First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
லண்டன் செல்ல வைகோவிற்கு விசா மறுப்பு - பாராளுமன்றத்தில் பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டு சேரவாய்ப்பு - தீவிரவாதிகளை அடக்க சிறப்பு தனிப்படை: மன்மோகன்சிங் - தமிழக காவல்துறையை கண்டித்து சென்னையில் அதிமுக மாபெரும் போராட்டம்
விமர்சனம்

நேபாளி
Nepali

அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே?

கூரியர் பையனின் கையில் கூரிய ஆயுதம்! வரிசையாக போட்டுத்தள்ளுகிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நபர்கள். மண்டையை பிய்த்துக் கொள்கிற போலீஸ், கொலைகாரனை கடைசியில் சுற்றி வளைக்க, அதுவரை 3 கோணங்களில் சொல்லப்பட்டு வந்த கதை திரிவேணி சங்கமமாக ஒன்றிணைந்து, அசுபம்! இறந்து போகிற கொலைகாரனை மனைவியோடு சேர்த்து வைக்கிறது ஆவியுலக அற்புதம். அங்கேயும் வில்லன்கள் வந்தால் என்று கேள்வி கேட்பவர்களுக்கு... கதையின் இரண்டாம் பாகம் வரும். ஜாக்கிரதை!

நேபாளி தோற்றத்தில் பரத் செய்யும் கொலைகள் பயங்கரம். அந்த தோற்றத்தில் அவர் இழுத்து இழுத்து பேசி பதட்டமில்லாமல் கொலையை செய்துவிட்டு வெளியேறுகிற வரை, நமது நாடி நரம்புகளில் பிரபுதேவா ஆட்டம். தன்னை போலீஸ் வளைத்துவிட்டது என்பது தெரிந்த பிறகும் நெற்றிப்பொட்டில் ஒரு சொட்டு வேர்வை கூட இல்லாமல் நிதானமாக செயல்பட்டு போலீசை திருப்பி விடும் லாவகம், கைதட்டல்களுக்குரியது.

மற்றொருவர் அலங்காரி நல்லூரின் ஜல்லிக்கட்டு காளை. மீராஜாஸ்மினை வளைத்துப்போட்டு பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணமும் செய்து கொள்கிறார். தனி பங்களாவில் மினி ஷோவே காட்டுகிறார்கள் இருவரும். உள்ளுர் போலீஸ் அதிகாரிக்கு மீராஜாஸ்மின் மேல் ஆசைவர, அங்கே ஆரம்பிக்கிறது கதையின் நுழைவு வாயில்.

சிறைக்குள் கம்பி எண்ணும் இன்னொரு பரத் அப்பாவி. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவரை பனிஷ்மென்ட் செல்லில் போடுகிறார்கள். வாழ்வு குறித்த பயத்தை ஏற்படுத்தும் எபிசோட் அது. அதுவும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை இம்சிக்கும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. யாரய்யா அந்த அப்பாவி நேபாளி? மைதா மாவு மாதிரியே இருக்கிறார். நையபுடைக்கப்பட்ட அடுத்த காட்சியிலேயே பியூட்டி பார்லருக்கு போய் வந்த மாதிரி நிற்கிறார். நல்லவேளையாக சீக்கிரம் செத்துப்போக வைக்கிறார்கள். இவர் சமுக சேவகர் என்று ஒரு காட்சியில் யாரோ டயலாக் விட்டதால் அவர் மேல் பரிதாபம் வருகிறது. இல்லையேல் மண்டை குடைச்சல்தான்.

வழக்கத்திற்கு மாறாக, ஹீரோவின் பழக்கத்திற்கு தோதாக நடித்திருக்கிறார் மீராஜாஸ்மின். பரத்தின் விரல்களை இஷ்டத்திற்கு அனுமதித்திருக்கிறார். ஏ.சி.யையும் மீறி வெப்பம் தலைக்கேறுகிறது மேற்படி காட்சிகளில்.

போலீஸ் அதிகாரி கௌதமாக நடித்திருக்கும் பிரேமிடம் உடுப்புக்கு ஏற்ற மிடுக்கு. கேரக்டர் ரோல்களில் ஒரு ரவுண்டு வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. போலீஸ் உடுப்பை ஒளித்து வைத்தால் அது நிறைவேறலாம். இவருடன் போலீஸ் உடுப்பில் விறைப்பு காட்டும் லக்ஷணா, இடுப்பை காட்டாமல் இருந்ததே ஆச்சர்யம். அடிக்கடி ஜட்டியோடு நிற்கும் அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ம்ம்ப மோசம்.

இரண்டு கைதிகளை ஒரே செல்லில் போட்டு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று போலீஸ் ஒட்டுக்கேட்க, அவர்களோ ஒருவர் முதுகில் மற்றவர் எழுதி பேசிக் கொள்கிற காட்சியில் இயக்குனர் வி.இசட்.துரை தெரிகிறார். மும்பையிலிருந்து வந்து பரத்தை சின்ன கமல் ஹாசனாகவும் மாற்றிக் காட்டிய மேக்கப்மேன் வித்யாதர்பட்டுக்கு ஒரு ஷொட்டு. பலே வாத்தியாரே...

மதியின் ஒளிப்பதிவில் இருட்டும் பகலும் இந்திரஜாலம் நடத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்களில் கனவிலே கனவிலே அற்புதம். பின்னணி இசை மிரட்டல்.

நேபாளிக்கு கத்திதான் ஆயுதம். 3 மணிநேர படத்தில் அவ்வப்போது அதையே நம் மீதும் பிரயோகிப்பதுதான் வேதனை.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter