பிழிய பிழிய சென்ட்டிமென்ட், பிதுங்க பிதுங்க லத்தியடி என்று காக்கி சட்டை கதைகளுக்கென்றே தனி ஃபார்முலா இருக்கிறது தமிழ்சினிமாவில். அந்த ஃபார்முலாவை ஜஸ்ட் லைக் தட் என்று புரட்டி தள்ளிவிட்டு போகிற படம்தான் குற்றப்பரம்பரை. கம்பீரம் குறையாத காக்கியாக வலம் வருகிறார் ஸ்ரீகாந்த். நேற்று வரை சாக்லெட் பாய் என்றும், ரத்னா கபேயின் ஸ்பெஷல் ஐட்டம் என்றும் போற்றப்பட்டு(?) வந்த ஸ்ரீகாந்த், இந்த படத்தில் காட்டியிருக்கும் ஒவ்வொரு அசைவும் மிடுக்குடன் கூடிய பிரமிப்பு!
போலீஸ் உயரதிகாரியான ஸ்ரீகாந்த் தனக்கு கீழே வேலை பார்க்கும் இன்னொரு அதிகாரியான ப்ருத்விராஜ் மீது அளவு கடந்த நம்பிக்கை வைக்கிறார். ஏரியாவில் நடைபெறும் ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னணி தேடி புறப்படுகிற அவருக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரியவருகிறது. இந்த குற்றத்திற்கு பின்னணியில் இருப்பது சாட்சாத் ப்ருத்திவிராஜ்தான் என்று! விலங்கும் வில்லங்கமுமாக அவரை பிடிக்க முயலும் ஸ்ரீகாந்துக்கு நேர்கிற சங்கடங்களும், ப்ருத்விராஜின் தந்திரங்களும்தான் படம். இடையே ஸ்ரீகாந்த்-கமலினி காதல், சாம்பாரில் கரைத்த பெருங்காயமாக செம நறுமணம்! அந்த சஞ்சனா பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லை!
அறிமுக காட்சியே அசத்தல். தான் பணிபுரியும் ஸ்டேஷனுக்கு வருகிற ஸ்ரீகாந்த், அங்கே நடக்கும் அலட்சியங்களை கண்டு அதிர்வதும், அடுத்த ஷாட்டில் யூனிபார்மோடு இறங்குவதும் ஸ்பெஷல் என்றால், அதே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோடு கூட்டு வைத்துக் கொண்டு குற்றவாளிகளை பந்தாடுவது இன்னும் சுவாரஸ்யம்.
ஒரு துளி சைனைடு போல உறுத்தாத வில்லன் ப்ருத்விராஜ். காட்டு கூச்சல் இல்லை. கால் பக்க வசனம் இல்லை. ஒரு சிரிப்பு... ஒரே ஒரு சிரிப்பு... வில்லத்தனம் வழிந்தோடுகிறது மனுஷனுக்கு. தனது கையாளாக ஒரு முஸ்லீம் தீவிரவாதியை வைத்துக்கொள்வதும், தட்டியெறிகிற அத்தனை பேரும் முஸ்லீமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் சற்றே நெருடல்! ஒரு கட்டத்தில் போலீஸ் கமிஷனரையே இவர் போட்டுத் தள்ளுவது அதிர வைக்கும் யூ டேர்ன்!
வேட்டையாடி விளையாடிய கமலினியா இது? சற்றே வெளுத்துப்போன பெயின்ட்டிங் போலிருக்கிறார். முதலில் ஸ்ரீகாந்த்தை வெறுப்பதும், பிறகு உண்மை தெரிந்தபின் காதலுருவதும் அழகு.
அந்த க்ளைமாக்ஸ் விஞ்ஞான உலகின் விந்தைதான். எம்எம்எஸ் மூலம் ப்ருத்வியின் கொலையை படம் பிடித்து அனுப்பி வைக்கிற ஸ்ரீகாந்தின் சாமர்த்தியத்திற்கு கைதட்டி ஆரவாரிக்கிறது தியேட்டர்.
ஒரு புதுவிதமான திரைக்கதை என்பதால் கவனிக்கப்படுகிறார் இயக்குனர் மன்மோகன். இசையமைப்பாளர் விஷ்வா பின்னணி இசையில் செலுத்தியிருக்கும் கவனத்தை பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார்!
போலீஸ் கதைகளில் நெத்தியடி, இந்த லத்தியடி!
-ஆர்.எஸ்.அந்தணன்
|