விரலும் விரலும் உரசிக்கொள்வதையே ஒரு திருவிழாவாக்கி ஆயிரம் தாமரை மொட்டுகளை மலரச்செய்த அந்தகால காதல் போயே போச்! கட்டிப்பிடிச்சுப்போம்... இது நட்பு. விட்டு விலகிப்போம்... இது காதல்னு சொல்ற 2010 ன் 'நொடி முள்' லவ்தான் இனிது இனிது.
ஒரு என்ஜினியரிங் கல்லு£ரியில் சேரும் முதலாண்டு மாணவ மாணவிகளுக்குள் முகிழ்க்கிற காதலும், அதற்கு மூன்றாமாண்டு மாணவர்கள் செய்கிற இடையூறும்தான் முழுநீள படம். அதை சொல்லியிருக்கிற விதம் இருக்கிறதே, அறுபதை தாண்டியவர்களை கூட ஃபுட் போட்டில் நின்றாவது ஒரு முறை பிளாஷ்பேக் அடிக்க வைக்கும்!
ஆதித், ரேஷ்மி இருவருக்கும் நடுவே துளிர்க்கிற நட்பு அதையும் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற நேரத்தில் ஆதித்துக்கு அவசரம். 'ஒரு கிஸ் கொடேன்' என்கிறான். அந்த நேரம் பார்த்துதானா இருவரையும் ஃபிரியாக பழக அனுமதித்த அப்பா பார்க்கணும்? அதிர்ந்துபோகிறார் ரேஷ்மி. அன்றிலிருந்து பேச்சை குறைத்துக் கொள்ள, தலையெடுக்கிறது ஈகோ. நானாக பேச மாட்டேன் என்று இவனும், அவனா வரட்டும் என்று அவளும் விலகி விலகிப் போக, எப்படி இணைந்தார்கள் என்பது முடிவு.
நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு பெண்ணை காதலிப்பதும் அவர்களுக்குள் ஈகோவும், பிரச்சனையும் முட்டிக் கொண்டு முழி பிதுங்க வைப்பதும் சைட் டிராக்! ஆச்சர்யம் என்னவென்றால் அத்தனை பேருக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கே.வி.குகன். (முரட்டு லுக், இவருக்குள் இப்படி ஒரு மெல்லிசு டச்?!)
ஒரு அழகான சிபிராஜ் போலிருக்கிறார் ஆதித். ரேஷ்மி சொன்ன ஒரே காரணத்துக்காக தனது சீனியரை பொள்ளேர் என்று கன்னத்தில் அறைவது பலத்த திருப்பம்தான். பின்பாதியில் ரேஷ்மிக்காக உருகுவதும், நேரில் பார்த்தால் திமிருவதும் ரொம்பவே இயல்பு. பெரிய பிளேஸ் காத்திருக்கு தம்பி.
ரேஷ்மி மட்டும் என்னவாம்? புடவை கட்டிக்கொண்டு வருவாரா என்று வில்லனும் ஹீரோவும் காத்திருக்க, அத்தனை அம்சமாக வந்திறங்கும்போது விசில் பறக்கிறது தியேட்டரில். அந்தகால சித்தாரா, அழகுமயில் நதியா என்று கலந்து கட்டிய கவிதை பொட்டலம் இந்த ரேஷ்மி. கொஞ்சம் கவனித்து படங்களை ஒப்புக் கொண்டால், தமிழனோட நெஞ்சுல பச்சைக்குத்தலாம் தாயி...
அப்பு அப்பு என்று அலைபாயும் எம்.எல்.ஏ பையனுக்கு திடீரென்று வந்து சேர்கிற பால்யகால தோழி ஒருத்தி எல்லாமுமாக இருக்க, அப்பு செய்கிற அதிரடிகள் தியேட்டரையே கலகலக்க வைக்கிறது. அதே வேகத்தில் உருகவும் வைக்கிறாள் அந்த குட்டி அப்பு. கண்ணாடி போட்டிருப்பதால்தான் அழகு குறைச்சல் என்று எண்ணி கான்டாக்ட் லென்ஸ்சின் விலை விசாரிக்கும்போது கலங்கடிக்கிறாள். ஏதோ ஒரு லேப் ஐட்டத்தை சாப்பிட்டுவிட்டு கண்டபடி உளறி வைக்கும் அந்த எம்எல்ஏவின் பையன் வடிவேலு, விவேக்குகள் இல்லாத குறையை போக்குகிறார்.
ஷ்ராவ்வ்வ்வ்... என்று வார்த்தைக்கு வார்த்தை உருகும் அந்த டைசன் கேரக்டர் அப்பழுக்கற்ற அழகு. சீனியரை காதலிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இருந்தாலும், அவரை கரெக்ட் பண்ண அலைவதை கூச்சமில்லாமல் ரசிக்கலாம். நண்பனுக்காக தனது டிபார்ட்மென்ட்டையே மாற்றிக் கொள்வதெல்லாம் ஸ்டூடண்ட் தேசத்து தியாகம். ஏதோ மயிலு, புறா வளர்ப்பது போல இந்த ஜோடி கோழி வளர்ப்பதெல்லாம் ஓவர் சாமி. இவருக்கு ஜோடியாக வரும் அந்த சீனியர் மாணவியின் திமிரான லுக் ஒன்றே போதும், திரும்ப திரும்ப ரசிப்பதற்கு!
தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கிராமத்திலிருந்து என்ஜினியரிங் படிக்க வரும் ஏழை மாணவர்கள் இங்கு சேர்ந்து எப்படியெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் பால் பாண்டி கேரக்டர் மூலம். நல்லவேளை, அந்த கேரக்டரை ஜெயிக்க வைத்து ஒட்டுமொத்த ஏழை மாணவ இனத்திற்கே நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் இயக்குனர்.
இசை மிக்கி ஜே.மேயர் என்ற புதியவர். ஒவ்வொரு சீனிலும் கரைந்து போக வைத்திருக்கிறார் மனிதர். பாடல்கள் ஒவ்வொன்றும் கரையை உடைக்காத கம்பீர ஸ்வரங்கள்.
இயக்குனர் குகனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். பிரேமுக்கு பிரேம் பிரேம் போட்ட படம் போலிருக்கிறது. அந்த கடற்கரை காட்சிகள் ஒவ்வொன்றையும் அப்படியே வால் பேப்பராக்கலாம்.
ஒரு பிரேமில் கூட பிரபலமானவர்களை நடிக்க வைக்காமல் ஒரு பேசும்படத்தை அதுவும் பேசப்படுகிற விதத்தில் தயாரித்துக் கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு இப்படம் வழங்கப் போகிற பரிசும் இனிது இனிதுதான்!
-ஆர்.எஸ்.அந்தணன் |