கண்ணுக்கு புலப்பட்டும், மனசுக்கு புலப்படாத பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தி, 'த்தோ பாருங்கடா' என்கிறார் பாலா! விளிம்பு நிலை மனிதர்களின் அவலத்தை இதை விட செருப்பால் அடித்தாற் போல சொன்னவர்கள் எவரும் இலர்! ஜெயமோகனின் வசனங்களில் தெறிக்கும் அனல், தாரை காய்ச்சி ஊற்றியது போல அவ்வளவு சூடு. படம் முடிந்து வெளியே வரும்போது, 'சே... என்னடா உலகம் இது' என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள் இருவரும்!
இரண்டு துருவங்களில் இருந்து துவங்கி நகரத் தொடங்கும் கதை, ஓரிடத்தில் மையம் கொண்டு பேயாட்டம் போடுகிறது. இந்த மையப்புள்ளியில் தெறிக்கும் ஆவேசமும், அனல் காற்றும் சென்சாருக்கு தப்பி வந்தது ஆச்சர்யம்! (வந்ததே இவ்வளவு என்றால் நறுக்கிப் போட்டது எவ்வளவோ?)
ஜோதிடனின் பேச்சை கேட்டு (சுமார்) பத்து வயது மகனை காசியில் விடுகிறார் அப்பா. பதினாலு வருடங்கள் கழித்து தேடிப்போகும்போது பையன் சன்னியாசியாகி நிற்கிறான். (இந்த சன்னியாசி, அலங்காநல்லூர் வகையறா!) திமிரிக்கொண்டு நிற்கும் இவனை வீட்டுக்கு அழைத்து வந்தால், ஊர் உறங்கும் நேரத்தில் உடுக்கை அடிக்கிறான். வீட்டுக்குள்ளேயே அமர்ந்து கஞ்சா புகைக்கிறான். பெற்ற அம்மாவிடம் "தூமைன்னா என்னன்னு தெரியுமாடி" என்கிறான். சாமியே கண்ணை திற. எங்களுக்கு கருணை காட்டு என்று கதறியழும் பிச்சைக்கார்களுக்கு இவன் கொடுக்கும் வரம் என்ன? ஊனமுற்றவர்களை வைத்து பிச்சையெடுக்க வைக்கும் கொடூர மனம் படைத்தவர்களுக்கு 'அஹம் பிரம்மாஸ்மி, நானே கடவுள்' என்று இவன் கொடுக்கிற தண்டனை என்ன? இதுதான் நான் கடவுள்!
சவப்பெட்டியை படீரென்று திறந்தது மாதிரி கண்களை அகல விரித்து 'ஜெய் போலேநாத்' என்று அடிக்கடி கத்துகிறார் ஆர்யா. அவ்வப்போது தலைகீழாக நின்று இவர் செய்யும் ஆசனமும், நடிப்பும், வேறொரு நடிகன் 'தலைகீழாக நின்றாலும்' அடைய இயலாதது. கொலைப்பழிக்காக காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் காட்சிகளும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் காட்சிகளும், கைதட்டல் ஏரியா. கடிகார கணக்குப்படி பார்த்தால் நாற்பது நிமிஷம் கூட முழுசாக வந்திருக்க மாட்டார் ஆர்யா. ஆனால், தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆர்யாவின் நடிப்பு, காலங்களை கடந்தும் பேசப்படும்! சண்டைக்காட்சிகளில் ஆர்யா காட்டியிருக்கும் வேகத்தை அவரே இனியொரு முறை தொட முடியுமா என்பதும் சந்தேகமே!
முதல் காட்சியிலேயே கண்களில் சோகம் வழிய பிள்ளையை தேடும் அப்பாவாக அழகன் தமிழ்மணி. காசியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது புண்ணியத்தால் மேய்ந்திருக்கிறது கேமிரா. இன்னும் கொஞ்ச நேரம் காசியை சுற்றி வந்திருந்தால் புண்ணியத்தை காசி கொடுக்கிறதோ, இல்லையோ, ரசிகர்கள் கொடுத்திருப்பார்கள்.
ஏதோ நிறுவனம் போல நடக்கிறது பிச்சைக்கார பிசினஸ். இதை நடத்தும் தாண்டவன் என்ற கேரக்டர், வயிற்றில் புளியை மட்டுமல்ல, ஒரு மளிகை கடையையே கரைக்கிறார். பூஜாவின் பிடிவாதத்தால் பத்து லட்சம் போச்சே என்ற ஆத்திரத்தில் இவர் கொடுக்கிற தண்டனையும், குழந்தைகளிடம் இவர் காட்டுகிற ராட்சச குணத்தையும் மறுபடியும் ஒரு முறை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. துணை ஏஜென்டுகளாக நடித்திருப்பவர்களில் கிருஷ்ணமூர்த்தி மனதில் சில்லரையை கொட்டுகிறார். அன்பு அதிகமாகி எல்லாருக்கும் 'சரக்கு' வாங்கிக் கொடுப்பதும், கலெக்ஷனை அவர்கள் முன் வாரி இறைப்பதும் நெகிழ்ச்சி.
ஆ... ஊ... என்றால் பழைய பாடல்களை பாடி எரிச்சல் மூட்டுகிறார் பூஜா. (அண்டங்காக்காய் குரலாக இருந்தாலும் கூட இவரது குரலிலேயே பாட வைத்திருந்தால் நேர்மையாக இருந்திருக்கும்) அந்த மலைப்பாதையில் அபயம் தேடி ஓடும் இந்த பார்வையற்றவரின் நடிப்புக்கு கவுரவமான 'ஷீல்டு' ஒன்று காத்திருக்கிறது.
தாடி நீண்ட அந்த கிழட்டு தாத்தா (விக்ரமாதித்யன்) பேசுகிற அந்த நாலு வரி வசனத்தை எழுதவும், காட்சியாக பதிவு செய்யவுமே ஒரு தைரியம் வேண்டும்! '...வ்டியா மவன். நம்பள மாதிரி ஈனப்பிறவிகளை எப்படி கண் திறந்து பார்ப்பான்?' 'தீயிலே ஏதுடா அசுத்தம், சுத்தம்?' இப்படி பல இடங்களில் தீப்பறக்கும் வசனங்களை எழுதியிருக்கும் ஜெயமோகன், நகைச்சுவையையும் அனாயசமாக எழுதி தள்ளியிருக்கிறார்.
"சடை வளர்ந்தவன்லாம் சாமியாருன்னு திரியுறான்
பிச்சைக்காரனுக்கு பேச்ச பாரு...
ம் இவரு பெரிய அம்பானி
யாருடா அது?
ம், செல்போன் விக்கிறவன்"
அந்த பிச்சை கூட்டத்தில் டயலாக் பேசிய எல்லாருமே மனதில் நிற்பதுதான் பாலாவின் வெற்றி. குள்ள சிவன், கோக்கு மாக்கு பார்வதி, மூக்கு நசுங்கிய கிருஷ்ணர், ஓயாமல் ஜோக் அடிக்கும் வளர்த்தி கெட்ட பையன், குறிப்பாக பூஜாவை காப்பாற்ற அடிவாங்கி சாயும் அந்த திருநங்கை கூட!
ஆடியோ சிடியில் இருக்கிற சில பாடல்கள் படத்தில் இல்லாதது குறையே. இளையராஜாவின் பின்னணி இசை, முதல் படம் என்றே நினைத்து மெனக்கெட்டிருக்கிறது. சில காட்சிகளில் மனசை பிசைய வைக்கிறது. பல காட்சிகளில் அப்படியே உலுக்கி போடுகிறது. 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' ஏற்கனவே ராஜாவின் குரலில் அறிமுகமாகி, மனசுக்கு பழகியும் போன பாடல். அப்படியே பயன்படுத்தியிருந்தால் இன்னும் விசேஷமாக இருந்திருக்கும்.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அத்தனை கச்சிதம். அந்த மலைப்பாதையும், அரையிருட்டும், பிச்சைக்கும்பலின் அமானுஷ்ய வசிப்பிடமும் அப்படியே கண்களுக்குள் போட்டோவை போல பதிகிறது. ரசிகர்களை சோம்பல் முறிக்க விடாத எடிட்டிங்! முக்கியமாக கைகுலுக்கப்பட வேண்டியவர் ஆர்யாவின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த சூப்பர் சுப்பராயன்!
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கெட்டப்புகளில் வரும் ஜோக்கர்களை, 'அசத்த போவது யாருல' தினம் தினம் பார்க்கிறோமே? திகட்டுகிறது பாலா. கதையின் வேகத்திற்கு கடிவாளம் போடும் பல காட்சிகள் எரிச்சலும், செயற்கை தன்மை நிறைந்ததாகவும் இருப்பது அகோரம்!
மனசுக்குள் பம்மிக் கிடக்கும் பூனையின் முதுகில், கோடுகளை போட்டு புலியாக்கி பார்க்கும் சூரத்தனம் கொண்டவை பாலாவின் படங்கள்.
கதவை சாத்திக் கொண்டு ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி, சத்தம் போட்டு 'ஏச' வேண்டும் போலிருக்கிறது. அப்பவாவது இந்த சமுதாய சாக்கடை குறித்து பாலா கிளப்பி விட்ட 'வெறி' அடங்குதா பார்ப்போம்!
-ஆர்.எஸ்.அந்தணன் |