பாம்பே இல்லாத பொந்துக்குள், பயமே இல்லாமல் கையை விட்ட மாதிரி கோடிகளை அள்ளிவிட்டிருக்கிறார் மாதேஷ். பளிச்சென இருக்கிறது ஸ்கிரீன் பிரசன்டேஷன். கதையும் அப்படியிருந்திருந்திருந்தால் மாதேஷின் பேங்க் பேலன்ஸ் 'மாலிஷ்' போட்ட மாதிரி மின்னியிருக்கும். இருந்தாலும் கதாநாயகி ஷர்மிளாவும், காமெடியன் சந்தானமும் நாம் உட்கார்ந்த இடத்தில் பெவிக்காலை ஊற்றி நகர விடாமல் செய்திருக்கிறார்கள். நன்றி சொல்வீர் கூட்டணிக்கு.
பிரபல தாதாக்களான பிரபுவுக்கும் ராவத்துக்கும் தீராத பகை. ராவத்தின் மகனை பிரபுவின் ஆட்கள் போட்டுத்தள்ள, பதிலுக்கு பிரபுவின் தங்கையை குறி வைக்கிறார் ராவத். இந்த அழகான தங்கை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பதால், அவரை கடத்திக் கொண்டு சென்னைக்கு வரும் பிரபு 'வீட்லேயே நிம்மதியா இரும்மா' என்கிறார். இந்த நேரத்தில்தான் சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் வினைய்யை கொடு'வினை'யாக வேலைக்கு சேர்க்கிறது பிரபுவின் தாராளம்.
வடைக்கு எலியை காவல் வைத்த மாதிரி 'லபக்'காகிறது இருவர் மனசும். இது புரியாத பிரபு முரட்டு நடையும் முண்டாசு பார்வையுமாக திரிகிறார் படம் முழுக்க. கடைசியில் உண்மை தெரியவர, அண்ணன் என்ன செய்தார், வில்லன் என்னவானார் என்கிற வழக்கமான மசாலாவை அரைத்து சுட சுட தோசை வார்க்கிறார் டைரக்டர் மாதேஷ்.
ராஜ்கிரணின் இடம் இப்போது பிரபுவுக்கு. அடித்தொண்டையால் அதட்டினாலும் அந்த அழகான முகத்தில் 'நானும் ரவுடிதாண்டா' என்ற இமேஜே சுற்றி சுற்றி வருகிறது. தங்கையின் காதலன் யாராக இருக்கும் என்ற ஆவலோடும், அதே நேரத்தில் எரிச்சலோடும் காவல் காக்கும்போது மட்டும் 'அண்ணன் ஒரு கோவில்' ஆகிவிடுகிறார் மனுஷன். தீர யோசிக்காமல் அவர் காட்டும் திடீர் கோபமும் ரசனைதான். லட்சங்களை வினைய் அடித்துவிட்டார் என்று நினைத்து அதட்டுவதும், பின்பு அவரது சமயோஜிதத்தை எண்ணி வியப்பதுமாக பிரபுவின் ஏரியா எப்போதும் 'வெயிட்'தான். அந்த பணப் பதுக்கல் ரசனையும் பலே மாதேஷ்.
ஆக்ஷனுக்கேற்ற உடம்பு இருந்தும், ரீயாக்ஷன் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது வினையிடம். (வினய் என்பதை வினைய் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள் பிரஸ் ரிலீசில். அதனால்தான் நாமும்) காதல் காட்சிகளில் மட்டும் குறும்பு தவழ்கிறது முகத்தில். முன் பற்களில் ஏதும் பிரச்சனையா வினைய்?
ஹீரோயின் ஷர்மிளா நயன்தாரா ஸ்ரேயாக்களுக்கு மிகாமலும், அஞ்சலி ஓவியாக்களுக்கு குறையாமலும் இருக்கிறார். அவரது அழகும் இன்னபிற சமாச்சாரங்களும் கோடம்பாக்கத்தின் வறட்சியை போக்கக்கூடும். இவரது வரவு தமிழ்சினிமாவின் வசந்த காலமாக அமையட்டும். அல்லது தமிழ்சினிமாவின் வசந்த காலம் ஷர்மிளாவுக்கு பயன்படட்டும்.
கணக்குப்பிள்ளை 'சாரி'யாக சந்தானம். 'அதென்னடா கெட்ட விஷயத்துக்கு மட்டும் கேரியர்ல சோறு கட்டிட்டு வந்துடுறீங்க' என்கிற அவரது சாட்டைக்கு தியேட்டரே வேட்டையாகிறது.
ஆறடி உயர வினைய்க்கு நாலடி உயர பாண்டியராஜன்தான் அப்பா. அவர் எம்பி எம்பி பேசுவதற்கெல்லாமா சிரிப்பது என்பதே தெரியாமல் சிரித்து வைக்கிறோம் நாமும். இந்த ஜாடிக்கேற்ற கரெக்ட் சைஸ்சாக உமா பத்மநாபன். நல்ல ஜோடிப்பொருத்தம்.
டி.கண்ணனின் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் கண்ணாடி தரம். பிரவீண் மணி இசையில் உருவான பாடல்கள் கேட்க கேட்க ரசிக்கப்படலாம்.
யானை நுழையுற குடிசையில பூனை நுழைஞ்சா தப்பில்லை. கூரை இடிக்குதேன்னு குமுறுனதுதான் வேடிக்கை. மிரட்டல்ங்கிற டைட்டிலும் அப்படிதான் இருக்கு.
-ஆர்.எஸ்.அந்தணன் |