'ஹரி' என்றால் வேகம்! (இங்கிலீஷ்ல...) இந்த படத்திலும் பிடறியை குலுக்கிக் கொண்டு பேய் பாய்ச்சல் போட்டிருக்கிறார் ஹரி! அதென்னவோ தெரியல, போலீஸ் கதையை எடுக்கும்போதெல்லாம் இவருக்குள்ளிருக்கும் கதை ஞானம் தேவாரம் மீசையாகி கம்பீரம் காட்டுகிறது!
சொந்த ஊரிலேயே சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் துரைசிங்கம். மாமன் மச்சான் அண்ணன் தம்பிங்க என்று பழகினாலும், க்ரைம் என்று வந்தால் சங்கை அறுக்காமல் உட்காருவதில்லை மனுஷன். புயலடிக்கிற நேரத்தில பூ ஒண்ணு மாருல விழுந்த மாதிரி அனுஷ்கா வருகிறார் அந்த ஊருக்கு. சிட்டி பொண்ணுன்னாலும் தன்னோட சொந்த பந்தத்தை பார்க்கதான் இந்த ட்ரிப். வந்த இடத்தில் துரை சிங்கத்துடன் ஒரு 'இது'. சப்-இன்ஸ்சுக்குள்ளும் 'அது' வர, அந்த நேரம் பார்த்தா வில்லன் அனுஷ்காவின் துப்பட்டாவை உருவ வேண்டும்? தியேட்டருக்குள்ளேயே புகுந்து ஒற்றை ஆளாக உறுமியடிக்கும் துரைசிங்கம், காதலியின் கவுரவம் காக்க, லவ் இன்னும் ஸ்டிராங்காகிறது. 'சென்ட்' தெளித்த மாதிரி இது தனி நறுமணம் என்றால், பரபர பாய்ச்சலுக்காகவே கதைக்குள் என்ட்ரி கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சென்னை சிட்டியையே ஆட்டிப்படைக்கும் இவருக்கு கண்டிஷன் பைலில் கையெழுத்து போடுகிற பணி. அதுவும் துரைசிங்கம் ஸ்டேஷனில். போர்ஜரி கையெழுத்துக்கெல்லாம் 'ம்' கொட்டாத சிங்கம், பிரகாஷ்ராஜே இங்க வந்தாகணும் என்கிறார். வருகிறார் பிரகாசு, வில்லங்கத்தையும் கூட்டிக் கொண்டு! அங்கு நடக்கிற பஞ்ச் சம்பவங்களை தொடர்ந்து "யேய்... உனக்கு பாடம் கற்பிக்கிறேண்டா" என்று சென்னைக்கு செல்லும் பிரகாஷ்ராஜ், சொன்னபடியே துரைசிங்கத்தை சென்னைக்கு டிரான்ஸ்பர் அடிக்க, விட்ட தீப்பொறி பற்றுகிறது சென்னையிலும். உன்னை ஊரை விட்டே விரட்டுறேன்னு இருவரும் மாற்றி மாற்றி சவால்விட, மிச்ச கதை என்னாங்க என்று ஒளிவட்ட ஓட்டை வழியாக ஆபரேட்டரிடமே கேட்கிற அளவுக்கு ஆவல் ஏறுகிறது ரசிகனுக்கு!
'என்னைய மேட்டர் முடிச்சிட்டாரு தெரியுமா?' என்று தோழியிடம் சொல்லும் போது தியேட்டரையே குலுக்கி போடுகிறார் அழகுப் பதுமை அனுஷ்கா. சிங்கத்தை காதலிக்கும் இந்த மான்குட்டி வெறும் டூயட்டோடு வேலை முடிந்தது என்று ஒதுங்கிக் கொள்ளாமல் கதை நெடுக பயணிப்பது ஆறுதல். அதிலும் தன்னை துரத்தும் ரவுடிகளிடமிருந்து தப்பிக்கிற காட்சிகளில் காலில் சூடு வைத்த மாதிரி ஒரு ஃபீலிங்.
ஏற்கனவே பல படங்களில் பார்த்தாலும், பிரகாஷ்ராஜ் என்ட்ரி ஆனாலே ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. க்ளைமாக்ஸ் சேசிங், ஆந்திரா கிராமத்தில் நடக்கும் கோவக்கா கொலையெல்லாம் அல்டிமேட்டான ஆவக்கா காரம்!
ஒரே மாதிரி டயலாக் டெலிவரி, ஓவர் கூச்சல், ஒரு வார்த்தைக்கு பல பரிமாணங்களில் ஆபாச டிக்ஷனரி என்று விவேக் தரும் எரிச்சலை ஹரியால் கூட மாற்ற முடியவில்லையே... ஹையோடா!
படத்தில் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் எடிட்டர் வி.டி.விஜயன். மின்னல் வேக கதைக்கு மேலும் சில வோல்டேஜ் இவரது கைகர்யம்தான். ஹரிவேக பாய்ச்சலுக்கு தன் இசைவேகத்தை காட்டி ஈடு கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் பாடல்களில் ஒன்றுதான் தேறுகிறது. பிரியனின் ஒளிப்பதிவு அபாரம். அற்புதம்.
ஒரு முக்கியமான நபரை விட்டாச்சு. சொல்ல பிடிக்கலேன்னாலும் சூட்சுமத்தை தாங்குற சூலாயுதமே அவர்தாங்கிறதால சொல்லி விடுவதில் தப்பில்லை. சூர்யா!
ஹரி என்ற ரிங் மாஸ்டருக்கு சிங்கம் மட்டுமல்ல, தியேட்டர் கலெக்ஷனும் சொன்னபடி கேட்குதே, அதுதான் ஆச்சர்யம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|