அனுஷ்காவின் வீரத்தையும், ஆந்திரா காரத்தையும் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிற படம். ஆவி, பிசாசு, அமானுஷ்யம் என்று மிக்சியில் அடித்து 'ரத்த ஜுஸ்' கொடுக்கிறார்கள். அடிக்கிற ஏசியிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் என்று சவடால் விடுகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா.
யாருக்கும் அடங்காத ஒருவனை தனது வாள் வீச்சில் வீழ்த்தி வீட்டிற்குள்ளேயே சமாதி கட்டுகிறாள் சமஸ்தான இளவரசி அருந்ததி. குற்றுயிரும், குலை உயிருமாக கிடக்கிறவன் உள்ளேயே ஆவி ரூபத்தை அடைந்தாலும், வெளியே வர முடியாதபடி மந்திரக்கட்டுகள் சமாதியை சுற்றி! போகிற வருகிறவர்களை நள்ளிரவில் அழைத்து சமாதியை உடைக்க சொல்கிறான். எதற்கு? அருந்ததியை பழிவாங்க. அவளோ, மீண்டும் பிறப்பெடுத்து வருகிறாள். சமாதியை உடைத்துக் கொண்டு வெளியே வருகிற காமுகனும், சக்தியை திரட்டி அவனை தீர்த்துக் கட்ட முனையும் அருந்ததியும் க்ளைமாக்சில் அனல் பந்துகளாக மோத திடுதிடுக்கிறது தியேட்டர். படம் முடிந்து வெளியே வந்த பின்னும் பின்னாலேயே விரட்டுகிறது 'பொம்மாயீய்ய்ய்ய்.....' என்ற பயங்கர குரல்!
ஆரம்ப காட்சியே அரையிருட்டில் துவங்குகிறது. அந்த பிரமாண்ட பங்களாவுக்குள் நுழைகிற ஒருவன் தனது மனைவியை தொலைத்துவிட்டு பைத்தியமாக அலைகிறான். அடுத்த காட்சியில் அருந்ததி வந்து ஊருக்குள் இறங்க, ஒவ்வொரு வினாடியும் திக்திக்திக்... அருந்ததியாக அனுஷ்கா. பூச்சட்டி ரோஜாவாக சில காட்சிகளும், தீச்சட்டி நெருப்பாக பல காட்சிகளுமாக அனுஷ்காவின் நடிப்பு கிரேட் கிரேட்! அடுத்த காட்சியில் கொல்லப்படுவாரோ என்று நினைத்துக் கொண்டிருக்க, தனது லாவக ஆட்டத்தின் இடையில் துப்பட்டாவில் கத்தியை சுழற்றி எதிராளி மீது இறக்குகிறாரே, துவம்சம்!
பிரேதாத்மா என்ற புது வார்த்தையை கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆத்மாவாக நடித்திருக்கும் சோனு சூட், பார்க்கவே பயங்கரம். அதிலும் இவரது வில்லத்தனங்கள் வெந்த புண்ணில் வேதனையை திணிக்கிறது. பார்வையில்லாத நடன ஆசிரியரை இவர் கொன்று அனுபவிப்பதும், அந்த இடத்தில் இவர் பேசும் டயலாக்கும் கொடூரம். இவரை கொல்ல வெறும் கத்தி போதாதாம். அருந்ததியின் எலும்பை கத்தியாக்கி, அதில் அவரது வாரிசான இன்னொரு அருந்ததியின் ரத்தத்தை தோய்த்து குத்தினால்தான் என்று சாவுக்கு மேலும் கொஞ்சம் மேளம் அடிக்கிறார்கள்.
நல்லவராக நடித்திருக்கிறார் சாயாஜிஷிண்டே. கடைசிவரை போராடி ஆவியை கொல்ல உதவுகிறார்.
ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரும், விஷ§வல் எபெக்ட்ஸ் ராகுல் நம்பியாரும் படத்திற்கு இன்னும் திகில் சேர்த்திருக்கிறார்கள். இசை கோட்டி. பின்னணி இசை மிரட்டல்.
நமது ஏரியாவிலும் ஒரு கந்தர்வ கோட்டை இருக்கிறது. அந்த ஊரை கடப்பவர்கள், நின்று விசாரித்தாலும் விசாரிக்கக் கூடும். "அருந்ததி வீடு எங்கேயிருக்கு?" என்று!
-ஆர்.எஸ்.அந்தணன் |