|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

ராவணன்
Goripalayam - Movie

பூசாரியையே அய்யனாராக நினைத்து கன்னத்தில் போட்டுக் கொள்கிற பக்தர்களுக்கு இது மணிரத்னம் படம் என்ற பிரமிப்பும் பக்தியும் இருக்கலாம். ஒரு விஷயம்... அய்யனாரே கோவிலை விட்டு வெளியேறி ரொம்ப வருஷமாச்சுங்க! அவரது கடைசி வரம் 'அலைபாயுதே' என்று ஞாபகம்.

பழசுக்கும் புதுசுக்கும் ஒரு பாலம் போட முயற்சித்திருக்கிறார் மணி. (படத்தின் கடைசியில் அறுந்து விழுதே, அதுதானுங்களா அது?) மலை கிராமத்தின் மஹா பராக்கிரமசாலி வீரா. (ப்பன் என்று நீங்கள் சேர்த்துக் கொண்டாலும் தப்பில்லை) ஆடு மேய்க்கிறவனை போல அவ்வப்போது பக் பக் பக்கென்று குரல் கொடுத்தாலும், பாரதி கவிதையை பாதியில் நிறுத்தினால் மீதியை சொல்கிற அளவுக்கு அறிவாளி! எஸ்.பி யின் மனைவியை கடத்தி காட்டுக்குள் வைத்திருக்கிறான். தங்கச்சி சாவுக்கு காரணமான எஸ்.பி க்கு அந்த வலி தெரியட்டும் என்பதுதான் அவனது நோக்கம். மனைவியை தேடி காட்டுக்குள் வரும் எஸ்.பி. ஒரு புறமும், கடத்தி வந்தவள் மீது காதலாகி திரியும் வீரா மறுபுறமுமாக நகர்கிறது கதை. இறுதியில் மனைவியை மீட்கிற எஸ்.பி. 'உன்னை அவன் தொட்டானா?' என்று கேட்க, தீயில் இறங்கி நிரூபிக்க வேண்டிய மனைவி என்ன செய்தாள் என்பதும், காதலில் விழுந்த வீராவுக்கு எஸ்.பி என்ன தண்டனை கொடுத்தார் என்பதும் க்ளைமாக்ஸ்.

கதையெழுதிய ஆத்மா எந்த விதத்திலும் 'ராயல்டி' கேட்கப் போவதில்லை. அதனால் அவரது பெயரையும் டைட்டிலில் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் வால்மீகிக்கும், கம்பருக்கும் வாரிசு நான்தான் என்று ஆளாளுக்கு வாரிசு பத்திரத்தோடு வருவார்கள் என்பதால் உஷாராகியிருக்கிறார் மணி. சீதாவின் மனசில் ராவணனுக்கும் இடம் கொடுக்கிறாள் என்பது சர்ச்சைக்குள்ளாகி படமே நிறுத்தப்படலாம் என்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். எனினும் இவரது திரைக்கதைக்கு கடைசி ரேங்க் கொடுப்பதே உத்தமம்! கை நடுக்கத்தோடுதான் இப்படி குறிப்பிட வேண்டியிருக்கிறது. சினிமாவில் 'நேற்று' என்பது இருந்தாலும், நிஜத்தில் அது இல்லையே சாமி?

மேக்கிங் என்ற வார்த்தைக்கு முழு பதமும் ராவணன்தான்! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு துவங்கி, தபஸ் நாயக்கின் ஆடியோ கிராபி வரைக்கும் மிரட்டலோ மிரட்டல். ஆனால் அதற்கு நேரெதிரான விதத்தில் திரையில் நடமாடுகிற ஒவ்வொரு பாத்திரத்திலும் கசிய கசிய ஓட்டை!

தங்கச்சி இறந்த துக்கம் துளியாவது முகத்தில் வேண்டுமே? அடுத்தவன் மனைவியோடு 'உசிரே போகுதே' என்று டூயட் ஆடுகிறான் வீரா. அட, அந்த பாடலாவது பொருத்தமான இடத்தில் வருகிறதா என்றால் இரண்டாவது ரீலிலியே மிஸ் பிளேஸ்மென்ட்! ரஹ்மானின் நல்ல பாடல்கள் எல்லாம் படத்தில் குதறப்பட்டிருப்பது இன்னொரு சோகம். போகட்டும்... என் புருஷன் நல்லவன் என்று வாதிடும் ஐஸ்வர்யாராயிடம், தூது சென்ற தம்பியின் சுட்டுக் கொல்லப்பட்ட சடலத்தை காட்டியாவது கேள்வி கேட்டிருக்க வேண்டுமல்லவா? ஸ்பாட்டில் எங்குமே ஐஸ்சின் முகம் தென்படவில்லையே.

திருநெல்வேலியில் கதை நடக்கிறது. ஆனால் நமது மண்ணுக்கான ஒரு அடையாளம் கூட திரையில் இல்லையே. படத்தில் வருகிற துண்டு துக்கடா கேரக்டர்கள் கூட, ராவணனுக்கு டப்பிங் பட எபெஃக்டை தந்திருப்பது வேதனை. டைரக்டரின் வட நாட்டு மோகத்திற்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறது நமது மண்! ஏணியை உதைக்கிறவங்களுக்கு கூரையை பிடிச்சு தொங்குவதுதான் முடிவு. இந்த படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது மணிக்கு.

இதற்கு முன்பே விக்ரமின் முழு அவதாரத்தையும் பிதாமகனில் பார்த்தாச்சு என்றாலும், சற்றே அழுக்கேறிய, நரம்பு புடைக்கிற இந்த விக்ரம் மனசை அள்ளிக் கொள்கிறார். இவர் பேசும் டயலாக்குகள் சில இடங்களில் புரியாவிட்டாலும் பாடி லாங்குவேஜ் சமன் செய்கிறது அதையெல்லாம். 'இங்கேயே இருந்திருங்களேன்' என்று கண்களில் காதல் மின்ன சொல்லுகிற விக்ரம், ஒரு காட்சியில் அத்தனை விரல்களாலும் ஐஸ்சை தொடாமலேயே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறாரே, சூடு பறக்கிறது தியேட்டரில்!

அடர்ந்த காட்டில் அழுக்கேறிய ஐஸ்வர்யாராய். ஆனால் நிலவில் சேறு தடவிய மாதிரி மாற்றவே முடியாத அந்த பளிச் பதறவும், குளிரவும் வைக்கிறது மனசை. ஒரு காட்சியில் விழுதை பிடித்துக் கொண்டு மேலேறி... தப்பிக்க முடியாமல் அறுந்து விழுந்து... நமது மார் முழுக்க ஐயோடக்ஸ் தடவ வைக்கிறார் மணி.

ஒரு துப்பாக்கியை எடுத்து பொட் பொட்டென்று சுட்டுக் கொண்டேயிருக்கிறார் ப்ருத்விராஜ். கண்களில் ரவுத்திரம் பொழிய வேண்டிய காட்சிகளில் கூட செய்வதறியாமல் தவித்து நிற்கிறார். எப்படி கவனிக்காமல் விட்டார் மணி? வெட்டப்பட்ட கையோடு ஒருவன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனை வழிநடத்தினால் வீராவை பிடிக்கலாம் என்பது தெரிந்தும் அவனை சுட்டுக் கொல்கிறாரே, அபத்தமய்யா... இவருக்கும் ஐஸ்சுக்குமான ரொமான்ஸ் காட்சிகளில் ஒரு பதற்றம் தெரிகிறது மனுஷனிடம். அதை மீறி ஒரு காட்சி அழகு. இது சுட்ட கையா? சுடாத கையா? நெஞ்சுல கை வச்சு சொல்லு என்று ஐஸ் சொல்ல, பட்டென்று அவரது நெஞ்சிலேயே கை வைக்கிறாரே ப்ருத்திவி, ஐஸ் ரசிகர்கள் நெஞ்சில பொற்ற்ற்ற்ற்றறறறாம!

கார்த்திக்கின் கேரக்டர் எதை உணர்த்த வேண்டுமோ, அதை உணர்த்தினாலும், அநியாயத்துக்கு நேரடி அர்த்தம் கற்பிக்க முயல்கிறார்கள். நகைப்புக்குள்ளாகியிருக்கிறார் நவரச நாயகன்! நித்யானந்தா வீடியோவில் பயன்படுத்திய அளவு கூட இந்த படத்தில் பயன்படுத்தப்படவில்லை ரஞ்சிதா. இங்கேயும் பணிவிடைதானா அவரது தலையெழுத்து?

வசனம் சுஹாசினி. மணியின் கச்சிதத்தை பல இடங்களில் உடைத்து தள்ளியிருக்கிறார். அந்த சிலைக்கு முன்பாக நின்று கொண்டு தனது மனசு மாறாமலிருக்க வேண்டும் என்று ஐஸ் உருக, அதற்கு விக்ரம் பதில் சொல்வதெல்லாம் காதல் பித்தர்களின் கவிதை முத்துக்கள்! அதை தாண்டி சுஹாசினியின் பேனா பேசுவதெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய பகுதியில்லை.

ரஹ்மானின் பின்னணி இசை பல காட்சிகளில் இடையூறாகவே இருக்கிறது. கலை இயக்குனர் சமீர் சந்தா உருவாக்கிய பாறாங் கற்களும், குகைகளும் யதார்த்தம். நம்பவே முடியாவிட்டாலும், க்ளைமாக்ஸ் ஃபைட் பாராட்டுக்குரியது.

ராவணனுக்கு பிறகு மணிரத்னம்? கோல்ஃப் விளையாட ஆசைப்பட்டாராம். பேசாம அதையாவது உருப்படியா செய்ங்க....

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter