"தமிழ்சினிமா எடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன். ஒரு ஆங்கில படத்தை எடுத்திருக்கீங்களே" என்று முதல்வர் கருணாநிதி வியந்ததாக ஒரு செய்தி. சுரேஷ்கிருஷ்ணாவுக்கு கிடைத்த இந்த பாராட்டு வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கிறது ஒவ்வொரு பிரேமும்! நமது பார்வையை கடக்கிற ஒவ்வொரு காட்சிகளும் லட்சங்களால் நிரம்பியிருக்கிறது என்பதுதான் பெருத்த ஆச்சர்யமும் அதிசயமும்!
கொத்தடிமைகளாக சுற்று சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கிறது ஒரு கூட்டம். அவர்களின் தொழில் கப்பல் கட்டுவது. ஒருநாளைக்கு எட்டு மணி நேர உழைப்பு என்கிற நிம்மதியில் நெருப்பை கொட்டுகிறார் சுமன். தொழிலாளர் தோழரான அப்பா சரத்பாபுவை தந்திரமாக கொன்று விட்டு தினமும் 18 மணி நேர உழைப்பு என்று சாட்டை சொடுக்குகிறார் அவர்கள் மீது. எதிர்ப்பு குரலெழுப்பும் தொழிலாளர்களில் ஒருவரான நாசரை கொன்றுவிட, அவரது இடத்தில் உழைக்க வருகிறார் அவரது மகன் பா.விஜய். இவர்தான் இப்படத் தலைப்புக்கு சொந்தக்காரரான இளைஞன்.
இளைஞன் வந்தவுடன் கலைஞரின் பேனாவில் கனல் கொட்ட ஆரம்பிக்கிறது. கோபம், வசனம், கொந்தளிப்பு என்று புரட்சிப்பாதையில் பயணம் செய்கிறது கதை. நடுநடுவே ரம்யா நம்பீசனுடன் காதல் செய்கிறார் பா.விஜய். வெளிநாடுகளில் டூயட் பாடுகிறார்கள். தன்னோடு உழைக்கும் கொத்தடிமைகளையும் மீட்டு, கோட்டை சுவரையும் உடைக்கிறார் பா.விஜய் என்பதோடு நிறைவடைகிறது படம்.
நடிக்க நிறைய பழகியிருக்கிறார் பா.விஜய். என்றாலும் இந்த கேரக்டரில் முன்னணி ஹீரோ யாராவது நடித்திருந்தால் இந்த படம் எப்படியிருந்திருக்கும் என்ற ஏக்கம் ஏழாமல் இல்லை!
கண்களில் வெட்கம் வழிய ரம்யா நம்பீசன்! காதலிக்கிற போது வழிகிற அதே வெட்கம், தன் காதலர் மீரா ஜாஸ்மினால் கவர்ந்து செல்லப்படுவாரோ என்று நினைக்கிறபோது அச்சமாக மாறுகிறதல்லவா? அம்சம்!
கவலை தோய்ந்த மீரா ஜாஸ்மினின் முகம், கதைக்கும் பொறுந்திவிடுவது ரொம்பவே சவுகர்யம். வில்லாதி வில்லியாக நமீதா. (உடம்பை குறைங்க மேடம்!) இவரே பேசியிருக்கும் டப்பிங் குரல் கேரக்டருக்கேற்ற விஷக் கொடுக்கு!
வடிவேலுவின் ஹேர் ஸ்டைலை குழந்தைகள் விழுந்து விழுந்து ரசிப்பார்கள். அவரது தப்பித்தல் முயற்சியும் அதற்கான பலனும் காமெடி சேனல்களுக்கு விருந்து.
விழித்த விழி விழித்தபடி பிரமிக்க வைக்கிறார் கலை இயக்குனர் தோட்டாதரணி. அந்த பிரமாண்டம் 'தரணி' போற்றக் கூடியதுதான்! அதை அப்படியே சேதாரம் இல்லாமல் சேகரித்து தருகிறார் ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய். வித்யாசாகரின் பின்னணி இசையில் நிறைய மெனக்கெடல்!
டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவின் 50 வது படம். கலைஞர் கருணாநிதியின் 75 ஆவது படம். பா.விஜய் பாஸான படமும் கூட!
-ஆர்.எஸ்.அந்தணன் |