மோதல், காதல், பிரிதல், சேர்தல் இந்த நான்கு வண்ணங்களை வைத்துக் கொண்டு கனகு தீட்டியிருக்கும் இந்த ஓவியம், எல்லோருக்கும் பிடித்த எல்லோரா!.
தூத்துக்குடியில் ஆரம்பித்து பூனாவில் முடிகிறது கதை. அசோக்கிற்கும், விஷாகாவிற்கும் காதல். இது விஷாகா வீட்டிற்கு தெரியவர குடும்பமே வீட்டை காலி செய்து கொண்டு வெளியூர் போய்விடுகிறது. தவித்துப் போகிற அசோக், அவர்கள் பூனாவில் இருப்பதாக கேள்வியுற்று அங்கே பயணமாகிறார். காதலியை சந்தித்தாரா? கனவுகள் நிறைவேறியதா? சற்றே எதிர்பாராத முடிவுடன் சுபம்.
தன் சதை பிடிப்பை விட, தான் நடிக்கும் கதையில் துடிப்பு இருந்தால் போதும் என்ற நம்பிக்கை உடையவர் போலிருக்கிறது விஷாகா. அள்ளி எடுத்தால், ஐம்பது கிலோ தேறமாட்டார். ஆனால், நடிப்போ மூட்டை கனம். அந்த விபத்திற்கு தான்தான் காரணம் என்பதால் மெல்ல, மெல்ல அசோக்கை விரும்பும் விஷாகா, தன் வீட்டிற்கே அவரை அழைத்து காதலை வளர்ப்பதை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு “என்னை போகவிடுங்கப்பா” என்று கெஞ்சுவது பரிதாபம்.
சற்றே ஓவர் ஆக்டிங் என்றாலும், தமிழ்சினிமாவின் முக்கிய ஹீரோ அந்தஸ்தை விரைவில் எட்டிப்பிடிக்கிற லாவகங்கள் இருக்கிறது அசோக்கின் நடிப்பில். பூனாவில் இருக்கிற அத்தனை சர்ச்சுகளுக்கும் போய் விஷாகாவை சர்ச் பண்ணுகிற போது பரிதாபத்தை வரவழைக்கிறார். அலைச்சலுக்கு பலனாக அவரை நேரில் பார்த்துவிடுகிற போது தவிக்கிற தவிப்பும் நெகிழ்ச்சி.
கிராமத்து காதலர்களுக்கு கண்மாய்களையும், நகரத்து காதலர்களுக்கு மெரீனாவையும் குத்தகைக்கு விட்ட தமிழ்சினிமாவிற்கு, லாரிக்குள் காதல் வளர்க்கிற வித்தையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கனகு. புதுமைதான்! படம் நெடுகிலும் இழையோடும் நகைச்சுவை, கனகுவை அந்தகால பாக்யராஜாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அந்த சோப் சீன். என்ன சோப் போட்டு குளிச்சே என்று கிளுகிளுப்பை தலைக்கேற்றி மோப்பம் பிடிக்கும் அசோக்கிடம், படீரென்று கதவை திறந்து கொண்டு, கிளினருங்க இங்கே தங்கணுமாம். என்ன சோப்ணே வாங்கியார? என்று கஞ்சா கருப்பு கேட்கையில் தியேட்டரில் விசில் சத்தம்!
நல்லவேளையாக தன்னோடு கருப்பையும் பூனாவுக்கு அழைத்துச் செல்கிறார் அசோக். இல்லையென்றால், படத்தில் வரும் அந்த பூனா பகுதியே வீணா(க) போயிருக்கும்! கடும் பசியில் தமிழ் குடும்பம் ஒன்றை பார்த்துவிடும் கருப்பு, நைசாக பேசி இட்லிகளை அமுக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.
முடிவு எப்படி அமையுமோ என்று தவிப்பை ஏற்படுத்தியிருக்கிற இயக்குனர், அதை சரண்யாவின் கையில் ஒப்படைத்திருப்பது சற்று அதிர்ச்சிதான். ஆனால், வித்யாச விரும்பிகளுக்கு ஓ.கே! இயக்குனரை போலவே இன்வால்வ் ஆகியிருக்கிறார் இசையமைப்பாளர் மனுரமேஷன்.
தெரிந்தேதான் வைத்திருக்கிறார்கள் தலைப்பு
-ஆர்.எஸ்.அந்தணன்
|