முதல் காட்சியே ரயிலில் துவங்குகிறது. 'ஆஹா, சுகமான பயணம்' என்ற நிம்மதியோடு இருக்கையில் சாய்ந்தால், கதை தண்டவாளத்திலிருந்து தடம் புரள்கிறது. பேரிரைச்சல்... பெரும் கூச்சல்! நாலு ரேடியோவை காதருகில் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் எஃப் எம் கேட்ட மாதிரி கிர்ர்ர்ர்ர்...
கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜீவா, தன்னை மிலிட்டிரிக்காரன் என்று பொய் சொல்லி தூண்டில் போடுகிறார் அனுயாவுக்கு. இவரோ, ரேடியோ ஜாக்கியான தன்னை ஏர் ஹோஸ்டஸ் என்று பொய் சொல்கிறார். ஒருகட்டத்தில் உண்மை பல்லிளிக்கும் போது காதலில் விழுந்திருக்கிறார்கள் இருவரும். ஆனால், குறுக்கே நின்று கோர முகம் காட்டுகிறது ஈகோ. சின்ன சின்ன சண்டைகள், சிலிர்ப்பூட்டும் மோதல்கள், என்று கதை நகர்ந்திருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம். நடப்பதோ படு லோக்கலான ஸ்டன்ட்! திடீரென்று நாடக கொட்டகைக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஐயப்பட வைக்கிற மாதிரி ஒரு க்ளைமாக்ஸ். "இந்த ஜோடி கல்யாணம் பண்ணிகிட்டு வாழவா போவுது? விடுங்கப்பா" என்று நடையை கட்டுகிறது ஜனம்!
நடுத்தர குடும்பத்து ஜீவா, அம்மா தங்கச்சியிடம் காட்டுகிற பாசம் லைவ் ஷோ! அம்மாவிடம் கோபப்படுவதும், பின் மன்னிப்பு கேட்பதுமாக செம உருக்கம். ஆனால் அம்மா ஊர்வசி வழக்கமான அசமஞ்சம் என்பது ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க உதவியிருக்கிறதே தவிர, சென்ட்டிமென்ட் காட்சிகளில் மொத்த ஜீவனையுமே பஞ்சராக்குகிறது.
அனுயா-ஜீவா ஜோடியை விட, சந்தானம்-ஜீவா ஜோடி அமர்க்களம். "மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்" என்று முகத்தில் போதை வழிய சிரிக்கும் ஜீவா, ஆஹா....! ஒவ்வொரு முறையும் தனது காஸ்ட்லி போனை ஜீவாவின் கோபத்திற்கு காவு கொடுக்கும் சந்தானமும் கலகலக்க வைக்கிறார். 'தண்ணி, சு...' என்று இவர் பேசும் டயலாக், சத்தியமாக விகடன் குழுமத்திற்கு புகழ் சேர்ப்பதல்ல!
சரக்கடித்துவிட்டு கலாட்டா செய்கிற காட்சிகளில் எல்லாம் தியேட்டரை ரணகளமாக்குகிறார் ஜீவா. அதிலும் ஹாயாக அனுயாவின் ஆபிசுக்கே போய் போதையில் வம்பளக்கிற காட்சிகள் சூப்பர்! அட, வருகிற போலீசுமா சிரிப்பு போலீசாக இருக்கும்? ஒரே ஒரு மாண்டேஜில் கூட இவர்களின் முட்டல் மோதலை சுவாரஸ்யமாக சொல்லிவிடுகிற இயக்குனரையும் சில காட்சிகளுக்காக பாராட்டலாம். ஆசை ஆசையாக அனுயா கொடுக்கிற லெட்டரை மூக்கு துடைத்து கீழே போடுகிறாரே ஜீவா, அங்கே யுவனின் வாத்தியங்களையும் மீறி கேட்கிறது கைதட்டல்!
மேக்கப் விஷயத்தில் கொஞ்சம் சிக்கனம் பிடித்திருந்தாலும், ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக பின்னடைவை சந்தித்திருப்பார் அனுயா! அவரது நடிப்பு இந்த மைனசை ப்ளஸ் ஆக்கிவிடுவது வேறு விஷயம்! அவ்வளவு நேரம் ஜீவாவோடு மல்லுக்கட்டிய அனுயா, திடீரென்று தன்னையே கொடுக்கிற அளவுக்கு போனது எதனால்? தனியாக ஒரு கோனார் உரை போட்டால் கூட புரியாத சமாச்சாரம்.
கதை கோவைக்கு நகர, அங்கே இன்னொரு அசமஞ்சமாக கு.ஞானசம்பந்தன். (பட்டி மன்ற பொழப்பை பாருங்கப்பு...) இவரது குடும்பத்தில் இவர் மட்டுமல்ல, துணைக்கு சத்யனும். உ...ஸ்ஸ்..!
இத்தனை கூச்சலுக்கு நடுவிலும், ஹாயாக தாலாட்டுகிறார் யுவன். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' யில் நா.முத்துக்குமாரும், யுவனும் இரட்டை விருந்து தருகிறார்கள். ஒளிப்பதிவு அற்புதம். இயல்பை மீறாத பல காட்சிகளில் ஸ்டடிகேமின் ஆதிக்கம்!
இரக்கம் பார்க்காமல் கத்தரி போட வேண்டிய எடிட்டர், 'லாங் லீவ்' போலிருக்கிறது. அதுவும் படம் முடிந்த பின்பும் ஓடும் அரை மணி நேர படத்தை பார்க்க தியேட்டரில் ஆளே இல்லை.
கால காலமாக பின் தொடர்கிற பழமொழிதான். மதிப்பெண் போடுகிற வாத்தியாரின் பிள்ளை மக்கு... மக்கு...!
-ஆர்.எஸ்.அந்தணன் |