சோலைமலை பஸ் கண்டக்டரோட விசிலும், ரசிகனின் விசிலும் கலந்து கட்டி அடிக்கிறது தியேட்டரில்! டைரக்டருக்கு இது முதல் படமாம். டபுள் விசில் கொடுங்கடோய்...
மதுரையிலிருந்து தேனி செல்லும் பஸ்சில் ஏறும் புது வாத்தியார் ஒருத்தரும், பஸ்சில் பயணம் செய்யும் இளசு ஒருத்தியும் காதலில் விழுகிறார்கள். கிறங்கினோமா, கிளம்பினோமா என்றில்லாமல் இளசின் ஊருக்கே போய் இறங்குகிறார் வாத்தியார். சும்மாயில்லாமல் அந்த இளசு வீட்டுக்கே போய் பொண்ணு கேட்பதுதான் பிரச்சனை. ஊரு சனம் மொத்தமும் ஒன்ணு சேர்ந்து கொடுக்கிற குரலும், எடுக்கிற முடிவும்தான் விறுவிறுப்பான முத்தாய்ப்பு. இப்படி ஒரு கதையோட வந்து “அசத்துறோம்ல...”ன்னு கைதட்டலை வாங்கிட்டு போற டைரக்டருங்க வரிசையிலே சேர்ந்திருக்கிறார் ரதிபாலா.
வாத்தியாருக்கு படிச்சிருந்தாலும், குஸ்தி வாத்தியாரு மாதிரி தைரியமான ஆம்பிளைதான் ஹீரோங்கறதை முதல் சீனிலேயே காட்டியிருக்காரு இயக்குனர். வேலை கிடைச்சுருக்கு. போயிட்டு வா ன்னு அனுப்பி வைக்கிற நண்பர்கள், “உன் வாழ்க்கையிலும் காதல் கிராஸ் பண்ணும். அப்போ புரியும்டீ காதலோட மகிமை”ன்னு ஆசிர்வாதம் கொடுத்து அனுப்பி வைக்கும்போதே மாப்பிளைக்கு மணி கட்ட போறாங்கன்னு புரிஞ்சுருது. பஸ் கிளம்புவதற்குள்ளேயே காதல் கிளம்பிருது ஹீரோவுக்கு. முதல் பாதியில் பஸ்சை விட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடிக்குது திரைக்கதை. அதனாலேயே கூட்ட நெரிசல்ல சிக்கிட்டோமோங்கிற உணர்வு நமக்கு. ஆனால் இரண்டாவது பாதியிலே ஜில்லுன்னு ஒரு ரிலீஃப்!
புதுமுகம் அரவிந்த வினோத்துக்கு படத்திலே பேரு இல்லைன்னாலும், இந்த படத்தால நிறைய பேரு! காட்சிகளை உணர்ந்து நடிச்சிருக்கார். சட்டென்று பிடிச்சுப் போற முகம் என்பதால், சட்டுபுட்டுன்னு கிளிக் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. தான் போக வேண்டிய ஊரு வந்ததும் இறங்கிற போறாரோன்னு நமக்கும் பதைபதைப்பு வருது. ஆனால் ஜம்மென்று அதே பஸ்சில் தொற்றிக் கொள்ளும் போது தியேட்டரே உற்சாகம். காதலுக்கு தைரியம் முக்கியம் என்பதை ஒரு முழம் பூவை கொடுத்து நிரூபிக்கிறாரே, வாரே வாவ்...
பக்கத்திலே அப்பா இருந்தாலும், கண்ணாலேயே காதல் பேசுகிறார் புதுமுகம் ஸ்ரித்திகா (பெப்சி உமாவை மிக்ஸ் பண்ணிய முகம்) க்ளைமாக்ஸ் வரைக்கும் பொறுமையாகவே இருக்கும் இந்த பூ திடீரென்று பேச ஆரம்பிக்கும் போது தியேட்டரே அதிர்ச்சியாகிறது. இவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அனல் கட்டி மழை. எழுதிய சுருளிப்பட்டி சிவாஜி, ரதிபாலாவுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் தரலாம். குறிப்பாக க்ளைமாக்சில் சித்தப்பா பேசும் ‘இடையிலே வந்ததுதாண்டா மஞ்சக்கயிறெல்லாம். இடுப்பிலே இருக்கறது கருப்பு கயிறுன்னாலும், எடுத்து தாலியா கட்றா’ என்கிற வசனத்தில் கூர்மையான திராவிட மணம்!
ஒன்றிரண்டு அறிமுக நடிகர்களை தவிர மற்றவர்கள் எல்லாருக்கும் மண் மணக்கும் மதுரைதான் போலிருக்கிறது. அச்சு பிறழாமல் வசனங்களை பொறிந்து தள்ளுகிறார்கள். நடிப்பும் எக்சலண்ட்! சிங்கம் போல சிலிர்த்து நின்ற சிங்கமுத்து பாத்திரம் நிறைவு.
புது இசையமைப்பாளர் ஜேவி யிடம், அற்புதமான துள்ளல் இருக்கிறது. ‘தீன கருணா’ ரீமிக்ஸ், பட்டைய கிளப்பும் ரகம். இப்பாடலுக்கு நடனம் அமைத்தவர்களிடமும் அதே உற்சாக துள்ளல்!
டிஜிட்டல் படம் என்கிறார்கள். அப்படி தெரியாத விதத்தில் எடுத்த ஒளிப்பதிவாளர் எஸ்பிஎஸ் குகனையும் பாராட்டலாம்.
மதுரை டூ தேனி வழி- வெற்றியூர்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|