குப்பை பொறுக்குகிறவன் கோடீஸ்வரன் ஆகிற கதை. துணைக்கு விவேகானந்தரையும் அழைத்துக் கொள்வதால் லாஜிக்கை உரசி காயப்படுத்தாமல் கதை நகர்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால், சீரான வேகத்திலிந்து சற்றும் சண்டித்தனம் செய்யாமல் நகர்கிற திரைக்கதை!
புதுமுகம் ஆதித்யாவுக்கு தனது அப்பா விபத்தில் இறந்து போன பேப்பர் மில்லை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பது லட்சியம். ஆனால் பேப்பர் பொறுக்குகிறவனின் பேச்சை கிரேட் ஜோக்காக நினைத்து வாய் விட்டு சிரிக்கிறார்கள் நண்பர்கள். அவர்களின் சிரிப்பையே நம்பிக்கை 'சிரப' ஆக நினைக்கும் ஹீரோ, லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை சொல்கிறது இரண்டு மணி நேரப்படம். இடையிடையே காதல், கடத்தல், கரன்ஸி என்று மொக்கை போட்டாலும், சில காட்சிகள் தூக்கல்!
புதுமுகம் ஆதித்யாவுக்கு நடிப்பு கை வந்த கலையாக இருக்கிறது. வரவேற்கலாம். பாடல் காட்சிகளில் ரஜினியை காப்பியடிப்பதும் தன்னம்பிக்கை என்றால், ஸாரி தம்பி! பனகல் பார்க்குக்கு போய் ஆன்ட்டிகளை கரெக்ட் பண்ணி பணக்காரனாக துடிக்கும் இவர், திடீரென்று 'ஆன்ட்டி' ஹீரோவாக ட்விஸ்ட் அடிப்பது தித்திக்கும் திருப்பம். இவரது ஒரே சொற்பொழிவில் ஆன்ட்டியின் ஆசைகள் போண்டியாவது கடைந்தெடுத்த சினிமாத்தனம்!
புதுமுகம் மனோஹாவுக்கு குழந்தை முகம், கொய்யாப்பழ சிரிப்பு. பாடல் காட்சிகளில் தாராளம். போதாதா...? இவரை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்யும்போது அச்சச்சோ என்கிறார்கள் தாய்மார்கள்.
மொத்த படத்தையும் தூக்கி சுமக்கும் 'கிரேன்' ஆகியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அநாயசமாக நாக்கில் புரளும் சென்னை பாஷையும், அதற்கேற்றார் போல இவரது பேப்பர் கடையில் வேலை பார்க்கும் துணை சாத்தான்களும் தியேட்டரையே துவம்சம் பண்ணுகிறார்கள். போதும் போதாதற்கு ஆஞ்சநேய பக்தரான இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஒரு டீன் ஏஜ் பொண்ணு. முடிவு... தியேட்டரே கொல்லென சிரிக்கிறது.
1000 கோடி ரூபாயை லவட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகும் மணிவண்ணன் கதைக்கு எந்த விதத்திலும் விறுவிறுப்பு சேர்க்கவில்லை. இதே ரகம்தான் வில்லன் தண்டபாணியும்.
எங்கோ சர்ச்சில் மணியடித்துக் கொண்டிருந்தவரை இசையமைப்பாளர் ஆக்கிவிட்டார்கள் போலும். குத்துப்பாடல் கூட ஜெபக் கூட்டப் பாடல் போலவே இருக்கிறது. ஆனால், காய்கறிகளை வரிசைப்படுத்தும் அந்த பாடலை எழுதிய கைகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கலாம்.
இன்னொருவனை கொடுத்த இயக்குனரை நம்பி இன்னொரு படத்தை கொடுக்கலாம்!
-ஆர்.எஸ்.அந்தணன் |