'காதல் காதல்' என்று ஆயிரத்தெட்டு முறை பேப்பரில் எழுதி, அதையே வாயில் போட்டு மென்று செரித்திருப்பார் போலிருக்கிறது. அப்படியொரு மூடுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜிமோகன். பெரிய ட்விஸ்ட் இல்லை. பரபரக்கும் திரைக்கதை இல்லை. ஆனால் மொத்த தியேட்டரையும் கைதட்ட வைக்கிறார். விசிலடிக்க வைக்கிறார் இந்த பொல்லாத மோடி மஸ்தான்.
காதல் தோல்வி படங்களை காட்டி ரசிகர்களையும் இருமி இருமியே சாகிற அளவுக்கு படுத்துவதுதான் தமிழ்சினிமாவின் ஹிஸ்ட்டரி. முதன்முறையாக ஒரு காதல் தோல்வி படம் ஜாலியாக நகர்கிறது. அதுவே சென்ட்டிமென்ட் தலையில் விழுந்த இரும்பு சுத்தியல். வலுவாக 'போட்ட' பாலாஜிக்கு மறுபடியும் ஒரு பாராட்டு. (கிளிஞ்சல்கள் படத்தில் பூர்ணிமா ஜெயராம் காதல் தோல்வியால் தன் உள்ளங்கையில் ஆணியடித்துக் கொள்கிற காட்சியை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளுங்கள் வாசகர்களே)
ஆச்சர்யம் நம்பர் இன்னொன்று. இப்படத்தில் அமலா பால் நடிப்பையும் தோற்றத்தையும் நமக்கு பிடித்திருப்பதுதான். கதை என்று எடுத்துக் கொண்டால் பெரிசாக சொல்லிவிட முடியாது. எந்நேரமும் ஈகோவினால் அடித்துக் கொள்ளும் காதல் ஜோடி அமலாவும் சித்தார்த்தும். இவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் சின்ன சின்ன கோழி சண்டைகளும்தான். அது எந்த இடத்தில் நொறுங்குகிறது. எப்படி மீண்டும் சேர்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
சாம்பிராணி வாசனை போதாது என்று அதில் சென்ட்டையும் தெளித்த மாதிரி அற்புதமான இன்னொரு லவ்வையும் காட்டுகிறார் பாலாஜி. அமலாவின் அப்பா சுரேஷுக்கும் அம்மா சுரேகா வாணிக்கும் இடையே ஏற்படும் பிரிவும் கூடலும் அப்படியொரு சுவாரஸ்யம். பிள்ளைகளை பற்றி கவலைப்படாத பெற்றோர்கள் இந்த படத்தை ஒருமுறை பார்ப்பது ரொம்பவே நல்லது.
சித்தார்த்தே தன் கதையை கூறுவது போல துவங்குகிறது படம். தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறாரா...? 'ரெண்டு போடுங்க அமலா' என்று தியேட்டரில் கூச்சல் போடுகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவும் கொஞ்ச நேரம்தான். அப்புறம் எல்லாரையும் சைலண்ட்டாக கட்டிப் போடுகிறது சித்தார்த்தின் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் அவஸ்தைகளும். சொந்த காதலால் விழுகிற அடி போதாது என்று மற்றொரு ஜோடியின் லவ்வுக்குள் தலையை கொடுக்கும் சித்தார்த், ஏற்படுத்திக் கொள்கிற சிக்கல்களும் செம ஜாலி.
'அருண்... இப்ப என்ன நினைச்சிட்டு இருக்கே?' என்று அமலா கேட்கும்போது சித்தார்த்தின் மண்டைக்குள் 'ரண்டக்க ரண்டக்க' மியூசிக் ஓடிக் கொண்டிருக்கிறது. 'என்னவோ நினைச்சே. சொல்லேன்' என்று விடாமல் மடக்கும் அமலாவிடம் சித்தார்த் வலிய போய் மாட்டிக் கொள்கிற காட்சியெல்லாம் காதல் பண்டிட்களுக்கு மட்டுமே வாய்க்கிற கற்பனை. இதுபோல் ஏராளமான அல்வாக்களை இலை முழுக்க பரப்பி பந்தி வைத்துக் கொண்டேயிருக்கிறார் பாலாஜி.
இவர் லவ்வுதான் இப்படி என்றால், இவரைச்சுற்றி இருக்கிற பிரண்ட்ஸ் லவ் இருக்கிறதே, பயங்கர திருப்பங்களுடன் அபாயகரமான வளைவுகளை கடந்து ஓடுகிறது. பார்க்கும்போதெல்லாம் காதலிகள் கன்னத்தில் அறைவாங்கிப் போகிற அந்த குண்டு ஐடியா மணி, அண்ணன் என்று சொன்ன பிறகும் அந்த பெண்ணை காதலிக்க அலையும் மற்றொரு தோழன். தன்னை கை கழுவிய காதலி கொடுக்கும் பார்ட்டிக்கே வலிய போய் கலந்து கொண்டு, அவளது புதிய காதலனுக்கு சங்கு ஊத வைக்கும் மிர்ச்சி பாலாஜி என்று விதவிதமான காதல்கள், புலம்பல்கள், கலாட்டாக்கள்!
தமிழ்படம் என்ற ஸ்பூப் எடுத்த நிறுவனமாச்சே. வொய் நாட் என்று நிறைய புதுமைகள் படைத்திருக்கிறார்கள். முந்தைய சினிமாக்களில் நாம் பார்த்த மொக்கை பிகர்கள் கூட இந்த படத்தில் தேவதைகளாக தெரிகிறார்கள். எல்லாம் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் கைவண்ணம். இசை தமன். இந்த படத்தை பொறுத்தவரை உங்களை 'மியூசிக் ஆஃப்த மேன்' என்று சொல்ல முடியவில்லையே பிரதர்!
பழைய காதலை பிரேக் அப் ஆக்கிக் கொண்டு புதிய காதலை கேஷூவலாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் படத்தில் வரும் அநேக பாத்திரங்கள். காதலில் விழுந்து சாம்ராஜ்யங்களையே தொலைத்த சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது. இங்கே 'ஜஸ்ட் லைக் தட்' ஆக சொல்லப்பட்டிருக்கும் இந்த கருத்தை புத்திக் கொள்முதலாக கொண்டு வாலிபர்கள் பிழைத்துக் கொள்ள கடவது!
-ஆர்.எஸ்.அந்தணன்
|