களை சந்திக்கலாம் தமிழ்சினிமா! அதற்காக 'யுத்தம் செய்'தால் கூட தேவலாம்.
-ஆர்.எஸ்.அந்தணன்
|