|
அதென்னவோ தெரியவில்லை. பேருக்கு பஞ்சம் இருப்பது மாதிரி ஒரே பெயருக்கு வெவ்வேறு ஹீரோயின்கள் அடித்துக் கொள்கிற நிலைமை. கடந்த சில வருடங்களாக கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் ஒரே கார்த்திகாக்கள். இதில் யாருமே தேறவில்லை என்பதுதான் தேம்பி தேம்பி அழ வேண்டிய உண்மை. இந்த லட்சணத்தில் மேலும் இரு நடிகைகள் தங்கள் பெயரை ஒரே மாதிரி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் சிந்து சமவெளி படத்தின் கதாநாயகிக்கு அனகா என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். அதற்கு முன்பு இவரது பெயர் அமலா பால். இதென்ன வெண்ணெய், தயிர், பால் என்று? பேசாம வேற பேரு வச்சுக்கோ என்ற சென்ற இடமெல்லாம் இந்த சின்ன பெண்ணை மிரட்டியது உலகம். அப்புறம்தான் இவர் அனகாவானார்.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே இன்னொரு படத்தின் அறிவிப்பு வந்தது. வர்மம் என்பதுதான் அந்த புதிய படம். பாதிக்கு மேல் வளர்ந்து நிற்கிற இந்த படத்தின் ஹீரோயின் பெயரும் அனகாதானாம். பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளும் ஆண்களை வரிசையாக போட்டுத் தள்ளும் கேரக்டர் இந்த பெண்ணிற்கு. அதாவது ஆக்ஷன் ராணி.
இப்போது இந்த வர்மம் படமும் சிந்து சமவெளி மாதிரி பெரிய அளவில் பேசப்பட்டு இவ்விரு அனகாக்களும் பெரிய ஹீரோயின்களாகிவிட்டால் என்ன செய்வது? (எதுக்கெல்லாம் கவலப்படுறாங்கப்பா...) யாராவது ஒருத்தர் பேரை மாத்தியாவணும் என்கிறார்களாம் சிலர். நான் மாட்டேன் என்று முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள் இருவரும்.
ஆலமரம் ரெடி. எங்கய்யா அந்த வெத்தல பொட்டியும், நசுங்குன சொம்பும்?
|