அன்னக்கொடியும் கொடி வீரனும் படப்பிடிப்பு தேனி பகுதியில் கன கம்பீரமாக நடந்து
கொண்டிருக்கிறது. இந்த நேரம் பார்த்து படத்தின் ஹீரோ அமீரும், இயக்குனர் பாரதிராஜாவும் எதிரெதிர் அணிகளில் நின்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிடிவாத போர் மேகம், கோடம்பாக்கம் ஏரியாவில் அடைமழை பொழிந்து ஆயிரம் சந்தேகங்களை கிளப்புவதுதான் பரபரப்பு.
பெப்ஸி ஊழியர்களின் எல்லை தாண்டிய இம்சைகளை பொறுக்க முடியாத தயாரிப்பாளர்கள் ஒன்று கூடியபோது அதிகம் குமைந்தவர் பாரதிராஜாதான். யாரும் வேணாம். கைக்கு அடக்கமான ஆளுங்களை வச்சு நானே பார்த்துக்குறேன் என்று படப்பிடிப்பை துவங்கிவிட்டார் பாரதிராஜா. தேனிக்கே போய் அவரது படப்பிடிப்பை நிறுத்திவிடலாமா என்று கூட யோசித்தார்களாம் பெப்ஸியில். ஆனால் இந்த நேரத்தில் சாத்வீகப் போக்கை கடைபிடிப்பதே சாலச் சிறந்தது என்ற எண்ணம் ஏற்பட்டதால் அமைதி காத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ அமீர் இன்னும் இரண்டொரு நாளில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று பாரதிராஜா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் சென்னையிலிருந்து அமீர் கிளம்புவதாக இல்லையாம்.
இருவருக்குள்ளும் புகைந்திருக்கும் இந்த பகை, இன்னும் சில தினங்களில் வெடிக்கலாம். படத்தின் ஹீரோவான அமீர் மாற்றப்படலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஸ்கிரீன் பிளே எழுதுகிற டைரக்டர்களின் வாழ்க்கையில் இத்தனை திருப்புமுனைகளா?