பலமிழந்த பாலத்தை மையமாக வைத்து வலுவாக ஒரு கதையை சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அம்மு ரமேஷ். கமர்ஷியல் கறிவேப்பிலைதான் என்றாலும் அதிலும் ஒரு சோஷியல் மெசேஜ் இருப்பது ஆறுதல்.
அந்த காலத்து பாசமலர் தோற்றது இப்படத்தில் வரும் அக்கா-தம்பி பாசத்திற்கு முன்னால். தம்பிக்கோட்டை என்ற கிராமத்தை விட்டு சிறுவயதிலேயே வெளியேறி தம்பி நரேனுடன் வெளியூரில் வாழ்ந்து வருகிறார் மீனா. இந்த பிளாஷ்பேக்கெல்லாம் தெரியாமல் என்எஸ்எஸ் கேம்ப்புக்காக அதே தம்பிக்கோட்டைக்கு போகிறார் நரேன். போகிற இடத்தில் நடக்கிற பிரளயங்களுக்கும் தனது குடும்பத்திற்கும் இருக்கிற சம்பந்தத்தை அறிகிற நரேன் வில்லனையும் வில்லியையும் போட்டுத்தள்ளுவதுதான் க்ளைமாக்ஸ்.
அழகான அதே 'கொழுக் மொழுக்' அக்காவாக மீனா. அதே நேரத்தில் கண்டிப்பு காட்டுகிறது அவரது கண்கள். வேறொன்றுமில்லை, அவர் பேராசிரியராம்! ஈவ் டீசிங்கில் இவரே சிக்கிக் கொள்ள, உதவிக்கு வந்து சேரும் தம்பி நரேனும் அதை தொடரும் ஃபைட்டும் பல படங்களில் பார்த்தவை என்றாலும் மீண்டும் ஒருமுறை கைதட்ட வைக்கிறது! நரேனின் சொந்தக்குரல் மலையாள படத்தின் டப்பிங் எஃபெக்ட்டை தருவதுதான் சோகம்.
நரேன்-பூனம் காதலில் செம சுவாரஸ்யம். கோவில் சுவற்றில் இவர் வெள்ளையடித்து வைக்க, அதே சுவற்றில் பூனம் தன் பரீட்சை நம்பரை எழுதிவிட்டு போகிறார். ஹால் டிக்கெட் இல்லாமல் எக்ஸாம் ஹால் வரைக்கும் போய், நரேனின் உதவியுடன் மீள்கிற காட்சியெல்லாம் ஸ்டூடண்ட்ஸ் ஏரியாவை குறிவைக்கும் மின்னல்கள்.
காட்டு விலங்குக்கு கலர் சேலை கட்டிய மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறது சங்கீதாவின் பாத்திரப்படைப்பு. எதற்கெடுத்தாலும் 'ஹோய்ய்ய்ய்' என்று குரல் கொடுத்தபடி அவர் வரும்போதெல்லாம் 'எவனாவது வந்து சீக்கிரம் அடக்குங்களேன்ப்பா' என்கிறளவுக்கு சூடாகிறது நமக்கு. ஹ்ம்... அதுதான் அந்த கேரக்டருக்கான மரியாதை.
விக் வச்சாலும் அதே டெரர்... மொட்டை தலையுடனும் அதே டெரர்... நான் கடவுள் ராஜேந்திரனை பார்ப்பதற்கே அதிபயங்கர வீபரீதனாக இருக்கிறார். அந்த ஊர் பாலத்தை கட்டவே விடாமல் அவர் பண்ணும் வில்லத்தனத்திற்கும் அதே டெரர் ஃபிகர்.
பிரபு வீசிய அதே அரிவாளை முப்பது வருடம் கழித்து அதே இடத்திலிருந்து மீண்டும் நரேன் எடுத்து வில்லனை போட்டுத்தள்ளுவதெல்லாம் எப்படிதான் நடக்குமோ பாஸ§...?
தம்பிக்கோட்டை- கமர்ஷியல் சேட்டை!
-ஆர்.எஸ்.அந்தணன்
|