ஒண்ட வந்த பிடாரிகளுக்கும், உப்பு போட்டு சோறு தின்பவர்களுக்கும் நடுவே நடக்கிற போராட்டம்தான் பழசிராஜா. தனித்தனி ஹீரோக்களாக நடிக்கும் ஒரு சில நடிகர்கள் குழுக்களாக இணைந்து கொடுத்த குபீர் நெருப்பு இது!
சொரணையுள்ள குறுநில மன்னர் பழசிராஜாவாக நடித்திருக்கிறார் மம்முட்டி. அவருக்கு படைத்தளபதியாக நடித்திருக்கிறார்கள் சரத்குமாரும், மனோஜ் கே ஜெயனும். வில் அம்பு, விழிகளுக்குள் நெருப்பின் பிழம்பு என்று மிரள வைக்கும் இன்னொரு கேரக்டரில் பத்மப்ரியா.
அடர்ந்து படர்ந்த காடுகளும், ஆயுத சத்தங்களும், அதிரடி வேகக் குதிரைகளின் அலற வைக்கும் குளம்பொலியும், செவிகளையும் புலன்களையும் சேர்த்து மிரட்டினாலும், இறுதி காட்சியும், வீர வரலாறுகளுக்கு எதிராக காய் நகர்த்தும் எட்டப்பன்களின் துரோகத்தையும் காட்டி அழவும் வைக்கிறார்கள். சரித்திர பதிவுகளை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதை எம்.டி.வாசுதேவன் நாயரின் பேனா அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் போர் படை வயநாட்டின் குறுநில மன்னரான பழசிராஜாவின் அரண்மனையை கைப்பற்றுகிறது. அங்கேயிருக்கும் பொக்கிஷத்தையும் கொள்ளையடித்து செல்கிறது. காரணம்? கம்பெனிக்கு அடங்காமல் முறைப்பு காட்டுகிறார் பழசிராஜா என்பதால்தான். கம்பெனியின் காட்டு தர்பாருக்கு காட்டு வாசிகள் துணையோடு களம் அமைக்கிறார் பழசிராஜா. திட்டமிட்டபடி முக்கியமான 'பரங்கி' தலைகள் பரலோகம் போகிறது. அதிர்ந்து போகிற கம்பெனி, ஆயுதங்களுடன் மேலும் மேலும் வீரர்களை வரவழைக்க, கடுமையான போர். வீரச்சாவை தழுவுகிறார்கள் பழசிராஜாவும், அவரது தளபதிகளும், நு£ற்றுக்கணக்கான வீரர்களும்.
வெளியே வருகிற ஒவ்வொருவருக்கும் புரியும்... சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!
வீரம், நெகிழ்ச்சி, பாசம், கனிவு, இயலாமை என்று மம்முட்டிக்கு தனித்தனியாக தீனி போட்டிருக்கிறது ஒவ்வொரு காட்சியும். கம்பெனிக்காரர்களின் இடத்திற்கே சென்று கம்பீரமாக அமர்கிற அந்த காட்சியை சொல்வதா? தன்னை கைது செய்து அழைத்துச் செல்ல வரும் ஆங்கில சிப்பாய்களை சுருள் கத்தியால் துவம்சமாக்கும் அந்த காட்சியை சொல்வதா? குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மனைவிக்கு ஆறுதல் கூறும் அந்த காட்சியை சொல்வதா? தன்னை நம்பி வந்த வீரர்கள் எல்லாரும் ஒரு கட்டத்தில் கம்பெனியிடம் சரண் அடைய செல்கையில் "நீங்களும் போங்க" என்று மிச்ச மீதி இருக்கிறவர்களையும் அனுப்பி வைக்கும் அந்த காட்சியை சொல்வதா? மாவீரர்களை சுற்றியிருப்பது சூறாவளியும், சுனாமிகளும்தான் என்பதை நிரூபிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும்.
பழசிராஜாவின் தளபதியாக வரும் எடச்சன குங்கன் கேரக்டரில் சரத்குமார் நடித்திருக்கிறார். இரும்பை காய்ச்சி உருக்கிய உடம்போ என்று ஐயப்பட வைக்கிறது அவரது கம்பீரம். ஒரு காட்சியில் குதிரை மீது தாவி உட்காரும் அவர், லேசாக அதன் போக்கை 'கட்' செய்து ஓட வைக்கிறாரே, மகா ஸ்டைல்! பதவிக்கும், பணத்திற்கும் விலை போகும் எட்டப்ப வர்க்கமான சுமன், சரத்குமார் கையால் கொல்லப்படுவது விறுவிறுப்பான காட்சி என்றால், அவரது வாள் வீச்சு பிரமிக்க வைக்கும் சூறாவளி. (நாட்டாமை இதையெல்லாம் எப்போ கற்றாராம்?) உன் கையால் சாவேன்னு நினைச்சியா? என்று தன்னை தானே குத்திக் கொண்டு வீரச்சாவை தழுவுவதும் நெகிழ வைக்கும் திருப்பம்.
இன்னொரு தளபதியாக மனோஜ் கே ஜெயன். காதலி பத்மப்ரியாவுடன் இவர் நடத்தும் அம்பு வேட்டை 100 டிகிரி தீப்பிழம்பு. கோவிலுக்கு வருகிற அவரை பூசாரியே காட்டிக் கொடுப்பதுதான் பேரதிர்ச்சி. அதைவிட பேரதிர்ச்சி அவரது இறுதி காட்சி. மனோஜை து£க்கிலிட்ட அதே மரத்தில் வெள்ளை பரங்கியை தனியாளாக கொன்று மாட்டி விடும் பழசிராஜாவின் ஜட்ஜ்மென்ட்டை பரவசத்தோடு ரசிக்கிறது தியேட்டர்.
பெண் போராளி பத்மப்ரியாவின் மெனக்கெடல் ரொம்பவே அசத்தல். வில் அம்பு, வேல்கம்பு, துப்பாக்கி என்று சகலத்திலும் முனைப்பு காட்டியிருக்கிறார். மரத்தின் உச்சியிலிருந்து சரிந்து கொண்டே வந்து சண்டையிடும் அவரது பேரார்வம் கூர்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.
மலையாளத்தில் வசனம் எழுதியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 'பிறந்ததிலிருந்தே ஒரு நிழல் கூடவே வந்திட்டு இருக்கு. அது என்னைக்காவது திரும்பி எதிர்லே விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதுதான் மரணம்...' இப்படி படம் நெடுகிலும் ஜீவனுள்ள வசனங்கள்.
படத்தின் முதல் ஹீரோ நமது இசைஞானி இளையராஜாதான். பின்னணி இசையில் இவர்தான் முன்னணி ராஜா என்பதை எல்லா காட்சிகளுமே உணர்த்துகின்றன. 'ஆதிமுதல் காலம் பூத்ததிங்கே' என்ற பாடல் சுகமோ சுகம். அதையே கீ போர்டிலும், வயலினிலும் இசைத்து பின்னணிக்கு பயன்படுத்தியிருப்பது ராஜ வசியம்!
ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி. வாள் காற்றை கிழிப்பதையும், மழைத்துளி முற்றத்தில் விழுவதையும், அவ்வளவு ஏன்... உட்காருகிற சத்தத்தைக் கூட துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது.
வானை தொடும் காட்டு மரங்களின் வயசும், வனப்பும் எப்படி பிரமிக்கத்தக்கதோ, அப்படிதான் இந்த பழசியும்...
-ஆர்.எஸ்.அந்தணன்
|