ஸ்டார் ஓட்டல் ஸ்டைலில் துவங்கி, கையேந்தி பவன் ஸ்டைலில் பயணித்து கடைசியில் அகோர பசி ஏப்பத்தோடு ரசிகர்களுக்கு வணக்கம் போடுகிறார்கள். படம் நெடுகிலும் இடம் பெறும் காட்சிகள் துணுக்கு தோரணம். அதுவே சில நேரம் 'துணுக்குற' வைக்கிற தோரணமாகவும் இருப்பதால் இளசுகள் ஏரியாவில் ஆஹா! பெரிசுகள் ஏரியாவில் ஐய்யய்யோ!
காதல் திருமணம் செய்து கொண்ட பிரஜன்-சாரா ஒருபக்கம். அக்ஷய்-மிதுனா-பிங்க்கி மூவருக்குள் நடக்கும் முக்கோண காதல் மறுபக்கம். எபவ் தர்ட்டிகளின் மேல் ஆசைப்பட்டு, 'டர்ட்டி காதல்' வளர்க்கும் அர்ஷத் இன்னொரு பக்கம். இவர்களின் பிராக்டிகல் பிரச்சனைதான் சா பூ த்ரி.
ஒன்று கவிதை. இன்னொன்று நாடகம். வேறொன்று சரோஜாதேவி டைப் என்பதால் ரசனைக்கு பஞ்சமில்லை. அதிலும் படத்தின் இயக்குனரான அர்ஷத், தானே ஒரு 'ஆன்ட்டி' (வேறொன்றுமில்லை எபவ் தர்ட்டி டேஸ்ட்) ஹீரோவாக நடித்திருக்கிற காட்சிகளில் தியேட்டரில் ஒரே சிரிப்பலை. தன்னை காதலிக்கும் அக்ஷயாவை விரும்பாமல் அவரது பர்த் டே விழாவுக்கு வரும் அவரது பக்கத்து வீட்டு ஆன்ட்டி உஜ்ஜயினியை காதலிக்கிறார். நான் அவங்களை லவ் பண்றேன் என்று சக நண்பர்களிடம் அவர் சீரியஸாக சொல்வதை தியேட்டரே கைதட்டி ரசிக்கிறது. உஜ்ஜயினியை மடக்க அவர் எடுக்கும் முயற்சிகள் வார்ர்ரே வா... ஆனால் எல்லை மீறிய பயங்கரவாதமய்யா சில காட்சிகள். அதுவும் ஆன்ட்டி ஒருவரிடம் பாடம் கற்று கொள்ள போகும் அர்ஷத், பாதியிலேயே எழுந்து பாத்ரூமுக்கு ஓடுகிற காட்சியும் அதை தொடர்ந்த டயலாக்குகளும் உவ்வேய்ய்ய்ய்ய்... காக்காய்க்கு கண் மை போட்ட மாதிரி பொருத்தமாக இருக்கிறது இவரது டப்பிங். (அப்படியே சிம்புவோட குரல்)
கணவன் மனைவியாக இருந்தாலும், சாஃப்ட்வேர் வாழ்க்கை ஹார்டுவேராக மாறி கணவனும் மனைவியும் இயந்திரமாக வாழ்கிறது பிரஜன் ஜோடி. சாட்டிங்கில் வெவ்வேறு பெயர்களில் பொழுதுபோக்கும் இருவரும், கூடவே காதலையும் வளர்க்கிறார்கள். நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து போகும்போதுதான் தெரிகிறது, அலுத்து சலித்துப்போன அதே ஜோடிதான் என்று. நல்ல ட்விஸ்ட் இது. நாகரிகமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
இரண்டு பேரை காதலிப்பதாலோ என்னவோ அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொள்பவர் அக்ஷய்தான். மிதுனாவை பெண் பார்த்துவிட்டு கல்யாணத்திற்கு மறுக்கும் அவர், பின்பு அவரையே காதலிக்க அலைவதும் சுவாரஸ்யம்தான்.
கதாநாயகிகள் மாடர்னாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்களே ஒழிய, அழகாக இருக்க வேண்டும் என்ற அக்கறை துளி கூட இல்லை போலிருக்கிறது. எல்லாரும் ஜு.ஆ ரகம்.
அப்பாஸ் ரஃபியின் இசை விசேஷம்.
சா...பூ... சப்!
|