இப்படி ஒரு கொடூரமான பிரச்சனை பெப்ஸி அமைப்புக்கு வந்து சேரும் என்பது பலரும் எதிர்பார்த்திருந்திருந்த ஒன்றுதான். அது வந்தே விட்டது நேற்று. படியளக்கும்
பகவான்கள்களை பதம் பார்க்கிற அளவுக்கு பல்லை வளர்த்து வைத்திருகிறது தொழிலாளர் அமைப்பு. இப்படி நாம் சொன்னால் அது தொழிலாளர்களுக்கு எதிரான பூர்ஷ்வா போக்கு என்று யாராவது நினைத்தால் அவர்கள் சினிமா இன்டஸ்ட்ரி பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள்.
ஒரு கல்யாணத்தை நடத்த ஒரு புரோகிதர் இருந்தால் போதும் என்று நினைப்பதுதானே யதார்த்தம்? ஆனால் இந்த புரோகிதர் பெப்ஸியில் மெம்பராக இருந்தால், அந்த கல்யாணத்திற்கு நாற்பது புரோகிதர்கள் வருவார்கள். சம்பளத்தை தனியாகவும், பேட்டா புண்ணாக்கு பருத்திக் கொட்டை என்று தனி பில்லாகவும் போட்டு தாளிப்பபார்கள். உதாரணத்திற்கு ஒரு பிரிவை பற்றிதான் எழுதியிருக்கிறோம். சுமார் 24 பிரிவுகள் இருக்கிறது பெப்ஸியில். யோசித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே... இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் இத்தனை நாட்களும் ஈரத்துணியில் வேர்வையை துடைத்து வந்தார்கள் தயாரிப்பாளர்கள்.
நேற்று நடந்த கூட்டத்தில் அத்தனை தயாரிப்பாளர்களும் பொங்கி வெடிக்க, ஒருவழியாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி பெப்ஸிக்கும் எங்களுக்குமான ஒப்பந்தம் தொடராது. யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என்பதுதான் அந்த தீர்மானத்தின் சுருக்கம்.
அறுபது சதவீத ஊதிய உயர்வு கேட்டு மிரட்டிய பெப்ஸி அமைப்பு இன்று தங்கள் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறது. இவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ?
பின்குறிப்பு- பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கிவிட்டது. பெப்ஸி என்ற அமைப்பினரின் எதிர்ப்பை மீறி, தனக்கு தேவையான தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு மிக அழகாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா.