ஏதோ டப்பிங் படமாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால் இது டக்கர் படம்! நடிகைகளை காதலித்தால் என்ன நடக்கும் என்பதை கண்கூடாக காண்பிக்கிறார்கள். வித்யாசமான கதைக்களம். வில்லங்கமான சதைக் களம். இப்படி வசூல் ஏரியாவிலும் கவனமாக இருந்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ரிஷிராஜ். இவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆனால் குளோஸ்-அப்பில் வந்து முகத்துக்கு நேரே உறுமுகிற போதுதான் டிக்கெட்டை திருப்பி கொடுத்துவிடலாமா என்ற அச்சம் வருகிறது. மற்றபடி வெல்!
நடிகை கிரணை காதலிக்கிறார் அவரது ஆடிட்டர் ஹேமந்த் குமார். இவரை காதலித்துக் கொண்டே, வேறு பல தூண்டில்களுக்கும் இரையாகிறார் கிரண். ஹேமந்த்தின் நண்பரான ரிஷிராஜ் சிட்டியை கலக்கும் தாதா. நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் இந்த ரிஷிராஜ், அவர் காதலிப்பது நடிகை கிரணைதான் என்பது தெரியவர, அதிர்ச்சியடைகிறார். ஏனென்றால் ரிஷிராஜின் அந்தரங்க அவசரங்களை அவ்வப்போது தீர்த்து வைப்பவரும் இதே கிரண்தான். இந்த காதலை வேண்டாம் என்று அறிவுறுத்தும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கும் கிரணுக்கும் இருக்கிற தகாத உறவை வெளிப்படுத்த, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் ஹேமந்த்.
நண்பனை இந்த கதிக்கு ஆளாக்கிய கிரணை போட்டுத்தள்ள ரிஷிராஜ் முயலும் அதே நேரத்தில் ஹேமந்தால் கடத்தப்படுகிறார் கிரண். இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் கிரணை? முடிவு.
தனது காதலன் ஹேமந்த் குமாரை பைனான்சியர் ஒருவரிடம் பிரதர் என்று கிரண் அறிமுகப்படுத்தும்போது விழுந்து விழுந்து சிரிக்கிறது தியேட்டர் மொத்தமும். கிரணிடம், ஏண்டி இப்படி இருக்கீங்க? உண்மையான காதலுக்கு இதுதான் மரியாதையா என்று ஹேமந்த் பொங்கி வெடிக்க, ஃபீல் பண்ண வேண்டிய கரண் கொடுக்கிற விளக்கம் இருக்கிறதே... பிசினஸ் நடிகைகள் சார்பில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உண்மை.
அரை சத வயதை எட்டி விட்ட முகத்தோற்றம் இருந்தாலும், அதை காட்டியா பிரமிக்க வைக்கிறார் கிரண்? ஒரு பாடல் காட்சியில் அவர் வளைந்து நெளிந்து உருளும்போது எண் சாண் உடம்பிலும் மின்சாரம் பாய்கிறது. ஆரம்பத்தில் தங்க கூண்டில் அடைப்பட்ட கிளி என்றே நினைக்க வைக்கிறார். போக போக அவரது சுயரூபம் தெரியவரும்போது அடிப்பாவி என்று அதிர வைக்கிறார்.
புதுமுகம் ஹேமந்த் குமார் ஒரு சில காட்சிகளில் நடிக்கிறார். பல காட்சிகளில் அமெச்சூர்.
ஒரு முரட்டு சிங்கம் போலவே இருக்கிறார் ரிஷிராஜ். இவரே இயக்குனர் என்பதால் கடிவாளத்திற்கு வேலையில்லை. வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி இருக்கிறது இவர் போடும் சண்டைகள். பலே! பெசண்ட் நகர் ரவியும், மகநாநதி சங்கரும் இவரை கொல்ல முயன்று தோற்றுப்போய் ஓட்டம் பிடிப்பது சுவாரஸ்யம்.
புது இசையமைப்பாளர் விஜயஷங்கர் இசையில் காதலே காதலே பாடல் பல முறை கேட்க தூண்டும்.
வசூல்- சந்தேகமில்லாத மகசூல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|