|
குவார்ட்டர் கட்டிங் படத் தலைப்பாக குறிப்பிடப்படும் 'வ' என்பதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் நமக்கும் வந்தது! நல்லவேளையாக அந்த ரகசியத்தை போட்டு உடைத்தார்கள் நேற்று. இப்படத்தின் டைரக்டர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் கூறிய விளக்கம் கேட்டு யாருக்காவது புல்லரிப்பு ஏற்பட்டால் ஒரு குவார்ட்டரை வாங்கி புல்லரித்த இடத்தில் தடவிக் கொள்வது உத்தமம்!
தமிழ் அகராதிப்படி 'வ' என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தமாம். அதாவது கால் பங்கு. ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர்! சூர்யா தொடங்கி ஜுஜுபி ஹீரோக்கள் வரை திரண்டு வந்திருந்தார்கள் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு. "இந்த படத்தின் ஹீரோ சிவாவை நான்தான் அறிமுகப்படுத்தினேன். அவர் நடிக்கும் படத்திற்கு நான்தான் தொகுப்புரை. என்ன கொடுமை சரவணன் இது" என்றார் முதலில் மைக்கை பிடித்த வெங்கட்பிரபு.
பின்னாலேயே பேச வந்த ஆர்யா, "படத்தின் நாயகி லேகா வாஷிங்டன் எனக்கு நல்ல பிரண்ட். திடீர்னு அவங்க இந்திக்கு போயிட்டாங்க. ஏங்கன்னு கேட்டேன். 'இங்க ரொம்ப மோசம்ங்க. புடவை கட்ட சொல்றாங்க. எந்நேரமும் அழ சொல்றாங்க. எனக்கு மாடர்ன் டிரஸ் போட்ற மாதிரி வாய்ப்பு அங்கதான் கிடைக்குது'ன்னு சொன்னாங்க. அப்புறம் அங்க போயி 'பயங்கரமா' நடிச்சிட்டு இந்த படத்துக்கு வந்திருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே இந்த படத்துல அவங்க காஸ்ட்யூம் அமைஞ்சுருக்கு" என்று பாராட்டினார் லேகாவை.
படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. தமிழ் படம் என்ற தமிழ்ப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து அசந்து போயிருக்கிற ரசிகர்களுக்கு இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை. வழக்கம்போல அந்த இடத்தையை கலகலக்க வைத்தார் சிவா. எனக்கு தெரிஞ்ச ஆன்ட்டி ஒருத்தர் எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும் எனக்காக பிரே பண்ணுவாங்க. எனக்கு நல்ல படங்கள் கிடைக்கணும். அது நல்லா ஓடணும்னு நான் போகும்போதெல்லாம் பல முறை பிரார்த்தனை பண்ணியிருக்காங்க. போன மாசம் திடீர்னு அவங்க வீட்டுக்கு போனேன். வாப்பா தம்பி. பிரே பண்ணலாம்னு மெழுகுவர்த்தியை ஏத்தி வச்சுட்டு கண்ணை மூடுனாங்க. என்னென்னவோ வாய்க்குள் முணுமுணுத்துட்டு படம் பேரு என்னன்னு கேட்டாங்க. நான் அதிர்ச்சியாயிட்டேன். ரொம்ப தயக்கமா 'குவார்ட்டர் கட்டிங்'குன்னு சொன்னேன் என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சிவா சொல்ல, பயங்கர கிளாப்ஸ்.
அந்த தியேட்டரையை இருட்டில் வைத்திருந்தார்கள். மேடைக்கு பேச வரும் நபருக்கு மட்டும் லைட் போகஸ் ஆனது. மிஷ்கினும் வந்திருந்தார். கண்ணை இருட்டாக்கும் அதே கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்தபடி! மனிதர் எப்படிதான் மேடைக்கு போய் சேர்ந்தாரோ? அந்த டபுள் இருட்டுக்கே வெளிச்சம்!
|