2006 நவம்பரில் ‘சக்ர முத்து” என்று மலையாளத்தில் வெளிவந்தது. லஷ்மி ராமகிருஷ்ணாவின் முதல் படம். படம் பார்த்த அனைவரையும் புருவத்தை உயரவைத்தார். தன் அழகான, அழுத்தமான நடிப்பால் 2008-ல் ‘பிரிவோம் சந்திப்போம்படத்தின் மூலம் தமிழில் புன்னகை இளவரசியின் அழகான இளமையான அம்மாவாக அறிமுகம். ‘பொய் சொல்லப் போறோம்“படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தர இதோ கடகடவென 33 படங்கள்.
அடுத்து முதல் முறையாக இயக்கத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
‘ஆரோகணம்” மூலமாக இயக்குனராக அவதாரம் கொள்கிறார். AVA Production & Monkey Creative Lab இணைந்து தயாரிக்க ஆரோகணத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதைப்பற்றி லஷ்மி ராமகிருஷ்ணா கூறும்போது, “ஆரோகணம் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கென்றுதான் ஆரம்பித்தோம் ஆனால் அது ஒரு கமர்ஷியல் படமாகவும் வளர்ந்தது . இப்போ ‘ஆரோகணம்” ஒரு ஃபெஸ்டிவலுக்குத் தகுதியான படமாகவும்,தியேட்டரில் அதிர்ந்து , ஆச்சரியப்பட்டு , பரபரப்பாக நகரும் படமாகவும் உருவெடுத்துள்ளது. எத்தனையோ படங்கள் பார்க்கிறோம் , அரைச்ச மாவையே அரைக்காமல் அதிலிருந்து விலகி ரொம்ப புதுசா, கொஞ்சம் நேர்மையா ஒரு படம் வந்தால் மக்கள் விழுந்தடித்து ரசிக்கத்தான் செய்கிறார்கள். இப்போ உதாரணமாக மௌனகுருவை எப்படிக் கொண்டாடினார்களோ அப்படின்னு வச்சுக்கலாம்.
ஒரு சீரியஸான விஷயத்தை சீரியஸாகவே சொல்லணும்னு அவசியம் இல்லை. இதை ரொம்ப ஜாலியா சொல்லலாம். பாஸிட்டிவ்வா அணுகலாம் அப்படித்தான் ஆரோகணத்தை வடிவமைச்சிருக்கேன். எனக்கு பக்கத்தில் மனசுக்கு நெருக்கமா,நடந்த , பார்த்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கேன்.
இந்த படத்தின் கதையை 45 விதமாக திரைக்கதை அமைத்தேன். அதிலிருந்து மிகச் சிறந்த கருவை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றேன். அதுக்கு மிக முக்கிய காரணம் கமல் சார். அவர்தான் எனது ஸ்கிரிப்ட் இன்ஸ்பிரேஷன். அவர் நடத்திய ஸ்கிரிப்ட் ரைட்டிங் ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டதன் விளைவு, ஒரு கதைக் கருவை பல கோணத்தில் அணுக சொல்லிக்கொடுத்தது. அதேபோல், எனது விஷுவல் இன்ஸ்பிரேஷன், மிஸ்கின்சார். அவர் எப்படி ஒரு ஷாட் எடுக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்து வந்ததால் அவரை எனது இயக்கத்தில் பின் தொடர்ந்து இருக்கிறேன். அது படம் பார்க்கும்போது நிச்சயம் தெரியும் . இந்த சமயத்தில் நான் நடித்த இயக்குநர்கள் கௌதம் , மிஷ்கின், அறிவழகன், விஜய் எல்லோரும் என் அன்புக்குரியவர்கள். படப்பிடிப்பில் நான் துளைத்து துளைத்து கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாய் பதிலளித்தவர்கள். அவர்களால்தான் இயக்கத்தை தைரியமாக தொடமுடிந்தது என்னால்.
‘ஆரோகணம்” படத்தை முதல் முதலாக என் சொந்த பேனரில் , சொந்த காசில் தான் ஆரம்பித்தேன். ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி செய்யும் போது இன்னொருத்தர் காசில் விளையாட பயம் எனக்கு. முதல் பாதி முடித்து நான் பார்த்து இது சரியா ?என்று தெரிந்து கொண்டபின் ஒரு டிவிடி யை மெடிமிக்ஸ் நிர்வாகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்ற சொல்லி அவரே கையிலெடுத்துக்கொண்டார். ஒரு தரமான படத்தைக்கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம் . தமிழில் பெண் இயக்குநர்கள் அவ்வளவு வெற்றிபெறவில்லையே என்ற கேள்விக்கு என் பதில் அவர்கள் வெற்றியாளர்கள்தான்.
எல்லோருக்குமே குடும்பத்தின் மீது அக்கறை இருக்கும். நான் குடும்பத்தை விட்டு படப்பிடிப்புக்கு வந்தாலும், என் வீடு எப்படி இருக்கும் ? என்னை சார்ந்தவர்கள் என்ன செய்தார்கள் ? அவர்களே நாம் சரியாக பார்த்துக்கொள்கிறோமா என்ற கவலை இருக்கும். ஆனால் அதையும் மீறி உதவி இயக்குநராக வேலை செய்து, இரவு பகல் நேரம் பாராமல் வீட்டிற்குப் போய், ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து படம் பண்ணி அதை மக்களுக்கு கொண்டு வைத்த என் சக பெண் இயக்குநர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள்தான்.
என்னை பொறுத்தவரை நான் ரொம்ப பெரிய இயக்குநராகனும்னு படம் பண்ணவில்லை. வெற்றிபெறுவது கூட இரண்டாம்பட்சம் என்று வைத்துக்கொள்கிறேன். எனக்கு இருக்கிற அறிவில் இந்த படத்தை பண்ணியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன். ஒரு பேட்டியின் மூலமோ, ரேடியோவின் மூலமோ, தொலைக்காட்சியின் மூலமோ பேசுவது போல் உங்களோடு இந்த சினிமா மூலமா பேசியிருக்கேன். நான் பேசப்போற விஷயம் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கவேண்டாம் கொஞ்சம் யோசிக்கச் செய்தாலே போதும். இது என் கடமை. அதைச் செய்ய இந்த படம் மூலம் முயற்சி செய்திருக்கிறேன். ‘ஆரோகணம்” வந்த பிறகு மனத்திறன் குன்றியோர்களை நாம் வேற கோணத்தில் இனி அணுகுவோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
சம்பத் , ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் , உமாபத்மநாபன் ராஜி விஜயசாரதி ஆகிய பெருந்தலைகளுடன் இரண்டு புதியவர்களை அறிமுகம் செய்கிறேன். விரேஷ் என்ற பையனும் ஜெய் குஹேரனி என்ற பெண்ணையும் அறிமுகம் செய்துள்ளேன். ஜெய் குஹேரனி ( Jai Guheni) பத்மப்பிரியாவின் குளோனிங் என்று சொல்லலாம். அந்தளவிற்கு பிரம்மாதமாக நடித்துள்ளார்.
‘ரௌத்திரம் “ சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய ‘கே” இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்”, ‘ஈரம்” எங்கேயும் எப்போதும் , படங்களின் எடிட்டர் கிஷோர் ஆரோகணத்தை எடிட் செய்கிறார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும் ,நடனத்தை பாபியும் (அஞ்சாதே, மைனா) செய்ய தயாரிப்பு நிர்வாகம் செய்கிறார் பெஞ்சமின்.
AVA Production சார்பாக திரு. அனுப் தயாரிக்க, இணைந்து தயாரிக்கிறது Monkey Creative lab” என்ற நடிகை லஷ்மி ராமகிருஷ்ணாவிடம், “நீங்கள் நடிக்கவில்லையா? “ என்று கேட்டதற்கு, “எல்லாம் கே.எஸ் ரவிக்குமார் சார் பாணிதான்..”என்றார் சிரித்துக்கொண்டே...............................(அதுதாங்க ஒரே ஒரு சீன்ல மட்டும் வந்து போறது )