'ஐ... கழட்ட மாட்டேனே' என்று விக்ரம் அடம் பிடித்துக் கொண்டிருந்தார். 'சார் மறைக்குது' என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள் சேனல் நிருபர்கள். ஷங்கரின் ஐ படத்திற்காக நீண்ட முடி வளர்க்க ஆரம்பித்திருக்கும் விக்ரம், அதை ஒரு தொப்பிக்குள் திணித்துக் கொண்டு வந்திருந்தார். 'நான் இங்க வர்றதே ஷங்கர் சாருக்கு தெரியாது, தெரியுமா...' என்று அவர் புலம்பிய பிறகுதான் கேமிராவை திருகி, முடுக்கி என்னென்னவோ செய்து அவரது குளோஸ் அப்பை நேர் செய்தார்கள் ஒளிப்பதிவாளர்கள்.
இவ்வளவு களேபரமும் நடந்த இடம் 'தாண்டவம்' படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் விழா. ஏராளமான கேள்விகள். பொங்கலுக்குள் கிடக்கும் கறிவேப்பில்லை, மிளகு மாதிரி அதில் காரசார கேள்விகளும் இடம் பெற்றிருந்தது. இது தாண்டவம் மீட். அது சம்பந்தமா மட்டும் கேளுங்க என்று குறுக்கே விழுந்து மன்றாடிக் கொண்டிருந்தார் யூடிவி தனஞ்செயன். (இவரு கொஞ்சம் மைக்கை விட்டுக் கொடுத்தார்னா... அந்த கேப்ல ஆயிரம் கிருபானந்த வாரியார்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது)
சரி... விஷயத்துக்கு வருவோம். இப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்தியிருக்கிறார்கள். அதுவும் 65 நாட்களுக்கு குறையாமல். ஒரு தமிழ் படம் லண்டனில் இவ்வளவு நாட்கள் எடுக்கப்பட்டது தாண்டவத்திற்காகதானாம். ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் அங்க வெயில் இருக்கும். அவ்வளவு நேரமும் களைப்பு இருந்தாலும் நடிச்சு கொடுத்திருக்கார் விக்ரம் என்று ஹீரோவை உயர்த்தி பிடித்தார்கள் தனஞ்செயனும், டைரக்டர் விஜய்யும்.
இதில் கண் தெரியாதவராக நடித்திருக்கிறார் விக்ரம். ஏற்கனவே காசி படத்திலும் அப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறாரே, அப்படியென்றால் இரண்டுக்கும் எப்படி வித்தியாசம் காட்டியிருப்பார்? இப்படியெல்லாம் ஆவல் கிளம்ப, அதையே கேள்வியாக கேட்டுத் தள்ளியது நிருபர் கூட்டம்.
மம்முட்டி 35 படத்துல போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சிருக்கார். ஒண்ணுக்கொன்னு வேறுபாடு இருக்கும். சாமிக்கு பிறகு நான் இன்னொரு போலீஸ் கேரக்டர் பண்ணினா அது வேற மாதிரி அமைஞ்சாதான் பண்ணுவேன். இந்த படத்தில் காசியில நான் பண்ணிய விதம் கொஞ்சம் கூட ரிப்பீட் ஆகாது. என்னால இன்னும் எட்டு விதமா இதே மாதிரி கேரக்டர்ல நடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு என்ற விக்ரம், 'படத்தில் முத்தக்காட்சி இருக்கா?' என்று டைரக்டரை நோக்கிப் பாய்ந்த இன்னொரு கேள்வியை நடுவில் புகுந்து கேட்ச் பிடித்தார்.
சார் இருக்குன்னு சொல்லுங்களேன்... என்று அவர் கெஞ்சியது ச்சும்மா விளையாட்டுக்குதான்(னு தோன்றியது. ஆனால் உண்மை அதுவல்லவாம்)
நாம் விசாரித்தவரை விக்ரமின் கிளிக்கூண்டு காலியாகவே இருப்பதாகவும், பல முறை அதில் சிக்காமல் எமி என்ற கிளி பறந்ததாகவும் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கத்து குறுகுறு வவ்வால்!
பின்குறிப்பு- இப்படத்தில் அனுஷ்கா, லட்சுமிராய், தெலுங்கு ஹீரோ ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ட்ரெய்லர் லாஞ்சுக்கு வரவில்லை. ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் ஆடியோ லாஞ்சுக்குதான் வருவார்களாம். |