இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதை இப்போதும் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். நாளிதழ் டிசைன்களில் பூவிதழ் சிரிப்போடு நிறைந்து நிற்கும் இவ்விருவரது படங்களை பார்த்தவுடனேயே பரவசப்படுகிறார்கள் ரசிகர்கள்.
நவீனகால கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை வாரிக்குவிக்கும் இவர்கள்தான் பெரும்பாலான தியேட்டர்காரர்களுக்கு அட்சய பாத்திரம். சமீபத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம், 100 வது நாளை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கலெக்ஷன் ருசி செய்திருக்கும் மகத்தான சாதனை என்ன தெரியுமா? சிவாஜியின் பழைய படங்களை தூசு தட்டி எடுப்பதுதான். அதை மறுபடியும் டிஜிட்டல் முறையில் நேர்த்தியாக்கி ரிலீஸ் செய்ய துடிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அந்த வரிசையில் பாசமலர் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சிவாஜி-சாவித்ரி நடித்த அந்த படம் இப்போதும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும். 1961 ல் வெளிவந்து சுமார் 51 ஆண்டுகள் கழித்து வெளிவரும் இப்படத்தில் இடம்பெற்ற 'மலர்ந்தும் மலராத' என்ற பாடல் இந்த நூற்றாண்டின் அருமை பெருமைகளில் ஒன்று. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை சிவாஜியின் தீவிர ரசிகரான பூமிநாதன் என்பவரே வெளியிடுகிறார் என்பதுதான் முக்கியமான நியூஸ். |