பூஜை போட்டதோடு சரி, மொத்த படத்தையும் கனல் கண்ணன் கையில் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்கு போயிருப்பாரோ இயக்குனர் லிங்குசாமி?க்ளைமாக்ஸ் தவிர, மீதி ரீல்களில் எல்லாம் கனலின் கோபம்தான் அனல் வீசியிருக்கிறது. விக்ரமின் வலிமையான தோள்களும், ஆர்.டி.ராஜசேகரின் பிரமிப்பூட்டும் கேமிராவும், படத்தை தாங்கி நிற்கின்றன. தன் படங்களில் வழக்கமாக இழையோடும் நகைச்சுவையையும் சண்டைக்கு பலியாக்கிவிட்டு டைட்டிலில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் லிங்கு.
சிறுவயதில் தன் கையில் ஒரு கட்டையை கொடுத்து தன்னையும் தாதாவாக்கிவிட்டு போன பிரகாஷ்ராஜை தேடிப்பிடித்து அவரிடம் சேர்கிறார் விக்ரம். தளபதி(?)யாகிவிட்ட அவர் மீது உண்மையான அன்பு செலுத்தும் பிரகாஷ்ராஜ், இறுதியில் அவர் கையாலேயே சாகிறார். இந்த அற்புதமான க்ளைமாக்சை எல்லையாக நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி நகர்ந்திருக்கிறது கதை.
ஒரே நேரத்தில் ஆயிரம் பேரை அடித்தாலும் நம்புகிற அளவுக்கு உடல் கட்டு வைத்திருக்கிறார் விக்ரம். கண்களில் வெளிப்படும் வெறியும், அலட்சியமும், விக்ரமை ஆங்கில பட ஹீரோக்களுக்கு இணையாக உயர்த்தியிருக்கிறது. எங்கப்பன் சாதாரண ஏட்டுதான் என்று கூறியபடியே போலீஸ் கமிஷனரை வம்புக்கு இழுக்கும் அந்த தைரியத்தில் சினிமாத்தனம் இல்லாததுதான் விசேஷம். பிரகாஷ்ராஜுக்கு வலது கையாகவே இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும் விக்ரம், அவருக்கு கல்யாணம் செய்து வைப்பது கவிதை. விரட்டி விரட்டி காதலிக்கும் த்ரிஷாவை ஆத்திரத்தில் திட்டிவிட்டு பிறகு மறக்க முடியாமல் தவிப்பது அழகு என்றால், பொசுக்கென்று அவர் வீட்டின் முன் போய் நின்று கொண்டு, காதலை வெளிப்படுத்துவது இன்னும் அழகு. எதிர்வீட்டு ஜன்னலில் முளைத்திருக்கும் பூவை காண்பித்து பூ...டா.. என்று உருகுவதெல்லாம் அற்புதம். அந்த டாய்லெட் சண்டையில் பிரமிக்க வைத்திருக்கிறது விக்ரம்-கனல் கண்ணன் கூட்டணி.
அர்த்த ராத்திரியில் கூரையை உடைத்துக் கொண்டு மேலே விழும் ஒரு முகம் தெரியாத முரடனுக்காக காதல் வலையை கண்களில் ஏந்திக் கொண்டு திரிகிறார் த்ரிஷா. அதிகம் வேலை கொடுக்கவில்லை மாமிக்கு. சட்டென்று துணிமணிகளோடு விக்ரமுடன் குடும்பம் நடத்த கிளம்பிவிடும் இவருக்கு கிடைக்கிற முடிவு, பல யுவதிகளுக்கு பாடம்.
தாதாவா? கொஞ்சம் முரட்டுத்தனம் கொண்ட சமூக சேவகரா? குழப்பமான ஆளாக வருகிறார் பிரகாஷ்ராஜ். தவறு நடந்தால் தட்டிக் கேட்கிறார். அதே நேரத்தில் தவறுதான் செய்கிறார் இவரும். எதற்கு தோண்டுவானேன்? வழக்கம்போல் அற்புதமான நடிப்பு. தன் தளபதி குடும்பஸ்தன் ஆவது கண்டு மகிழ்வது யதார்த்தம். அவன் இல்லையென்றால் தன் கூடாரமே கலகலத்துப் போகும் என்று தெரிந்தும், திரும்ப அழைக்காமல் இருப்பது இனிய திகைப்பு.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் எல்லாமே இனிமை.
ஆங்கில படங்களுக்கு இணையாக உருவாக்கியிருக்கிறார்கள். பீமனின் வலிமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் லிங்கு. அதைவிட வலிமையானது தனக்கேயுரிய திரைக்கதை யுக்தி என்பது தெரியாமல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|