எண்பதுகளில் தமிழ்சினிமாவையே பூப்பெய்த வைத்தவர் கண்ணழகி சிலுக்கு. கடந்த சில வருடங்களாக அலை ஓய்ந்து போன கடற்கரை போல அமைதியாக கிடந்த அவரது புகழ், எந்த புண்ணியவானால் மீண்டும் ஒளியேற்றப்பட்டதோ, இதோ இந்திய மண்ணில் மறுபடியும் சிலுக்கின் ராஜ்ஜியம்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் வட இந்தியாவை ஒரு கை பார்த்த சிலுக்கு தென்னிந்திய மொழிகளில் மலையாளம், தெலுங்கு என்று மீண்டும் மலரப்போகிறார். நேற்று நடந்த 'கலியுகம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் ஒரு திகைப்பூட்டும் இனிப்பு காத்திருந்தது. அது சிலுக்கின் மயக்கம் வரவழைக்கும் ஒரு ஓவியம். அவரை நினைத்து பாட்டுப் பாடும் இளைஞர்கள் கூட்டம் என்று சிறப்பான பாடல் ஒன்றை திரையிட்டார்கள்.
யுவராஜ் அழகப்பன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிலுக்கின் புகழ்பாட என்ன அவசியம் வந்தது என்பதை முழுசாக புரிந்து கொள்ள இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் படத்தை பற்றி சில தகவல்கள்.
சித்தார்த் விபின், தாஜ்நூர், அருணகிரி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தில் இலக்கியவாதி மனுஷ்யபுத்திரனுக்கும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். மரணகானா பாடும் விஜி என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான சிறப்பும் இப்படத்தில் இருக்கிறது. கலியுகம் படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பவர், சமீபத்தில் தனது காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசன்.
ஹிட்டடிச்சுடுவாங்க போலிருக்கே! |