'அம்புலியே அம்புலியே... நம்புலியே நம்புலியே...' என்ற டி.ராஜேந்தரின் புகழ்பெற்ற பாடல் வரிகளோடு இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப் பொருத்தம். ஏதோ புதுசா 'ட்ரை' பண்ணியிருக்கோம். பார்த்துட்டு சொல்லுங்க என்கிற டைப் இல்லை இந்த படம். அசர வைக்கிறது அந்த 3டி தொழில் நுட்பம். விட்டால் தியேட்டரில் சுண்டல் விற்கிற பையன், ஸ்கிரீன் பக்கமும் திரும்பி ஹீரோயின் கையிலும் ஒரு பொட்டலத்தை கொடுக்க எத்தனிக்கிற அளவுக்கு அந்த தொழில் நுட்பம், எழில் சுத்தம்! ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு அது மட்டும் போதுங்களா அண்ணாச்சி?
பவுர்ணமி தினத்தன்று உமா ரியாசுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அது குழந்தையல்ல, கொடூரமான மிருகம். கிராமத்திலிருக்கிற சோளக் கொல்லையில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்த மிருக மனிதன், அந்த பக்கமாக வருகிற அத்தனை பேரையும் அபேஸ் பண்ணி விடுகிறான். இதனால் ஊருக்கும் கொல்லைக்கும் நடுவே மதில் சுவரே எழுப்பி வாழ்கிறார்கள் மக்கள். இந்த நேரத்தில்தான் அந்த மனித மிருகத்தை தேடி புறப்படுகிறார்கள் இரு நண்பர்கள். அவர்களின் கதி என்ன என்பதை ஒரு காதலையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கரும் ஹரிஷ் நாராயணும்.
மொட்டை ராஜேந்திரனுடன் சோளக்காட்டு வழியே போக அச்சப்பட்டு 'அப்பா வேணாம்ப்பா' என்று அழும் அந்த சிறுமி மட்டும் அப்படியே கண்களில் நிற்கிறாள். அவளையும் ஸ்வாகா செய்யும் அந்த மிருக மனிதன் ஐயோ பாவம். கடைசி வரை குரங்கு சேட்டைகளை மட்டுமே செய்து செத்துப் போகிறார்.
இந்த படத்தில் பார்த்திபனும் நடித்திருக்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' வந்தாலும் வந்தது. இவரையும் இவருக்கான காஸ்ட்யூமையும் ஒரு தினுசாகவே யோசிக்கிறார்கள் இயக்குனர்கள். இந்த படத்திலும் பார்த்திபனை பார்த்து பச்சை குழந்தைகள் அழும். ஆனால் நிஜத்தில் அவர் வில்லனும் அல்ல, ஹீரோவும் அல்ல என்பதுதான் வேதனை.
கதை நடக்கும் காலம் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு முன்பு என்பதால் அந்த காலத்து ஸ்டைலில் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் என்று ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கல்லு£ரி லீவு நாட்களில் அங்கேயே தங்கிவிடும் ஹீரோவும் அவரது நண்பரும் அந்த காலேஜ் வளாகத்தை ஏதோ டாஸ்மாக் பார் போல பாவிப்பதும், பிரின்ஸ் டேபிளில் உட்கார்ந்து அலட்டுவதும் யதார்த்தம். அடிக்கடி ஃபுல் மப்பில் வந்து போகிற தம்பி ராமைய்யாவையும் அநியாயத்துக்கு வேஸ்ட் ஆக்கியிருக்கிறார்கள்.
வெங்கட்பிரபு ஷங்கர் என்பவர் இசையமைத்திருக்கிறார். பாடல்களை விட்டுத் தள்ளினாலும் பின்னணி இசை பின்னி பெடலெடுக்கிறது. ஒளிப்பதிவாளர்தான் இந்த படத்தின் ஹீரோ. அம்புலியின் வெளிச்சம் இவர்கள் என்றால், அதில் திட்டு திட்டாக தெரியும் கருப்பு வேறு யாருமல்ல. படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிற அதே இரட்டையர்கள்தான்.
படத்தின் ஆகப்பெரிய ஆறுதல், அவ்வப்போது ரொம்ப பக்க்க்க்க்க்க்த்தில் வந்து ஒரு ஐஸ்கிரீம் புன்னகையை நம் பாக்கெட்டில் வைத்துவிட்டு போகும் கதாநாயகி சனம்தான். அதற்காகவாவது மகா 'சனங்கள்' இந்த படத்தை பார்க்க வேண்டுமென கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.
-ஆர்.எஸ்.அந்தணன்
|